Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: தீவிரமடையும் கொரோனா பரவல் - தினம் 9 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு!

கொரோனா முன்னெச்சரிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசிக்கொண்டிருக்கும் மகாராஷ்டிராவில் தினமும் 9 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திண்டாடிக்கொண்டிருக்கிறது. மாநிலத்தில் தற்போது 2.10 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருக்கின்றனர். மொத்தம் 45 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி போட தேர்வு செய்யப்படும் தனியார் மருத்துவமனைகள், 100 படுக்கைகள்கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் மாநில அரசு தெரிவித்திருந்தது.

ராஜேஷ் தோபே
ராஜேஷ் தோபே

ஆனால், இப்போது கொரோனாவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால், விதிகளில் சில திருத்தங்களை மாநில அரசு செய்திருக்கிறது. அதன்படி தனியார் மருத்துவமனைகளில் 20 படுக்கைகள் இருந்தாலே கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில்,``புனே, மும்பை போன்ற நகரங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதால், இதற்கு முன்பு இருந்ததுபோல ஜம்போ கொரோனா சிகிச்சை மையங்களை மீண்டும் திறக்கவிருக்கிறோம். தினமும் மூன்று லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. பொதுமக்கள் தங்களது இல்லத்துக்கு அருகில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக, 20 படுக்கைகள்கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதியிலிருந்து தினமும் ஒன்பது லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். மூன்று மாதங்களுக்குள் கொரோனா அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அதற்கு தக்கபடி தேவையான தடுப்பூசியைக் கொடுக்கும்படி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம்” என்றார்.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! - ஆதித்ய தாக்கரேவுக்கு பாசிட்டிவ்

கொரோனா தொற்று அதிகரித்துவருவது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மிகவும் கவலை தெரிவித்திருக்கிறார். ``பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில் மீண்டும் பொதுமுடக்கம் கொண்டுவர நேரிடும்” என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

தாராவியில் மீண்டும் கொரோனா தீவிரம்

இதற்கிடையே ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாகக் கருதப்படும் தாராவியில், மீண்டும் கொரோனா வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரே நாளில் 40 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தாராவியையொட்டி இருக்கும் மாகிமில் 70 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தாராவி, தாதர், மாகிம் பகுதியை உள்ளடக்கிய ஜி-வடக்கு வார்டில் 168 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு