Published:Updated:

``நாலு பேர் மாறட்டும்னுதான் இந்த போட்டோஷூட் பண்ணேன்!" - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கார்த்திகா

கார்த்திகா
கார்த்திகா

``சமூகத்தில் என்னால் ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சியே. அதனால்தான் அவ்வப்போது இது போன்ற விழிப்புணர்வு மேக்கப் செய்து புகைப்படங்களை பகிர்கிறேன்" என்கிறார் கார்த்திகா.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளின் போதும், வாட்ஸ் அப் சாட்களிலும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சில மாணவிகள் சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்து கொண்டனர். இது பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்தடுத்து வெவ்வேறு பள்ளி மாணவிகளும் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

குழந்தைகளின் சிறு வயதில் இருந்தே குட் டச், பேட் டச் பற்றி கற்றுக்கொடுக்கிறோம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போக்சோ உள்ளிட்ட சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதே எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பகிர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கார்த்திகா, தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது போன்று மேக்கப் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும், சமூகப் பிரச்னைகள் பலவற்றுக்கும், மேக்கப் மூலம் கார்த்திகா விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கார்த்திகாவிடம் பேசினோம்.

கார்த்திகா
கார்த்திகா

``காசு அதிகம் சம்பாதிக்கும் துறையாக மட்டுமே மேக்கப் இண்டஸ்ட்ரி பார்க்கப்படுகிறது. ஆனால், அதைத் தாண்டி மேக்கப் மூலம் நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதனால்தான், பாதிக்கப்பட்டவள் போன்று எனக்கு நானே மேக்கப் போட்டுக் கொண்டேன். அந்தப் படத்தைப் பார்க்கும்போது, பாலியல் வன்கொடுமை எவ்வளவு வலி மிகுந்தது என்று ஒரு சிலருக்கு மனதில் பதிந்தால்கூட, சில குழந்தைகள் காப்பாற்றப்படுவார்கள். மாறுவார்கள். குழந்தைகளின் பயமே, பெரும்பாலான பாலியல் வன்கொடுமைக்கு ஆரம்பமாக இருக்கிறது. குழந்தைகளை பயமுறுத்தி, நினைத்ததை நடத்திக் கொள்பவர்கள்தாம் தலைகுனிய வேண்டியவர்கள். குழந்தைகள் இல்லை. அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான சின்ன முயற்சியே இது.

நான் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டவுடன் நிறைய பெண்கள் அவர்களின் எனக்கு மெசேஜ் செய்தார்கள். சமூகத்தில் என்னால் ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சியே. அதனால்தான் அவ்வப்போது இது போன்ற விழிப்புணர்வு மேக்கப் செய்து புகைப்படங்களை பகிர்கிறேன்" என்றார்.

சில வாரங்களுக்கு முன் ஒரு பெண்ணின் உருவத்தில் பாதி அம்மனாகவும், மற்றொரு பாதி மருத்துவர் போன்றும் மேக்கப் செய்து கார்த்திகா பதிவிட்டிருந்த புகைப்படமும் பலராலும் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு