Published:Updated:

“கரன்ட் இல்லை, கழிப்பறை இல்லை, பட்டா இல்லை...”

யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
யானைகள்

- ‘தேசிய விருது’ பெற்ற பழங்குடிகளின் பரிதாப வாழ்க்கை!

“கரன்ட் இல்லை, கழிப்பறை இல்லை, பட்டா இல்லை...”

- ‘தேசிய விருது’ பெற்ற பழங்குடிகளின் பரிதாப வாழ்க்கை!

Published:Updated:
யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
யானைகள்

இந்தியாவிலேயே யானைகளைச் சிறந்த முறையில் பராமரிப்பதாக மத்திய அரசின் ‘கஜ் கௌரவ் விருது’ பெற்றுள்ளனர் மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களான மலசர் பழங்குடியினர். ஆனால், இந்த மக்களின் வாழ்விடமான ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியிலுள்ள கோழிக்கமுத்தி பழங்குடி கிராமமோ எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி பரிதாபமாகக் காட்சியளிக்கிறது!

மலசர், மலைப்புலையர், காடர் எனப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 185 குடும்பங்கள் இங்கு வசித்துவருகின்றன. கிராமத்திலுள்ள பெரும்பாலானோர் வனத்துறையில் யானைப் பாகன்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் எனப் பல்வேறு பணிகளில் இருந்துவருகின்றனர்.

“கரன்ட் இல்லை, கழிப்பறை இல்லை, பட்டா இல்லை...”

கோழிக்கமுத்தி மக்களிடம் பேசியபோது, “மூணு அடி ஒசரத்துல செவுரு, அங்கங்க மூங்கில், தகரம் வெச்சு அடைச்சு வெச்சுருக்கறதுதான் எங்களோட வீடு. மழை தண்ணி வீட்டுக்குள்ளயே வந்துரும். வெயில் காலத்துல வெக்கை தாங்காது. இதிலும் சில வீடுகளுக்கு மட்டும்தான் பட்டா இருக்கு. எந்த வீட்லயும் கழிப்பறை வசதி இல்லை. புலிகள் காப்பகம்னு சொல்லி, இப்பவரை எங்களுக்கு கரன்ட் வசதி செஞ்சுதர மறுக்கறாங்க. ஆனா, இதே புலிகள் காப்பகத்துல இருக்கிற ‘அம்புலி வனத்துறை விடுதி’க்கு மட்டும் எப்படி கரன்ட் கொடுத்தாங்க?

பக்கத்துலயேதான் யானை கேம்ப் இருக்கு. யானை, புலி, சிறுத்தை எப்ப வேணாலும் ஊருக்கு வரும். ஆத்திர அவசரம்னா ஊருக்குள்ள ஆம்புலன்ஸ்கூட உடனே வர முடியாது. அதனால நாங்களே கார் வாங்கி வெச்சுருக்கோம். அப்பவும், ‘எங்களைக் கேக்காம எப்படி நீங்க கார் வாங்கலாம்?’னு அதிகாரிங்க மிரட்டுறாங்க. கிராமத்துல எங்க பிள்ளைகளுக்கு அங்கன்வாடி மையம்கூட இல்லைங்க.

“கரன்ட் இல்லை, கழிப்பறை இல்லை, பட்டா இல்லை...”

உசுரப் பணயம்வெச்சு, யானை முகாம்ல வேலை பார்க்கறோம் சாமி. கொஞ்ச நாளுக்கு முன்னாடிகூட ஒரு பாகன், யானை அடிச்சுச் செத்துப்போனார். எங்களுக்கான அடிப்படை வசதிகளைச் செஞ்சு தரக் கூடாதா?” என்றனர் ஆதங்கத்துடன்.

பழங்குடி மக்களின் கோரிக்கைகள் குறித்து, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் பேசினோம். “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீலகிரி மாவட்டத்தில், 240 பழங்குடி கிராமங்களின் பிரச்னைகள் தொடர்பாக, மக்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுத்துவருகிறோம். இந்த வரிசையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடி கிராமங்களின் குறைகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

பழங்குடி மக்கள் நியாயமான, அடிப்படைத் தேவைகளைத்தான் கேட்கிறார்கள். வனத்தைக் காக்கும் வனக்குடிகளைக் காப்பது அரசின் கடமை!