பிரீமியம் ஸ்டோரி
இந்த உலகம் ஆக்கபூர்வமான மாற்றங்களை எப்போதும் இருகரம் நீட்டி வரவேற்கவே செய்கிறது.

ஆண்கள் ஆதிக்கம் அதிகமுள்ள துறைகளில் பெண்கள் சாதிப்பதை வரவேற்கும் அதே தருணம், பெண்கள் கோலோச்சும் துறைகளில் சாதிக்கும் ஆண்களையும் வரவேற்க வேண்டும். மகப்பேறு மருத்துவம் என்பது பெண்களுக்காக, பெண்களால், பெண்களின் துறை என்ற நிலை மாறி, ஆண்களும் அந்தத் துறையை விரும்ப ஆரம்பித்திருக்கின்றனர்.

ஆங்கிலப் பேரரசு இந்தியாவை ஆண்டபோது எலிசபெத் மகாராணிக்குப் பிரசவம் பார்த்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆண் மருத்துவர் ஆற்காடு லட்சுமணசுவாமி முதலியார். மகப்பேறு மருத்துவத்தில் ஜாம்பவானான அவர், இதற்காகவே இங்கிலாந்து சென்றிருக்கிறார் என்பது வரலாறு. திறமைக்கு ஆண் பெண் வித்தியாசமில்லை என்று நிரூபிக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஆண் மகப்பேறு மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம்.

என்னை ஆச்சர்யப்படுத்திய அந்த நோயாளி! - அரவிந்த் சந்தோஷ்

பயிற்சி மருத்துவராக இருந்தபோது மகப்பேறு மருத்துவத்துறையில் சில காலம் பணியாற்றினேன். அப்போது ஓர் இளம்பெண் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரிடம் கடைசியாக மாதவிடாய் வந்த தேதியைக்கேட்டு கணக்கிட்டபோது திருமணத்துக்கு முன்பே அவர் உறவு கொண்டிருப்பார் என்று தோன்றியது. ‘நீங்கள் சொல்லும் கணக்குப்படி திருமணத்துக்கு முன்னரே உறவு வைத்துக்கொண்டதைப் போல் இருக்கிறது’ என்றேன். எந்த தயக்கமுமின்றி, ‘ஆமாம்’ என்று ஒப்புக்கொண்டார். உள்நோயாளிகள் பிரிவில் அனுமதித்துவிட்டு ரவுண்ட்ஸ் செல்லும்போது அந்தப் பெண்ணை மீண்டும் பார்த்தபோது, விளக்கமாக அனைத்துப் பிரச்னைகளையும் சொல்லிவிட்டார்.

அரவிந்த் சந்தோஷ்
அரவிந்த் சந்தோஷ்

அப்போதுதான் நோயாளிகளைப் பொறுத்தவரை மருத்துவர் என்பவர் பாலினத்தைக் கடந்தவர் என்பதைப் புரிந்துகொண்டேன். மகப்பேறு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசைக்கு இந்தச் சம்பவம் மேலும் நம்பிக்கையளித்தது.

என் அம்மா மகப்பேறு மருத்துவர் என்றபோதும், நான் அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறேன் என்றபோது சற்று தயங்கினார். என் பேட்ச்சில் 55 பெண்களுக்கு மத்தியில் ஒரே ஆண் மாணவன், நான் மட்டும்தான். என்னைப் பார்க்கும் சக ஆண் மாணவர்கள் பலர், தங்களுக்கும் மகப்பேறு மருத்துவம்தான் விருப்பம். ஆனால், பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் அதைத் தவறவிட்டுவிட்டோம் என்று வருத்தமாகக் கூறுவார்கள். மனிதகுலத்துக்கே நம்பிக்கையளிக்கக் கூடிய, ஆராய்ச்சி வாய்ப்புகள் அதிகமுள்ள மகப்பேறு மருத்துவத்துறையின் மீது எனக்குள்ள தீராக் காதல் தினம் தினம் மலர்ந்துகொண்டே இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனைவியையும் மகப்பேறு துறையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்! - அப்துல் பாஸித்

மகப்பேறு மருத்துவம் படிக்கப் போகிறேன் என்று வீட்டில் சொன்ன போது என் அப்பா சற்று தயங்கினார். `நோயாளிகள் சந்தோஷமாக மருத்துவமனைக்கு வருவது பிரசவத்துக்காகத்தான். உடல்நலக் குறைவு ஏற்பட்டு நிறைய நோயாளிகள் வர வேண்டும் என்று மருத்துவர்கள் விரும்பாத துறையும் இதுதான்’ என்று அவருக்கு எடுத்துக்கூறிய பிறகு புரிந்துகொண்டார்.

 அப்துல் பாஸித்
அப்துல் பாஸித்

நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தபோது என் துறைத் தலைவர் ஓர் ஆண். அது எனக்குக் கூடுதல் பலமாக இருந்தது. செயற்கை கருத்தரிப்பு துறையில் என்னுடைய முதல் நோயாளியை எப்போதும் மறக்க முடியாது. அந்தத் தம்பதிக்கு பல ஆண்டுகளாகக் குழந்தையில்லை. வேறு மருத்துவர் மூலம் கேள்விப்பட்டு பெண்ணின் கணவர்தான் முதலில் என்னைச் சந்திக்க வந்தார். என்னுடைய அணுகுமுறை பிடித்துப்போனதால் மனைவியையும் சிகிச்சைக்கு அழைத்து வந்தார். அழகிய குழந்தையுடன் இருவரும் வீடு திரும்பினர்.

அதேநேரம் ஆணிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பாதவர்களையும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஒருமுறை இரவுப் பணியில் இருந்தேன். கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி வந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் பிரசவம் பார்ப்பதற்குத் தயாரானபோது என்னுடைய ஜூனியரிடம், `ஆண் மருத்துவர் தனக்குப் பிரசவம் பார்க்கக் கூடாது. நான் வழக்கமாக கன்சல்ட் செய்யும் பெண் மருத்துவர்தான் பார்க்க வேண்டும்’ என்று கூறிவிட்டார்.

உடனே அந்த மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்தோம். அவர் நோயாளியிடம் பேசினார். அப்போது, ‘எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலே நான் அவரிடம்தான் சிகிச்சை எடுப்பேன்’ என்று கூறியிருக்கிறார். அதன்பிறகுதான் அவர் சம்மதித்தார். பிரசவம் முடிந்த மறுநாள் ரவுண்ட்ஸ் செல்லும்போது அந்தப் பெண், ‘டாக்டர், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களைப் பற்றி தெரியாமல் பேசிவிட்டேன்’ என்றார்.

என் மனைவியையும் மகப்பேறு மருத்துவம் தேர்ந்தெடுக்கச் சொன்னேன். ‘நீங்கள் இல்லையென்றால் நான் இந்த அற்புதமான துறையைத் தவறவிட்டிருப்பேன்’ என்கிறார் என் மனைவி அடிக்கடி.

மகளிர் விடுதியில்தான் தங்கிப் படித்தேன்! - ராகுல் ஆனந்த்

என் அம்மா 48 ஆண் மருத்துவர்கள் நடுவில் ஒரு பெண்ணாக அறுவை சிகிச்சை துறையில் படித்தார். ஆண்கள் ஆதிக்கமுள்ள துறையில் ஒரே நபராக ஜொலித்தார். எனக்கு மகப்பேறு மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தபோது, என் அம்மாவைப் போலவே பெண்கள் ஆதிக்கமுள்ள துறையில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்லூரியின் கீழ் செயல்படும் ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தங்கிப் படிக்க வேண்டும். அங்கு சென்றபோது நான் மட்டுமே ஒரே ஆண் மாணவர். ஆண்களுக்கென்று தனி விடுதிகூட இல்லை. பெண்கள் விடுதியில்தான் ஓர் அறையில் தங்கியிருந்தேன். சாப்பிடும் மெஸ், குளியலறை, கழிவறை என அனைத்தையும் பொதுவாகத்தான் பயன்படுத்த வேண்டும்.

 ராகுல் ஆனந்த்
ராகுல் ஆனந்த்

படித்து முடித்து பணியைத் தொடங்கியபோது நகரத்திலும் கிராமத்திலும் நோயாளிகள் என்னிடம் வருவதற்குத் தயங்கியதே இல்லை. பல நேரங்களில் நான் பிரசவ வார்டுக்கு ரவுண்ட்ஸ் போகும்போது அங்கு நோயாளிகளுடன் வந்திருக்கும் வயதான உறவினர்கள் இருப்பார்கள். சிலர் என்னைக் கூப்பிட்டு, ‘தம்பி, அது பிரசவ வார்டு... அங்கெல்லாம் ஆம்பிளைங்க போகக் கூடாது’ என்பார்கள். நான் சிரித்துக் கொண்டே ‘ஆமாம்மா தெரியும். நான்தான் பிரசவம் பார்த்த டாக்டர். ரவுண்ட்ஸ் வந்திருக்கேன்’ என்பேன்.

அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் நிற்பார்கள். இப்போது சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறேன். ஒரு நாளைக்குக் குறைந்தது 30 பிரசவங்கள் பார்க்கிறேன். இன்றைய நிலையில் மருத்துவர்களில் ஆண் பெண் பேதமில்லை என்ற புரிந்துணர்வு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

மாற்றங்களை வரவேற்கிறோம்! - கமலா செல்வராஜ்

நான் 1980-களில் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தபோது ஆண்களே கிடையாது. ஆனால், அந்தக் காலத்திலேயே இலங்கையில் பிரசவம் பார்ப்பதற்கு ஆண் மருத்துவர்களையே நாடினர். மேலை நாடுகளிலும் அந்த நிலை இருந்தது. இந்தியாவில்தான் மக்கள் மத்தியில் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. இப்போது அந்த நிலை சற்று மாறியிருக்கிறது. ஆண் மருத்துவர்களும் மகப்பேறு மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுப்பது வரவேற்க வேண்டிய மாற்றம்தான்.

இவர்கள் ‘தாயுமானவன்’கள்!

பிரசவம் பார்ப்பது மட்டும்தான் இந்தத் துறை என்பதில்லை. செயற்கை கருத்தரிப்பு, பேராசிரியர் பணி எனப் பல்வேறு வாய்ப்புகளும் உள்ளன. `நீங்கள் சிகிச்சையளிக்கும் அனைத்துப் பெண்களையும் உங்கள் தாயாகப் பாருங்கள். புதிய உயிர்களை பூமிக்கு அறிமுகப்படுத்தும் இந்த மகத்துவமான பணியை அர்ப்பணிப்போடு செய்யுங்கள்' என்பதுதான் இன்றைய இளம் மருத்துவர்களுக்கு நான் கூற விரும்பும் அறிவுரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு