Published:Updated:

சிற்பக்கலைத் தூண்... எங்களை அவமானப்படுத்திவிட்டது அரசு... கொதிக்கும் மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள்!

சிற்பக்கலைத் தூண்
பிரீமியம் ஸ்டோரி
சிற்பக்கலைத் தூண்

இந்தத் தூணுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமாகப் பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஃபைபர் மெட்டீரியலில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தூண் சில வருடங்களுக்குக்கூட தாங்காது.

சிற்பக்கலைத் தூண்... எங்களை அவமானப்படுத்திவிட்டது அரசு... கொதிக்கும் மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள்!

இந்தத் தூணுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமாகப் பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஃபைபர் மெட்டீரியலில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தூண் சில வருடங்களுக்குக்கூட தாங்காது.

Published:Updated:
சிற்பக்கலைத் தூண்
பிரீமியம் ஸ்டோரி
சிற்பக்கலைத் தூண்

சிற்பக்கலையில் உலகப் புகழ்பெற்ற இடமான மாமல்லபுரத்தில், சமீபத்தில் அரசு சார்பில் சிற்பக்கலைத் தூண் அமைத்து திறந்துவைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கெதிராக மாமல்லபுரம் சிற்பிகள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

ஒலிம்பியாட்டும்... சுற்றுலா கிராமமும்!

சென்னை அருகே மாமல்லபுரத்தில், ‘44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி’ நடந்துவருகிறது. உலகப் புகழ்பெற்ற இந்தப் போட்டிக்காக 180 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் வந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக, சென்னை விமான நிலையம் தொடங்கி மாமல்லபுரம் வரை சாலைகளின் இருபுறங்களையும் அழகுபடுத்தும் பணி 51 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றது.

இன்னொரு பக்கம் மத்திய அரசின் அபிவிருத்தி ஆணையம், 5.61 கோடி ரூபாய் செலவில் மாமல்லபுரத்தில், ‘கைவினை சுற்றுலா கிராமம்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. மாமல்லபுரத்திலுள்ள கைவினை கலைஞர்கள் நலனுக்காகவும், சுற்றுலா மேம்பாட்டுக்காகவும் இந்தத் திட்டம் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது. முதற்கட்டமாக, 1.8 கோடி ரூபாய் செலவில், பணிகள் நடந்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் மாமல்லபுரம் நுழைவாயிலில் ‘ஸ்தூபி’ ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

சிற்பக்கலைத் தூண்... எங்களை அவமானப்படுத்திவிட்டது அரசு... கொதிக்கும் மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள்!

45 அடி உயரத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இந்தத் தூண் நான்கு நிலைகளைக் கொண்டிருக்கிறது. முதல் நிலையில் யானைகளும், இரண்டாவது நிலையில் மயில்களும், மூன்றாவது நிலையில் யானைகளும், யாளிகளும், நான்காவது நிலையில் நான்கு சிங்கங்களும் இடம்பெற்றுள்ளன. ‘சிற்பக்கலைத் தூண்’ என்று அழைக்கப்படும் இந்த ஸ்தூபியை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 27-ம் தேதி திறந்துவைத்தார்.

அவமானப்படுத்திவிட்டது அரசு!

உலக கலாசார குழுவால், `உலக கற்சிற்ப நகரம்’ என புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற நகரம் மாமல்லபுரம். ``இந்தத் தூணின் சிற்பங்கள் அனைத்தும் ‘ஃபைபர்’ மெட்டீரியலில் செய்யப்பட்டிருக் கின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பி களைக்கொண்டு செய்யாமல் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு செய்யப்பட்டிருக்கின்றன’’ என அந்தப் பகுதி சிற்பிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

தா.மோ.அன்பரசன்
தா.மோ.அன்பரசன்

இது குறித்து மாமல்லபுரம் சிற்பிகளில் ஒருவரான இளையராஜா நம்மிடம், ``பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்குக்கூட சிற்பங்கள் செய்ய மாமல்லபுரத்திலிருந்துதான் ஆட்கள் செல்வார்கள். ஆனால், மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிற்பக்கலைத் தூண் பணிகளைச் செய்தது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். `சிற்பங்களின் தலைநகரம்’ என்று அனைவராலும் பாராட்டப்படும் மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தூண், முழுக்க ஃபைபர் மெட்டீரியலில் செய்யப்பட்டிருக்கிறது. இது மாமல்லபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த சிற்பங்களையும், திறமையுள்ள சிற்பிகளையும் அவமானப்படுத்தும் செயல். பூம்புகார் நிறுவனம் திட்டமிட்டே மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பிகளைப் புறக்கணித்திருக்கிறது, அவமானப்படுத்திவிட்டது. அவர்களுக்கு யார் கமிஷன் அதிகம் தருகிறார்களோ, அவர்களுக்கே டெண்டர்களைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தூணுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமாகப் பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஃபைபர் மெட்டீரியலில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தூண் சில வருடங்களுக்குக்கூட தாங்காது. இப்படி ஒரு தூண் வைப்பது குறித்து இங்குள்ள சிற்பிகளிடம் பேசியிருந்தால், எங்கள் ஊருக்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும்விதமாகச் சிறப்புமிக்க சிற்பத்தைச் செய்து கொடுத்திருப்போம். பெருமைமிக்க மாமல்லபுரத்துக்கு இப்படி ஓர் அவமானம் தேவைதானா என்பதை இந்த அரசுதான் முடிவுசெய்ய வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

இளையராஜா
இளையராஜா

அ.தி.மு.க ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்...

இந்த விவகாரம் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் பேசினோம். ``இந்தத் தூண் அமைக்கும் டெண்டர் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் விடப்பட்டது. டெண்டர் எடுத்தவர்கள் அந்தப் பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் அந்தப் பணியை விரைவுபடுத்தியிருந்தோம். அவர்கள் செய்த தவற்றுக்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்... மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் அனைவருமே எனக்கு அவ்வளவு நெருக்கமானவர்கள். அவர்களின் முன்னேற்றத்துக்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் இருப்பிடங்களை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கைவினை, சிற்பக் கலைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு செய்துவருகிறது. எப்போதுமே அவர்களின் முன்னேற்றத்தில் எங்களுக்கு அதீத அக்கறை உண்டு” என்றார்.

ஆயிரம் விளக்கம் சொன்னாலும், ‘சிற்பக்கலைத் தூண்’ என்ற பெயரில் இவ்வளவு பொருட்செலவில் சினிமா செட்போல ‘ஃபைபரில்’ தூண் வைத்ததை ஏற்க முடியாது... தவறு சரிசெய்யப்பட வேண்டும்!