Published:Updated:

காய்கறி வாங்க 30 ரூபாய் கேட்ட மனைவி! - தலாக் சொல்லி விவாகரத்து கொடுத்த கணவர்

சத்யா கோபாலன்

காய்கறி வாங்குவதற்காக கணவரிடம் பணம் கேட்ட மனைவியை சரமாரியாக தாக்கி தலாக் கூறியுள்ளார் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு கணவர்.

முத்தலாக்
முத்தலாக்

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தட்ரி என்ற பகுதியில் வசித்துவருபவர், 30 வயதான ஸைனப் என்ற பெண். இவரது கணவர் சபீர் (35). இவர்கள், தங்கள் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகின்றனர்.

மனைவியை தாக்கிய கணவர்
மனைவியை தாக்கிய கணவர்

கணவரிடம் காய்கறி வாங்குவதற்காக 30 ரூபாய் பணம் கேட்டதால் கடுப்பாகி, தனக்கு தலாக் கூறிவிட்டார் என மனைவி ஸைனப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள ஸைனப், “ கடந்த சனிக்கிழமை மாலை என் கணவர் சபீர், கணவரின் சகோதர்கள் ஸகிர், இட்ரிஷ் மற்றும் கணவரின் சகோதரி சமா, என் மாமியார் நஜ்ஜோ ஆகியோர் இணைந்து, என்னைக் கடுமையாகத் தாக்கினர். எனக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தனர். பின்னர், என் கணவர் தலாக் சொல்லி, முகத்தில் துப்பி, என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்” என்று கூறியுள்ளார்.

“ஸைனபின், கணவர் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நாங்கள் உள்ளோம். தான் தாக்கப்பட்ட போது, உதவிக்காக ஸைனப் எங்களை அழைத்தாள். நாங்கள், அவளின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, மொத்த குடும்பமும் என் சகோதரியைத் தாக்கியது. பின்னர், நாங்கள் அவளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கிருந்து நேரடியாக காவல் நிலையம் சென்று, ஸைனப்பை தாக்கியவர்கள்மீது புகார் அளித்தோம்” என்று ஸைனப்பின் சகோதரர் ரஷித் தெரிவித்துள்ளார்.

கைது
கைது

ஸைனப்பை தாக்கியதால், அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர்மீது தட்ரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடுமைப்படுத்துவது, அவமதிப்பு, குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “ நாங்கள் சபீரைக் கைதுசெய்து, தட்ரி நகர நீதிமன்றத்தில் ஆஜர் செய்தோம். ஆனால், அவர் ஒரே நாளில் ஜாமீன் பெற்றுவிட்டார். சபீரைத் தவிர மற்ற குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்” என்று காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.