Election bannerElection banner
Published:Updated:

``நான் ராணுவ கான்ட்ராக்டர்” புதுக்கோட்டையில் சிக்கிய போலி ஆசாமி!

தினேஷ் குமார்
தினேஷ் குமார்

ஏப்ரல் 1-ம் தேதி, நள்ளிரவு நேரத்தில், புதுக்கோட்டை - திருச்சி பைபாஸ் சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலையுயர்ந்த ஜாக்குவார் கார் ஒன்று வருவதைப் பார்த்து ஓரங்கட்டச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ரெய்டு! சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது வருமான வரித்துறை. அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்திவருகிறார்கள் வருமான வரித்துறையினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணனின் உதவியாளர் வீட்டில் ரெய்டு நடத்தி ஐம்பது லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

இந்தநிலையில், ஏப்ரல் 1-ம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில் புதுக்கோட்டை - திருச்சி பைபாஸ் சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலையுயர்ந்த ஜாக்குவார் கார் ஒன்று வருவதைப் பார்த்து ஒரங்கட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்த காரின் முன்பகுதியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் போர்டு இருந்தது. காரின் உள்ளே இருந்த நபர், தன்னை ஆராய்ச்சியாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். அங்கிருந்த வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ஆச்சர்யம்.

போலி அடையாள அட்டை
போலி அடையாள அட்டை

அந்த நபரிடம், `தேர்தல் நேரத்து செக்கப். கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று அன்பாகப் பேசியிருக்கிறார்கள். அடையாள அட்டையைக் கேட்டபோது, அவர் அதை எடுத்துவரவில்லை என்று சொல்லியிருக்கிறார். காரை செக் செய்ய வேண்டும் என்று சொல்லி ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார்கள் அதிகாரிகள். `கான்ஃபிடன்ஷியல்’ என்கிற வார்த்தையுடன் சில ஃபைல்கள் இருப்பதைப் பார்த்து மிரண்டுபோயிருக்கிறார்கள். அவை அனைத்தும் டூப்ளிகேட் என்பதை உடனே கண்டுபிடித்துவிட்டனர். கூடவே, காலி ஸ்டாம்ப் பேப்பர்களுடன் ஐ.டி கார்டு இருந்ததையும் கவனித்து சந்தேகப்பட்டிருக்கிறார்கள்.

காரில் ரொக்கமாக சுமார் 3 லட்சம் ரூபாய் இருந்ததாம். உடனே, மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இந்த நபரை பற்றிச் சொல்ல, அந்த நபரே போனை வாங்கிப் பேசியிருக்கிறார். `நான் ராணுவ கான்ட்ராக்டர்’ என்று முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லியிருக்கிறார். சந்தேகம் மேலும் வலுவடைந்தது. அந்த நபரிடம் நைசாகப் பேசி, புதுக்கோட்டை டவுன் டி.எஸ்.பி அலுவலகத்துக்கு அழைத்துப்போய் ஸ்பெஷலாக விசாரிக்க, உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

அந்த நபரின் பெயர் - தினேஷ் குமார் தாமோதரன். வாலஜாபேட்டையைச் சேர்ந்தவர். அவரிடம் துருவித் துருவி விசாரித்தபோது,``ரைஸ் புல்லிங் முறையில் மோசடி செய்து கடந்த ஏழு வருடங்களாக பணம் சம்பாதித்துவருகிறேன். அடையாள அட்டை தேவைப்பட்டால் இணையத்திலிருந்து போலியாக டௌன்லோடு செய்து போலியாகத் தயார் செய்வேன். நீங்கள் பிடித்த பணம் அனைத்தும் இந்த ஏரியாவைச் சேர்ந்தவர்களை ஏமாற்றிச் சேர்த்தது. மற்றபடி, நான் ராணுவ ஆராய்ச்சியாளர் இல்லை’’ என்று புலம்பியிருக்கிறார்.

ஜாகுவார் கார்
ஜாகுவார் கார்

அதையடுத்து, அந்த நபரையும், கார் டிரைவரையும் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். அவருக்கு ஹோட்டலில் ரூம் புக் செய்து கொடுத்தது யார், செல்போனிலுள்ள தொடர்பு எண்களில் வி.ஐ.பி-க்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் சோதனை நடந்துவருகிறது. அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ (தேசிய விசாரணை ஏஜென்சி) அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு