
எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவரு எங்க மாமா. சமூக சேவைக்காகவே தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சவர்.
கடந்த 2.1.2021 தேதியிட்ட ஜூ.வி-யில் `தலைநகர் சென்னையின் லட்சணம் இதுதான்!’ என்ற தலைப்பில் தலைநகரின் படுமோசமான சாலைகளின் படங்களுடன் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான அடுத்த தினமே, சென்னையில் படுபயங்கரமான சாலைப் பள்ளத்தால் இன்னோர் உயிரும் பலியாகியிருப்பதுதான் வேதனை!

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த 58 வயதான பாலசுப்ரமணியன், கடந்த 25 வருடங்களாக வீடில்லாமல் சாலையோரம் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி உள்ளிட்ட விஷயங்களுக்காகப் போராடிவந்தார். இவருக்கு, கற்பகம் என்ற மனைவியும், யுவயோக (22) என்ற மகளும், நிஜந்தன் விஷ்ணுலிங்கம் (19) என்ற மகனும் இருக்கிறார்கள். டிசம்பர் 30-ம் தேதி மாலை 6 மணியளவில் வீட்டுக்கு போன் செய்தவர், “மழை பெய்யுது... கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நீண்ட நேரம் கழித்தும் அவர் வீட்டுக்கு வராத நிலையில், இரவு 10:30 மணிக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து குடும்பத்தினருக்கு அழைப்பு வந்துள்ளது. பதறியடித்துக்கொண்டு காவல் நிலையம் சென்றவர்களை, ‘மயிலாப்பூர் சிவசாமி சாலை சந்திப்புக்குச் செல்லுங்கள்’ என்று அனுப்பியுள்ளார்கள். அங்கு சென்றவர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

“என்ன நடந்தது?” என்று பாலசுப்ரமணியனின் உறவினர் பாலாஜியிடம் கேட்டோம். ‘‘சிவசாமி சாலை சந்திப்புக்குப் போனப்ப, அந்தச் சாலை முழுக்கப் பள்ளமும் தண்ணியுமா படுமோசமா இருந்துச்சு. அங்கே, மாமா போன வண்டியோட ஹேண்டில் பார் மட்டும் தண்ணிக்கு வெளியே தெரிஞ்சதைப் பார்த்துப் பதறிட்டேன். பக்கத்துலேயே ஆம்புலன்ஸ் ஒண்ணும் இருந்துச்சு. கிட்ட போய் பார்த்தப்ப, மாமாவோட உயிரில்லாத உடம்பு இருந்துச்சு. தண்ணியில மூழ்கி இறந்துட்டதா சொன்னாங்க. படுமோசமா இருந்த சாலையில, இடுப்பளவு தண்ணி தேங்கி இருந்ததால மாமா தடுமாறி விழுந்திருக்கார். அவர் மேலேயே பைக்கும் விழுந்ததுல, எழுந்திருக்க முடியாம மூச்சுத்திணறி இறந்திருக்கார். சாலை நல்லா இருந்திருந்தா மாமா இறந்திருக்க மாட்டார்.
எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவரு எங்க மாமா. சமூக சேவைக்காகவே தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சவர். கடைசியில அரசோட அலட்சியத்தால, இப்படி அநியாயமா இறந்துட்டாரே... வீட்டு வாடகை முதல் பிள்ளைங்க படிப்பு வரைக்கும் மொத்தக் குடும்பமும் அவரை மட்டுமே நம்பியிருந்துச்சு. இன்னைக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம எல்லாரும் தவிக்குறாங்க’’ என்றார் கண்ணீருடன்.
சென்னை சாலைகளின் படுமோசமான நிலை குறித்தும், சாலைப் பள்ளங்களில் விழுந்து பலியானவர் குறித்தும் நாம் தொடர்ந்து எழுதிவருகிறோம். அரசின் அலட்சியத்தால், இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோமோ?