Published:Updated:

நாகையில் சாலையோரத்தில் தவித்த மனநோயாளி! -செவிலியர் மகனை மீட்ட மனிதநேயம்

செவிலியர்
செவிலியர்

உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜிடம் பேசியபோது, ``இதுவும் நம் கடமைகளில் ஒன்றுதானே" என்றதோடு முடித்துக்கொண்டார்.

நாகை மாவட்டம் வடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ராணி, வழக்கமான மக்கள் பணிக்காக நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, நாகை புத்தூர் அருகே ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார். அவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மகப்பேறு உதவியாளராக தம்முடன் பணியாற்றி மறைந்த ராஜம்மாவின் மகன் சீதாராமன் என்பதைத் தெரிந்துகொண்டவுடன் பதறியிருக்கிறார்.

செவிலியர்
செவிலியர்

`முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செவிலியர் பணியைச் செய்த ராஜம்மாவின் மகனுக்கா இந்தக் கதி?' என்றெண்ணி விசாரித்துள்ளார். அவருக்கு உறவினர் குறித்து விவரம் ஏதும் சொல்லத் தெரியவில்லை. எனவே, அவரை அழைத்துச் சென்று தேவையான உதவிகளைச் செய்ததுடன், அவரின் தாயார் இறந்துவிட்டதாலும், நெருங்கிய உறவினர் யாரென தெரியாததாலும் அவரை உரிய இடத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளார்.

மறுநாள் காலை நாகப்பட்டினம், வெளிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜை தொடர்புகொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சீதாராமனை உறவினரிடமோ அல்லது பாதுகாப்பகத்திலோ சேர்த்திட உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இதரப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்நாடு அரசு மறுவாழ்வுத்துறை அனுமதியுடன் செயல்பட்டுவரும் கார்டன் மனநல மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் பேசினார் விவேக் ரவி ராஜ். இதையடுத்து, சீதாராமனை அங்கு சேர்க்க ஏற்பாடு செய்தார். அன்று மாலையே வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து சீதாராமனை தொண்டு நிறுவன பொறுப்பு நிர்வாகி ஜெயந்தியிடம் ஒப்படைத்தார்.

விவேக் ரவி ராஜ்
விவேக் ரவி ராஜ்

இதுபற்றி உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜிடம் பேசியபோது, `இதுவும் நம் கடமைகளில் ஒன்றுதானே...’ என்றதோடு முடித்துக் கொண்டார். சேனை கட்டிய குதிரையாக தன் வழியில் மட்டுமே செல்லாமல், அக்கம் பக்கம் பார்த்து, துன்பப்படுவோரின் துயர் துடைக்க உதவிய ராணி, காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவி ராஜ் ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

அடுத்த கட்டுரைக்கு