Published:Updated:

``இளைஞனின் கவனச் சிதறலால் அநாதையாக நிற்கும் சிறுமி!’’ - வாசகரின் துயர்மிகு பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

என் வாழ்வில் நான் கடந்து வந்த துயர் மிகு ஒரு சம்பவத்தை இங்கே பகிர்கிறேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் வசித்து வந்த பகுதியில் பாட்டி ஒருவர் தன் பேத்தியோடு வாழ்ந்து வந்தார். அந்தச் சிறுமியின் தந்தை தன் மனைவியை விட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். கணவனால் ஏமாற்றப்பட்ட வருத்தத்தோடு உடல் நலக்குறைவும் ஏற்பட்டு சில வருடங்களில் அந்தப் பெண்ணும் தன் 9 வயது மகளைத் தவிக்க விட்டுவிட்டு இறந்துவிட்டார். அந்தச் சிறுமியை அவளின் பாட்டிதான் வளர்த்து வந்தார். அந்தப் பாட்டிக்கு வயது 65 வயது கடந்திருக்கும். தன்னந்தனியாகச் சின்னச் சின்ன வியாபாரம் செய்து தன் பேத்தியைப் பார்த்துக் கொண்டார். பேத்தியைக் கரை சேர்க்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே தான் 24 மணி நேரமும் இருப்பார்.

Representational Image
Representational Image

ஒரு நாள் தன் பேத்திக்காக இட்லி வாங்க கடைத் தெருவுக்குச் சென்றார். இட்லி வாங்கிக்கொண்டு திரும்புகையில், அதே கடைத் தெருவில் வேகமாக வந்த பைக் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த பாட்டி மீது மோதி, பாட்டி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அங்கிருந்தவர்கள் அந்த இளைஞனைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். போலீஸுக்கும் தகவல் சொல்லப்பட்டது. தன் தோழியுடன் பின்னால் திரும்பி பேசிக்கொண்டே வந்திருக்கிறான் அந்த இளைஞன். சாலையில் இருந்த பள்ளத்தைக் கவனிக்காமல் வண்டியை பள்ளத்தில் விட நிலைத்தடுமாறி வண்டி பாட்டி மீது மோதியுள்ளது.

பாட்டியின் கெட்ட நேரம் சாலையோரத்தில் இருந்த கல்லில் அவர் தலை மோதிவிட்டது. அவர் வாங்கி வந்த இட்லி கவர் சிதறிக் கிடந்ததைப் பார்த்த இட்லி கடைக்காரர், ``அச்சோ இந்தப் பாட்டி கொஞ்சம் முன்னாடிதான் என் கடையில இட்லி வாங்கிட்டு போனார். தன் பேத்திக்கு தக்காளி சட்னி பிடிக்கும்னு சொல்லி என்கிட்ட கேட்டார். நான் இல்லை பாட்டி அடுத்தமுறை வாங்க தரேன்னு சொல்லி அனுப்பினேன்’’ என்று கூறி தலையில் அடித்துக்கொண்டு அழுதார். போலீஸ் அந்த இளைஞனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தது. இறந்து போனவர் வயதானவர்தானே என்று அந்த இளைஞனின் வீட்டில் வாதாடி அவன் மீது வழக்கு பதியவிடாமல் பணம் கொடுத்து சரிக்கட்டிவிட்டதாக தகவல்.

Representational Image
Representational Image

இதனிடையே வெகு நேரமாகியும் பாட்டி வரவில்லையென பசியுடன் சிறுமி வீட்டின் முன் காத்திருக்க ஆம்புலன்ஸில் பாட்டியின் சடலம் வந்திறங்கியது. அக்கம் பக்கத்தினர் உதவி செய்து பாட்டியின் உடலை அடக்கம் செய்தனர். நடப்பது என்னவென்றே தெரியாத அந்தச் சிறுமி ஒரு இளைஞனின் கவனக் குறைவால் தான் அநாதையாக நிற்பதை உணராமல் அக்கம் பக்கத்து வீட்டில் ``பசிக்குது’’ என்று யாசகம் கேட்டு நிற்கிறாள். தன் மகன் மீது வழக்கு பதிவு கூடாது என்பதற்காக அந்த வசதியான பெற்றோர் கொடுத்த பணமும் சிறுமிக்கு வந்து சேர்ந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அந்தச் சிறுமி தற்போது உறவினர் வீட்டில் வளர்கிறாள் என்று மட்டும் கேள்விப்பட்டேன். வாகனம் ஓட்டும் இளைஞர்களுக்கு நான் வைக்கும் கனிவான வேண்டுகோள்... உங்கள் தோழி/தோழனிடம் அரட்டை அடிக்க வேண்டும் என்றால் வண்டி ஓட்டும்போது அதைச் செய்யாதீர்கள். ஒரு இளைஞனின் கவனச் சிதறல் ஒரு கிளிக்கூட்டை கலைத்துவிட்டது.

- அன்வர் உசேன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு