சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இது கலைகள் செழிக்கும் கிராமம்!

குருமார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருமார்கள்

பிற பகுதிகளில் ஆடும் ஒயிலாட்டத்துக்கும் வடசேரி ஒயிலாட்டத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

“இது மானாவரி மண்ணுங்கய்யா... வானம் பெஞ்சாத்தான் வேளாண்மை... எங்களுக்குப் பிழைப்புன்னு பாத்தா கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், நாடகம்தான். எங்கூர்ல இருக்கிற ஐந்நூறு தலைக்கட்டுல பாதிக் குடும்பங்கள் இந்தக் கலைகளை நம்பித்தான் பிழைக்குது... தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுவதும் எங்க ஊரு ஆளுங்க சுத்தி வருவாக..." - காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டே பெருமிதமாகப் பேசுகிறார் வடசேரியின் ஒயிலாட்ட வாத்தியார் சின்னத்துரை.

திருச்சி-திண்டுக்கல் பிரதான சாலையில் மணப்பாறையை ஒட்டியிருக்கிறது வடசேரி கிராமம். பொன்னர்-சங்கர் கதையோடு நெருங்கிய தொடர்புடைய ஊர். சிறியவர்களும் பெரியவர்களுமாக, இந்த கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருக்கிறார்கள்.

மாணவர்களுடன் சின்னதுரை
மாணவர்களுடன் சின்னதுரை

“எங்கூரு மட்டுமில்லை... இதைச்சுத்தியிருக்கிற காவல்காரன்பட்டி, கரணம்பட்டி, பாலசமுத்திரப்பட்டி, பூவாய்ப்பட்டி, பெருமாள் கோயில்பட்டின்னு எட்டுப்பட்டியிலயும் இப்படித்தான். ராச்சண்டார் திருமலை பெரியநாயகியம்மன் கோயில்ல எட்டுப்பட்டிக்கும் கலையில பெரிய போட்டியே நடக்கும். இது வடசேரி ஒயிலு, இது கரணம்பட்டி கும்மின்னு தனித்தனியா மக்கள் கூடி நின்னு பாப்பாங்க. யாருக்கு அதிகம் கூட்டம் கூடுதுன்னு போட்டியே நடக்கும். படிக்கிற காலத்துல இருந்தே பிள்ளைக, நான், நீன்னு போட்டி போட்டுக்கிட்டு வந்து கத்துக்குங்க. கோலாட்டம், கும்மியெல்லாம் எங்க காலத்துல... அப்போல்லாம் ஒயிலாட்டம்தான். அறுபது வருஷத்துக்கு முன்னாடி எங்கப்பா வீரமலைக்கவுண்டர், சங்கப்பிள்ளைங்கிற பெரிய வாத்தியாரை எங்க ஊருக்கு அழைச்சுட்டு வந்து மரியாதை செஞ்சு ஒயிலாட்டத்தை எல்லாருக்கும் கத்துக்கொடுத்தார். அப்போ ஆரம்பிச்சது, இன்னைக்கு வரைக்கும் நாங்க அதைக் கையில எடுத்துக்கிட்டுப் போறோம்...” என்கிறார் சின்னதுரை.

வீரமலைக்கவுண்டர் கலைப்பண்பாட்டுத் துறையின் கலைமுதுமணி விருது பெற்றவர். சின்னதுரை கலைச்சுடர் மணி விருது பெற்றிருக்கிறார். ஆல் இந்தியா ரேடியோவின் பி ஹை கிரேடு கலைஞராகவும் இருக்கிறார். வீரமலைக்கவுண்டரோடு ஒயிலாட்டம் ஆடிய பலர் இப்போதும் வடசேரியில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

இது கலைகள் செழிக்கும் கிராமம்!

பிற பகுதிகளில் ஆடும் ஒயிலாட்டத்துக்கும் வடசேரி ஒயிலாட்டத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. வழக்கமாக துணியைக் கையில் வைத்துக்கொண்டு மென்மையாக ஆடுவார்கள். இங்கே பிரம்பு வைத்து, ராமாயணப் பாடல்களைப் பாடியபடி உக்கிரமாக ஆடுகிறார்கள்.

“ஒயிலாட்டத்துல வடசேரி மரபுன்னு ஒண்ணு இருக்கு. அந்தக்காலத்துல இங்கிருக்கிற கோயில்ல ஒரு வாத்தியார் வந்து மாசக்கணக்குல தங்கி ராமாயணம் படிப்பாரு. பெரியவங்கள்ல இருந்து இளவட்டப் பிள்ளைங்க வரை எல்லோரும் போயி உக்காந்து கேட்பாங்க. அந்தப் பாடல்களைப் பாடிக்கிட்டு மூங்கில் பிரம்பு வச்சுக்கிட்டுதான் ஒயிலாட்டம் ஆடுவோம். வசதியா இருக்கவுக, வெள்ளிப்பிரம்பு வச்சுக்குவாங்க. அதேமாதிரி வருஷத்துக்கு ஒருமுறை வாத்தியாரை அழைச்சுக்கிட்டு வந்து ஊர்ல தங்கவச்சு அவருக்குத் தட்சணையா நெல்லு கொடுத்து ஒயிலாட்டம் கத்துக்கொடுக்க வைப்போம். பயிற்சி முடிஞ்சவுடனே இந்தப் பள்ளிக்கூட மைதானத்துல பெரிய அரங்கேற்றம் நடக்கும். அதுக்குப் பட்டாபிஷேகம்னு பேரு. இப்போ எல்லாம் மாறிப்போச்சு. புள்ளைக டி.வி-யைப் பாத்தே ஆட்டத்தைக் கத்துக்குதுக” - தலைமுறை மாற்றத்தைச் சற்று ஆதங்கமாகவே பகிர்ந்துகொள்கிறார் முருகன். 80 வயதுக்கு மேல் இருக்கும் முருகனுக்கு. பார்வை மங்கிவிட்டது. தளர்வில்லாமல் பிரம்பு வைத்துக்கொண்டு ஒயிலாடுகிறார்.

முன்பெல்லாம் ஒயிலாட்டத்துக்கு மிருதங்கம் தான் வாத்தியம். இப்போது சுவாரஸ்யத்துக்காக தவில், பம்பை, நாதஸ்வரம் வைத்துக் கொள்கிறார்கள்.

இது கலைகள் செழிக்கும் கிராமம்!

“ஒயிலாட்டத்தை மட்டும் வச்சு காலத்தை ஓட்ட முடியாதில்ல... அதுதான் கோலாட்டத்தையும் கையில எடுத்தோம். மேலவழியூர் பிச்சை வாத்தியார் கோலாட்டத்துல பேர் போனவர். அவர்தான் இந்த ஊருக்கு வந்து கோலாட்டம் கத்துக்கொடுத்தவர். இன்னைக்கு நாங்க அதை வழி வழியா எங்க பிள்ளைகளுக்குக் கத்துக்கொடுத்து ஆடவைக்கிறோம். நிறைய அரசாங்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும். வயசு வாரியா நாலைஞ்சு செட் வச்சிருக்கோம். அடுத்தடுத்து பயிற்சி கொடுத்துக்கிட்டே இருப்போம். கும்மிங்கிறது பெண்களுக்கான கலை. அதுலயும் இங்கே பத்துக்கும் மேற்பட்ட கலைக்குழுக்கள் இருக்கு” என்று சொல்லும் பழனியப்பனுக்கு 70 வயதுக்குமேல் இருக்கும். அவர்தான் ஊரின் கும்மி வாத்தியார். நாட்டுப்புறப்பாடல்களும் பாடுவார்.

“முன்னெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் மாசத்துக்கு ரெண்டோ மூணோ நிகழ்ச்சி அமையும். திருப்பதி கருடசேவை, ஜெய்ப்பூர் ஊர்வலத்துக்கெல்லாம் போவோம். கொரோனா வந்தபிறகு வாழ்க்கையே தலைகீழா மாறிப்போச்சு. மொத்தமா வாழ்வாதாரம் முடங்கிருச்சு. ரொம்ப வருஷமா நாங்க விவசாயத்தைக் கையில எடுக்காம விட்டுட்டோம். வயக்காடெல்லாம் தரிசாக்கெடக்கு. கலையை நம்பி வாழ்ந்தவங்க நாங்க. பலபேருக்கு சோத்துக்கே சிரமமாப்போச்சு. பெண்களெல்லாம் திருச்சிக்கோ கரூருக்கோ சித்தாளு வேலைக்குப் போறாங்க. ஆம்பளைங்க கிடைக்கிற கூலி வேலைக்குப் போகத் தொடங்கிட்டாங்க. ஆனாலும், கலை கைவிட்டுப் போயிடக்கூடாதேங்கிறதுக்காக வாரத்துல ஒருநாள் பள்ளிக்கூடத்துல கூடிப் பாடுறோம், ஆடுறோம். அரசாங்கம் எங்களுக்கு ஒரு மாற்று வாழ்வாதாரத்தை அமைச்சுத்தரணும்...” என்று கைகூப்புகிறார் சின்னதுரை.

வடசேரி பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலைப்பயிற்சியைப் பார்த்தபடி ஏக்கத்தோடு அமர்ந்திருக்கிறார் ஒரு பெரியவர். கால்கள் மரத்துப்போய் அமர்ந்தபடியே நகரும் அந்தப் பெரியவர், வடசேரியின் மூத்த கலைஞர். பெயர் முத்து. ஒயிலாட்டமும் சிலம்பாட்டமும் அவருக்கு அத்துப்படியாம். பன்னிரண்டு வயது முதல் ஆடியவர். பலநூறு மேடைகள் கண்ட அவருடைய கால்கள் மரத்துவிட்டன.

இது கலைகள் செழிக்கும் கிராமம்!

“எப்பேர்ப்பட்ட மகா கலைஞன் இந்தாளு... வறுமைதான் எல்லாத்துக்கும் காரணமா இருக்கு. வாய்ப்புகள் சுருங்கிப்போன பிறகு குடிக்கு அடிமையாகிட்டார். எங்காவது புள்ளைங்க ஆடுனா போய் உக்காந்து இமைக்காமப் பாத்துக்கிட்டிருப்பார். யார்கிட்டயும் பேசமாட்டார். வர்றவங்க போறவங்ககிட்ட கை நீட்டுவார். குடும்பத்துலயும் ஆதரவு இல்லாததால குடிக்க ஆரம்பிச்சுட்டார். இதுமாதிரி கலைஞர்களை அரசாங்கமே தத்தெடுத்து வாழ்க்கை கொடுக்கணும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 60 வயதுக்கு மேல உள்ள நலிந்த கலைஞர்களுக்கு மூவாயிரம் ரூபாய் உதவித்தொகையாத் தர்றாங்க. அந்த வயது வரம்பை 55 வயசாக் குறைக்கணும். பெண்களுக்கு அம்பது வயசாக்கணும். அதுக்கு மேல அவங்களால கலையில நீடிக்க முடியலே. மூவாயிரமா இருக்கிற உதவித்தொகையை அஞ்சாயிரமா உயர்த்தித்தரணும்... முதல்வர் அய்யா எங்களைக் கருணைக்கண் கொண்டு பாக்கணும்...” கண்கலங்கக் கோரிக்கை விடுகிறார் சின்னதுரை.

கிராமியக் கலைகள் நலிவுற்றுவரும் காலத்தில் ஒரு கிராமமே அதைத் தூக்கிச் சுமக்கிறது. அரசு அந்தக் கலைகிராமத்தை அரவணைத்து நம்பிக்கை தரவேண்டும்!