Published:Updated:

மாஸ் காட்டும் மங்கலம்குன்னு யானைகள்!

யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை

தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டு பிரச்னை மாதிரி, ‘பீட்டா’ இங்க யானைகள வெச்சு அரசியல் பண்றாங்க.

மாஸ் காட்டும் மங்கலம்குன்னு யானைகள்!

தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டு பிரச்னை மாதிரி, ‘பீட்டா’ இங்க யானைகள வெச்சு அரசியல் பண்றாங்க.

Published:Updated:
யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை

தொழில்

கேரளாவில் அம்பானி பிரதர்ஸை தெரியாதவர்கள்கூட இருக்கலாம். ஆனால், ‘மங்கலம்குன்னு பிரதர்ஸை’ தெரியாதவர்கள் அரிது. யானை வளர்க்கும் பாரம்பர்ய குடும்பம் அது. கேரளாவுக்கும் யானைகளுக்குமான பந்தம் மிக ஆழமானது.

கேரள அரசின் முத்திரையில் ஆரம்பித்து இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என அனைத்து சமய நிகழ்ச்சிகளிலும் யானைகள் இடம் பெற்றிருக்கும். யானைகளாலேயே அங்கு பிரபலமடைந்த ஊர், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கலம்குன்னு. யானைப் பிரியர்களான பரமேஸ்வரன், ஹரிதாஸ் சகோதரர்கள் 10 யானைகளை வளர்த்து வருகின்றனர். கேரளாவில் கோயில் நிகழ்ச்சிகள் தொடங்கி சினிமா வரை அலங்கரித்து வருகின்றன இந்த மங்கலம்குன்னு யானைகள். குருவாயூர் தேவஸ்தானம் நிர்வாகத்தை அடுத்து, மாநிலத்தில் அதிக யானைகளை வளர்த்து வரும் தனியார், மங்கலம்குன்னு பிரதர்ஸ்தான். நம் ஊரில் தலயா - தளபதியா, மும்பையா - சென்னையா என்று போட்டிபோடுவதைப் போல, கேரளாவில் மங்கலம்குன்னு கர்ணனா, மங்கலம்குன்னு ஐயப்பனா என்று ரசிகர்கள் மல்லுக்கட்டும் அளவுக்கு, இவை சூப்பர் ஸ்டார்கள்.

மாஸ் காட்டும் மங்கலம்குன்னு யானைகள்!

விகடன் தீபாவளி மலருக்காக, தமிழக - கேரள எல்லையில் விவரங்களைப் பதிவு செய்துவிட்டு, மங்கலம்குன்னுவுக்குப் புறப்பட்டோம். கோவையிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் மங்கலம்குன்னுவில் இறங்கினோம். ‘அதுதான் ஆனை ஹவுஸ்’ என்று யானைகளைப் பராமரித்து வரும் இடத்தைக் காட்டினர் உள்ளூர்வாசிகள்.

‘மங்கலம்குன்னு பிரதர்ஸி’ல் ஒருவரான பரமேஸ்வரனின் மகன் பிரவீன் நம்மை வரவேற்று, “கொரோனா தொற்றால அப்பாவும் சித்தப்பாவும் வெளியில வர்றதில்ல. இப்போது பிசினஸை நானும் கவனிச்சுக்கிறேன்...’’ என்றபடி பெரிய கேட்டைத் திறந்தார், திரும்பிய பக்கமெல்லாம் யானைகள் நின்றன.

“ஐயப்பன், சரண் ஐயப்பன், கணபதி, முகுந்தன் மஸ்த் (மதம் பிடிக்கிற) கண்டிஷன்ல இருக்குங்க. அதனால கிட்ட போய்டாதீங்க...'' என்று அலர்ட் கொடுத்துவிட்டுப் பேசத் தொடங்கினார் பிரவீன்.

“நாங்க விவசாயக் குடும்பம். வீட்ல ஆடு மாடு எல்லாம் இருக்கும். இங்க எருமை ரேஸ் ரொம்ப ஃபேமஸ். எங்க தாத்தா காலத்துல இருந்து எருமை ரேஸ்ல கலந்துகிட்டு ஜெயிப்போம். அப்போ, பக்கத்து வீட்ல யானை வளர்த்துக்கிட்டு இருந்தாங்க. அதைப் பார்த்து எங்களுக்கும் ஆசை வந்துச்சு. 1977-ல உத்தரப்பிரதேசம் பாராபங்கி சந்தையில 23,000 ரூபாய்க்கு ஐயப்பன் குட்டி யானையை வாங்கினோம். 1985 - 1996 வரை ரெகுலரா யானை வாங்கிட்டு இருந்தோம். 2003-ல 18 யானைக இருந்துச்சு. முன்னாடி, கேரளாவுல மட்டுமல்லாம, கோயம்புத்தூர்வரைகூட நிறைய விசேஷங்களுக்கு எங்க யானைங்க வந்துட்டு இருந்துச்சுங்க. இப்ப அனுமதி வாங்குறதெல்லாம் ரொம்பக் கஷ்டம். அதனால தமிழ்நாட்டுக்கு வர்றதில்ல. கேரளாவுலயும் பக்கத்து மாவட்டங்களுக்கு மட்டும் போயிட்டிருக்கோம்.

தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டு பிரச்னை மாதிரி, ‘பீட்டா’ இங்க யானைங்கள வெச்சு அரசியல் பண்றாங்க. அதுங்களை கொடுமைப்படுத்துறதா சொல்றாங்க. யானைகள் எங்க கலாசாரத்துல பிரிக்க முடியாத ஒண்ணு.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்ப கர்ணன், ஐயப்பன், சரண் ஐயப்பன், ராமச்சந்திரன், ராஜன், கேசவன், முகுந்தன், கஜேந்திரன், கணபதி கணேசன்னு மொத்தம் 10 யானைங்க இருக்கு. இதுல கர்ணன்தான் 60 வயசு சீனியர். பத்தரை அடி இருக்கும் ஐயப்பன், உருவத்துல ரொம்ப பெருசு. யானை வாங்கிறப்போ பிரச்னை இல்லாத, நல்லா பயிற்சி எடுத்த யானைகளா பார்த்துதான் வாங்குவோம். பெரும்பாலும் வட இந்தியால இருந்து வாங்கிறதால, 10 நாள்களுக்கு அந்தப் பாகன் இங்க வந்து இருப்பார். நம்ம பாகன் மலையாளத்துல பயிற்சி கொடுத்து, யானை அவருக்குக் கட்டுப்படுறவரை அந்தப் பாகன் இருப்பார்.

மாஸ் காட்டும் மங்கலம்குன்னு யானைகள்!

2005 வரை எங்களுக்கு கோல்டன் பீரியட். நிறைய விசேஷங்கள், மலையாளம், தமிழ் சினிமால நடிக்கிறதுனு எங்க யானைங்க பிஸியா இருக்கும். ஐயப்பன் யானை, ‘நாட்டாமை’, ‘முத்து’ படத்துல நடிச்சுருக்கு” என்றவரின் குரலில் சடாரென சோகம்.

“இந்த ரெண்டு வருஷமா பிசினஸ் குறைஞ்சிருச்சு. லாக்டௌன்ல ரொம்ப கஷ்டம். கூடவே, போக்குவரத்துப் பிரச்னைகளால யானைகளுக்குத் தீவனம் வாங்கறது பெரிய கஷ்டமாகிருச்சு. கவர்ன்மென்ட்கிட்ட ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டு சமாளிச்சோம். ஒரு யானைக்கு சாப்பாடு, பராமரிப்பு எல்லாம் சேர்த்து ஒரு நாளுக்கு சுமார் ரூ.5,000 செலவாகும். கர்ணன், ஐயப்பன், சரண் ஐயப்பன் இந்த மூணு யானைகளுக்குத்தான் டிமாண்ட் அதிகம். மற்ற யானை களுக்கு வருஷத்துக்கு 30 விசேஷங்கள் தான் வரும். இந்த மூணு யானைகளுக்கு வர்ற விசேஷங்களை வெச்சுத்தான், மத்த யானைகளையும் பராமரிக் கிறோம்” என்று பிரவீன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சரண் ஐயப்பன் பிளிறியது. “மஸ்த்ல இருக்கு, புதுசா யாராவது நெருங்கினா பிடிக்காது. அதான் கோபப்படுறான்” என்றார்.

மங்கலம்குன்னு யானைகளின் முக்கியப் பாகனான சசி, “நான் 25 வருஷமா பாகனா இருக்கேன். இங்க கர்ணன், ஐயப்பனுக்கு நான்தான் பாகன். இங்க இருக்குற 10 யானை களுமே என் பேச்சைக் கேட்கும். ஐயப்பன் பார்க்கத்தான் பத்தரை அடில பயங்கரமா இருப்பார். ஆனா, ரொம்பப் பாசமானவர். வெளியே போறப்போ, சங்கிலி இல்லாம இருந்தாகூட, நான் நில்லுனு சொன்னா, எத்தனை நாளானாலும் அந்த இடத்தவிட்டு நகர மாட்டார். வெளியில வேற ஏதாவது யானை என்கிட்ட வந்தா அவருக்குப் பிடிக்காது.

காலையில வந்ததும் யானை எவ்ளோ சாப்பிட்டிருக்கு, எவ்ளோ சாணி போட்டிருக்குனுதான் பார்ப்பேன். அதுல ஏதாவது மாற்றம் இருந்தாலே, ஏதோ பிரச்னைனு கண்டுபிடிச்சுடுவோம். மஸ்த்துல இல்லாதப்ப, டெய்லி குளிக்க வைப்போம். மட்டை, பழம், அரிசினு இடைவெளிவிட்டு சாப்பாடு கொடுப்போம். ஆரோக்கியத்துக்கு ஆயுர்வேத லேகியம் கொடுப்போம். யானைகள ரொம்ப கவனமா பார்க்கணும். நாம எப்படி எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டோமோ, அப்படித்தான் யானைகளும். என்ன, ஏதுனு தெரிஞ்சு பழகிட்டா, அதுங்க மாதிரி யாருமே நம்ம மேல பாசம் வைக்க முடியாது. அது கண்ணாடி மாதிரி சாரே...” என்றார் நெகிழ்வுடன்.

மாஸ் காட்டும் மங்கலம்குன்னு யானைகள்!

தொடர்ந்த பிரவீன், “நான் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, யானைங்க மேல இருக்குற பிரியத்துல இதுங்களை பார்த்துக்கிட்டே என் பிசினஸையும் பார்த்துக்கிறேன். கேரளாவுல எங்க யானைங் களுக்கு ரொம்ப கிரேஸ். ‘தெச்சி கோட்டுகடவு ராமச்சந்திரன்’, ‘மங்கலம்குன்னு கர்ணன்’ இவங்க ரெண்டு பேரும் இங்க ரஜினி, கமல் மாதிரி. ஐயப்பன், சரண் ஐயப்பன் விஜய், அஜித் மாதிரி அவங்களுக்கு அடுத்த ஜெனரேஷன். கேரளால ஃபிளக்ஸுக்கு தடை வர்றதுக்கு முன்னாடிவரை, சினிமா ஸ்டார்ஸ், அரசியல் வாதிகளைவிட யானை களுக்குத்தான் அதிக பேனர் இருக்கும். முன்னாடி, கோயில்ல யானைகள மாலை போட்டு வரவேற்பாங்க அவ்வளவுதான். இப்ப கோயிலுக்கு ரெண்டு கிலோ மீட்டர் முன்னாடி இருந்தே நூத்துக்கணக்கான பைக், கார், மேளதாளம், டான்ஸ்னு யானைய வரவேற்க தனியா விசேஷம் பண்றாங்க.

புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், எங்களை மாதிரி யானை ஓனருங்க, தங்களோட யானைகள அங்க நிக்க வைக்க காசு கொடுக்கவும் தயாரா இருப்பாங்க. அது ஒரு பெரிய கௌரவம். அங்க, சாமி சிலை வெச்சு நடுவுல நிக்க, அவங்க கோயில்ல இருக்கிற ஒரு யானையத்தான் செலக்ட் பண்ணுவாங்க. ஒருமுறை பூரம் நேரத்துல அவங்க பெரிய யானை மஸ்த்ல இருந்துச்சு. அதுக்கு சமமா ஒரு யானை வேணும்னு அவங்க, நம்ம ஐயப்பனை கேட்டாங்க. இதுவரை அவங்க யானையைத் தவிர, பூரத்துல மெயினா நின்ன ஒரே வெளி யானை நம்ம ஐயப்பன்தான். அது எங்களுக்கு ரொம்ப பெருமை.

மாஸ் காட்டும் மங்கலம்குன்னு யானைகள்!

நடிகர் ஜெயராமன் இங்க அடிக்கடி வருவார். கர்ணன், ஐயப்பன், கணபதியை அடிக்கடி விசாரிப்பார். மிலிட்டரில இருந்து லீவ்ல வர்றவங்க, வீட்ல போய் பையை வெச்சுட்டு, நேரா இங்க வந்து யானைகள பராமரிச்சுட்டு நாள் கணக்கா இருப்பாங்க. கர்ணன், ஐயப்பனை இப்போ ரெண்டு கோடி ரூபாய் வரை கேட்கிறாங்க. எங்களுக்குக் கொடுக்க மனசில்ல. இது எங்களுக்கு யானைங்க கொடுத்த வாழ்க்கை. அதனால வீட்டுல எல்லாரும் அதுங்க மேல உயிரா இருப்போம்’’ என்று அவர் பேசிக்கொண்டிருக்க, புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றோம். பாகன்கள் உத்தரவு பறக்க, சமத்து குட்டிகளாய் வந்து போஸ் கொடுத்தன யானைகள்.

“தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டு பிரச்னை மாதிரி, ‘பீட்டா’ இங்க யானைகள வெச்சு அரசியல் பண்றாங்க. அதுங்களை கொடுமைப்படுத்துறதா சொல்றாங்க. யானைகள் எங்க கலாசாரத்துல பிரிக்க முடியாத ஒண்ணு. உண்மையச் சொல்லணும்னா, காட்டுல இருக்கிற யானைகளைவிட, நாங்க வளர்க்கிற யானைங்களுக்கு ஆயுள் அதிகம். காட்டு யானைங்க ரயில்ல அடிபட்டு சாகுது, வெடி வைக்கிறாங்க. காட்டுல அதுகளுக்கு உணவு கிடைக்கிறதில்ல. காட்டு யானைகளுக்கு சராசரியா 50 வயசுதான் ஆயுள். நம்மகிட்ட இருக்கிற யானைங்க 80 வயசு வரைக்கும்கூட இருக்கும். எல்லா மாநில அரசும், வளர்ப்பு யானைகளைப் பராமரிக்கறாங்க. கேரளாவுல எங்கள மாதிரி தனியார்கிட்ட இருந்த சில யானைகளை, அரசு எடுத்துட்டுப் போய் பராமரிச்சது. அதுல கொஞ்சம் யானைங்கதான் தப்பிச்சதுங்க. நிறைய யானை இப்ப உயிரோட இல்ல. கோடி கோடியா பணம் இருந்தாலும், எல்லாராலயும் யானைங்கள பராமரிக்க முடியாது.

குதிரை ரேஸ் எல்லாம் பணக்காரங்க விளையாட்டுங்கிறதால, எங்களை கேள்வி கேட்கிற பீட்டா, என்.ஜி.ஓ-க்கள் எல்லாம் அவங்கள எதுவும் கேட்க மாட்டாங்க. எங்களுக்கு யானைங்கிறது கலாசாரத்துலயும் குடும்பத்துலயும் ஒண்ணு. யானைகள நம்பியே கேரளால 10 லட்சம் குடும்பங்கள் இருக்கோம். கொரோனாவால, இப்போ அவங்க வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிடுச்சு. இப்ப புது ரூல்ஸ்படி, யாரும் யானை வாங்க முடியாது. 10 வருஷத்துக்கு அப்புறம், யானை வளர்க்கிறதையெல்லாம் வரலாறாதான் நாம தெரிஞ்சுக்கணும். எல்லாராலயும் யானைய காட்டுல போய் பார்க்க முடியாது. அடுத்த தலைமுறைக்கு யானையை வரைஞ்சுதான் காட்டணும்’’ என்றவர், ‘‘யானைகளையும் கலாசாரத்தையும் பாதுகாக்க அரசு எங்க தொழில் தொடர அனுமதிக்கணும்” கோரிக்கையுடன் முடித்தார் பிரவீன்.