Published:Updated:

ஊரை ஏமாற்றும் வேலையைத்தான் செய்கிறோம்!

- ஆன்லைனில் அமானுஷ்ய பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
- ஆன்லைனில் அமானுஷ்ய பிசினஸ்

- ஆன்லைனில் அமானுஷ்ய பிசினஸ்... அத்துமீறும் மாந்திரீகவாதிகள்!

ஊரை ஏமாற்றும் வேலையைத்தான் செய்கிறோம்!

- ஆன்லைனில் அமானுஷ்ய பிசினஸ்... அத்துமீறும் மாந்திரீகவாதிகள்!

Published:Updated:
- ஆன்லைனில் அமானுஷ்ய பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
- ஆன்லைனில் அமானுஷ்ய பிசினஸ்

நள்ளிரவு, சுடுகாடு என இருட்டு உலகில் உலவிவந்த பில்லி, சூனியம், செய்வினை, வசியம், ஏவல் போன்ற மாந்திரீக அமானுஷ்யங்கள், இப்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப், கூகுள் மீட் என அப்டேட் ஆகி இணைய உலகில் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. வசிய மை விற்பதில் தொடங்கி, பூஜை - மாந்திரீகப் பயிற்சி வகுப்பு என ஆன்லைனில் கடைவிரித்து மக்களின் மனப் பிரச்னைகளை, மூட நம்பிக்கைகளைக் காசாக்கிவருகிறார்கள் சில நவீன மாந்திரீக ஆசாமிகள்!

‘கணவன் - மனைவி பிரச்னைக்குத் தீர்வுகாண, பிரிந்த காதலர்கள் ஒன்றுசேர, தொழில் வசியம் செய்ய, கடன் தொல்லை நீங்க, காதல் வசியம், ஆண் - பெண் வசியம், எதிரி வசியம், நீதிமன்றப் பிரச்னைகள் தீர, குழந்தைகள் பிரச்னை, செய்வினை எடுக்க... என எதுவானாலும் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று தொடர்பு எண், இணையதளம் என்று அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகப் பதிவிட்டு பிசினஸ் செய்கிறார்கள். ‘வசிய மை தயாரிப்பது எப்படி?’ என்பதில் தொடங்கி மயான பூஜை வரை ஃபேஸ்புக்கில் நேரலை செய்கின்றனர். இவை தவிர, மாந்திரீகம் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள, தனிக் கட்டணம் வசூலித்து வாட்ஸ்அப், கூகுள் மீட்டில் தனியாக வகுப்புகளும் எடுக்கின்றனர்.

ஊரை ஏமாற்றும் வேலையைத்தான் செய்கிறோம்!

இப்படி, பணம் கொழிக்கும் இந்தத் தொழிலில் ஈடுபடும் மாந்திரீகவாதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கூடவே, அவர்களுக்குள் தொழில் போட்டியும் வெடிக்க ஆரம்பித்துள்ளது. பரஸ்பர தொழில் போட்டியில், ஒருவருக்கொருவர் சவால்விடுவதில் ஆரம்பித்து, உச்சகட்டமாக ஆபாச அர்ச்சனைகள் வரை அரங்கேறி ஆன்லைன் பற்றியெரிகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், ‘ஓம் நவசக்தி ஆன்மிக பீடம் அறக்கட்டளை’ சிவக்குமார் என்பவருக்கும், கள்ளக்குறிச்சி ‘ஸ்ரீஜாலக்கா தேவி ஆன்மிக அறக்கட்டளை மற்றும் மாந்திரீக விழிப்புணர்வு குழு’வைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் இணைய உலகில் பயங்கர பிரபலம். சிவக்குமார் ‘நவசக்தி’ என்ற அடைமொழியுடனும், ரவிக்குமார் ‘ஜாலக்கா’ என்ற அடைமொழியுடனும் இணையதளத்தில் வலம்வருகின்றனர். இருவருக்கும் ‘ஜன்டா முன்டா’, ‘நம்பினால் நம்புங்கள் மாந்திரீகம்’, ‘அலிக்கி மிலிக்கி’ என்று ஏராளமான ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளன. இந்தியில்கூட தனியாகக் கணக்குகள் வைத்துள்ளனர்.

நீளமான தலைமுடி, கழுத்தில் மண்டையோட்டு மாலை என வித்தியாச கெட்டப்பில் வலம்வரும் ‘ஜாலக்கா தேவி’ ரவிக்குமாரிடம் இருவருக்குமிடையிலான மோதல்கள் குறித்துக் கேட்டோம். ‘‘நான் ஒரு பூசாரி. கூலி வேலையும் செய்கிறேன். கோயிலில் வேஷம்கட்டி சாமியை அழைப்பேன். ஆன்மிகம் சார்ந்து இயங்கியதால், சிவக்குமாருக்கு ஃபேஸ்புக்கில் நான்தான் ரிக்வஸ்ட் கொடுத்தேன். ஆனால், அவர் ஆன்மிகத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இப்போது என்னைத் திட்டுவதுபோல, முன்பு பலரையும் தரக்குறைவாக, ஆபாசமாகப் பேசியிருக்கிறார். ‘ஐயா ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, என்னையும், என் குடும்பத்தினரையும் ஆபாசமாகப் பேசினார். அதனால், நானும் அவரை அதே பாணியில் திட்டுகிறேன். பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு தன்னிடம் வரும் பெண்களிடமெல்லாம் சிவக்குமார் ஆபாசமாகப் பேசுகிறார். ஆன்மிகம் சார்ந்து இயங்குவதால், அவரது தவறுகளை நான் கேள்வி எழுப்பினேன். அதனால், எனக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து முதல்வர் தனிப்பிரிவிலும், சைபர் க்ரைமிலும் புகார் அளித்தேன். அவர்களும் விசாரித்தனர். மற்றபடி நான் மாந்திரீகமெல்லாம் செய்வதில்லை. ‘மாந்திரீகம் என்ற பெயரால் நடக்கும் மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?’ என்பது குறித்துத்தான் நான் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன்” என்றார்.

’நவசக்தி’ சிவக்குமார்
’நவசக்தி’ சிவக்குமார்

‘இந்து தேசிய கட்சி’யின் திருப்பூர் மாவட்ட ஆன்மிகப் பிரிவுச் செயலாளரான சிவக்குமார், அ.தி.மு.க-விலும் உறுப்பினராக இருக்கிறார். கழுத்து நிறைய ருத்ராட்சம் மற்றும் மண்டையோடுகள் அடங்கிய மாலைகளோடு மிரட்டலாக இருக்கிறார் சிவக்குமார். மக்கள் பிரச்னைகளை செல்போனிலேயே கேட்டு, எலுமிச்சைப் பழத்தை செல்போன் ஸ்பீக்கரில் வைத்தே தீர்வுகொடுப்பதாக அடித்துவிடுகிறார். “மக்களிடம் நல்ல எண்ணத்தைப் பகிர்வதற்காகத்தான் இந்த ஆன்மிக சேவையைத் தொடங்கினோம். ஒரு பயிற்சிக்கு ரூ.150 கட்டணம் வாங்குகிறோம். விருப்பம் இருப்பவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். ரவிக்குமார் அப்படித்தான் என் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்தார். எதிரிகளை அழிக்க சுடுகாட்டு பூஜையெல்லாம் அவர்தான் செய்வார். மாந்திரீகமே இருக்கக் கூடாது என நினைப்பவன் நான். அவரது ஆட்களைவிட்டு என்னைத் தகாத வார்த்தைகளில் ஆபாசமாகத் திட்டத் தொடங்கினார். பெண்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி பிரச்னைகளிலிருந்து மீட்டுவருகிறேன். இன்று யார் ஏமாற்றவில்லை... ஒரு ரூபாய் மையை, 5 ரூபாய்க்கு விற்கிறேன். 40 ரூபாய் புத்தகத்தை 150 ரூபாய்க்கு விற்கிறேன். 250 ரூபாய் ருத்ராட்ச மாலையை 500 ரூபாய்க்கு விற்கிறேன். பொதுமக்களை ஏமாற்றும் வேலையைத்தான் செய்கிறேன்; வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்கிறேன். இது என் பிசினஸ். ரவிக்குமாரும்தான் ஏமாற்றுகிறார். அவர்மீது நானும் காவல்துறையில் புகாரளித்திருக்கிறேன். இருவரும் ஊரை ஏமாற்றும் வேலையைத்தான் செய்கிறோம். அவர் பேசுகிறார் என்று நானும் பேசுவது தவறுதான். இரண்டு பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தவற்றை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

ஜாலக்கா ரவிக்குமார்
ஜாலக்கா ரவிக்குமார்

இது குறித்து திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயைத் தொடர்புகொண்டு பிரச்னையை விவரித்தோம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், “இந்தப் பிரச்னை தொடர்பான பதிவுகளை அனுப்புங்கள். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

மாந்திரீகர்களே தாங்கள் ஏமாற்றுவதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறத் தயாராக இருப்பதுதான் வேதனை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism