Published:Updated:

‘‘லட்சுமியும் அவரின் குடும்பத்தினரும் மாவோயிஸ்ட்டுகளா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மணிவாசகம் உடலுக்கு இறுதி அஞ்சலி
மணிவாசகம் உடலுக்கு இறுதி அஞ்சலி

`மலர்களை நசுக்கினால் மணம் வீசும்’ என்றார் மாவோ. அதேபோல் மக்களைத் துன்புறுத்தினால் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் உருவாவார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்

பிரீமியம் ஸ்டோரி

‘மாவோயிஸ்ட்டுகள் என்று பொய் காரணம் சொல்லி லட்சுமி என்கிற அப்பாவி பெண்ணையும், அவரின் கணவர் மற்றும் மகனையும் `உபா’ எனப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சேலம் மாவட்ட போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பு எழுந்துள்ளது.

2019, அக்டோபர் 29-ம் தேதி... மணிவாசகம், அஜிதா, கார்த்திக், சுரேஷ் ஆகிய நான்கு மாவோயிஸ்ட்டுகளை கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனப்பகுதியில் தண்டர்போல்டு என்றழைக் கப்படும் கேரள சிறப்பு அதிரடிப்படை போலீஸார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ‘மணிவாசகம், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர். அவருடைய மனைவி கலாவும் சகோதரி சந்திராவும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு ஆண்டு களுக்கு முன்பே அவர்கள் கைதுசெய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக் கின்றனர்’ என்ற தகவல் தெரியவர, ‘ஒரே குடும்பத்தில் இத்தனை மாவோயிஸ்ட்டுகளா?’ என்று போலீஸார் திகைத்தனர்.

விவேக் - ராஜா
விவேக் - ராஜா

மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் ‘மணிவாசகம் உடல் தகனம் செய்யப்பட்டபோது அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்’ என்று குற்றம்சாட்டப்பட்டு, மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா, இன்னொரு சகோதரி லட்சுமி, அவரின் கணவா் சாலிவாகனம், மகன் சுதாகா் மற்றும் மாவோயிஸ்ட் அரசியல் சிறைவாசிகளுக்கான விடுதலைக் குழு ஒருங்கிணைப்பாளர் விவேக் ஆகியோர்மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் ஒன்பது பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது காவல்துறை.

பிணையில் வந்து மணிவாசகத்தின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டு சென்ற கலாவும் சந்திராவும், திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். விவேக், தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில் லட்சுமி, சாலிவாகனம், சுதாகர் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ்.

‘மணிவாசகத்தின குடும்பப் பின்னணி என்ன, அவரின் சகோதரி லட்சுமியும் மாவோயிஸ்ட்டா?’ என்ற கேள்விகளுடன் அவரின் சொந்த ஊரான ராமமூர்த்தி நகருக்குச் சென்றோம். மணிவாசகத்தின் கூரைவீடு சிதிலமடைந்து இருந்தது. அதற்கு அருகிலேயே அவரின் தங்கை லட்சுமியின் வீடு அமைந்திருக்கிறது. இரு வீடுகளிலும் ஆளரவம் இல்லை.

 சாலிவாகனம், லட்சுமி
சாலிவாகனம், லட்சுமி

அருகில் இருந்த சிலரிடம் பேசினோம். ‘‘மணிவாசகம் படிச்ச படிப்புக்கு, பெரிய உத்தியோகத்துக்குப் போயிருக்கலாம். எப்படி மாவோயிஸ்ட் இயக்கத்துல சேர்ந்தான்னே தெரியல. அவன் மட்டுமில்லாம அவன் பொண்டாட்டி கலாவும், தங்கச்சி சந்திராவும் மாவோயிஸ்ட் இயக்கத்துல சேர்ந்துட் டாங்க. ஆனா, மணிவாசகத்தோட கடைசி தங்கச்சி லட்சுமிக்கோ அவ புருஷனுக்கோ புள்ளைக்கோ மாவோ யிஸ்ட் இயக்கத்தைப் பத்தி எதுவும் தெரியாது. கூலி வேலைக்குப் போய் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தா லட்சுமி. கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் அவளுக்கு கர்ப்பப்பை ஆபரேஷன் நடந்துச்சு. அண்ணனும் அக்காவும் மாவோயிஸ்ட்டுங்கிறதால உடம்புக்கு முடியாம இருந்த லட்சுமியை குடும்பத்தோடு கைதுபண்ணிட்டாங்க’’ என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைமறைவாக இருக்கும் மாவோயிஸ்ட் அரசியல் சிறைவாசி களுக்கான விடுதலைக் குழு ஒருங்கிணைப்பாளர் விவேக் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ‘‘மணிவாசகம் சுட்டுக் கொல்லப் பட்டார் என்பது தெரிந்ததும், ‘அவரின் உடலை சொந்த ஊரான ராமமூர்த்தி நகரில் தகனம் செய்ய வேண்டும். இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கலாவுக்கும் சந்திராவுக்கும் அனுமதியளிக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் அடிப்படையிலேயே, நவம்பர் 14-ம் தேதி நள்ளிரவு மணிவாசகத்தின் உடல் ராமமூர்த்தி நகருக்குக் கொண்டு வரப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படிதான் மணிவாசகத்தின் உடலுக்கு, அவரின் தங்கை லட்சுமி இறுதிச்சடங்குகளைச் செய்தார். இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கைது செய்வதிலிருந்தே காவல்துறை குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மணிவாசகம் உடலுக்கு இறுதி அஞ்சலி
மணிவாசகம் உடலுக்கு இறுதி அஞ்சலி

`மாவோவின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களைச் சுட்டுக் கொன்றால்கூட கேள்வி கேட்கக் கூடாது. உடலை வாங்குவதற்குக்கூட யாரும் முன்வரக் கூடாது’ என்று அச்சுறுத்துவதற்காகத்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டரீதியிலான உதவிகளைச் செய்வதால், விவேக் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். `மலர்களை நசுக்கினால் மணம் வீசும்’ என்றார் மாவோ. அதேபோல் மக்களைத் துன்புறுத்தினால் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் உருவாவார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றனர்.

இறுதி அஞ்சலியின்போது...
இறுதி அஞ்சலியின்போது...

குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் பொறுப் பாளர் வழக்கறிஞர் ராஜாவிடம் பேசினோம். ‘‘கலாவும் சந்திராவும் மாவோவின் கொள்கையை ஏற்று மக்களுக்காகப் போராடக்கூடிய போராளிகள். அதனால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள். அவர்கள்மீது ஆயிரம் பொய் வழக்குகள் போட்டாலும் அவர்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். ஆனால், ஒன்றும் அறியாத அப்பாவிகளான மணிவாசகத்தின் கடைசி தங்கை லட்சுமி, அவரின் கணவர் சாலிவாகனம், மகன் சுதாகர் ஆகியோரை உபா சட்டத்தின்கீழ் கைது செய்திருக்கின்றனர். உபா சட்டம் என்பது தடா, பொடாவைவிட மோசமானது. எந்தத் தவறும் செய்யாதவர்கள்மீது உபா சட்டம் பாய்ச்சப்படுவது அநீதி’’ என்றார்.

வழக்கின் விசாரணை அதிகாரியான ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரிடம் பேசினோம். ‘‘அவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறியிருக்கின்றனர். அரசுக்கு எதிரான கூட்டுச்சதியில் ஈடுபட்டவர் களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனப் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களும் மாவோயிஸ்ட் குழுவில் இருக்கிறார்கள். அதனால்தான் உபா சட்டம் போடப்பட்டுள்ளது’’ என்றவரிடம், ‘‘மணிவாசகத்தின் இறுதிச்சடங்கு நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து வழக்கு பதிந்தது ஏன்?’’ என்று கேட்டதற்கு, ‘‘நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி, லீகல் ஒப்பீனியன் வாங்குவதற்கு சற்று தாமதமாகிவிட்டது’’ என்றார்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு