அரசியல்
அலசல்
Published:Updated:

கொலையா... தற்கொலையா? - தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரைச் சுற்றும் சர்ச்சை!

வெங்கடேசன் மரணம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்கடேசன் மரணம்

உடற்கூறாய்வு முடிவை எப்போதும் பப்ளிக்காக வெளியிட மாட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், நகல் கொடுப்போம். அவர்கள் குறிப்பிடுவதுபோல் நான் ஏதும் சொல்லவில்லை.

‘கூலித் தொழிலாளியான என் தம்பியின் சாவுக்குக் காரணம் தி.மு.க ஊராட்சிமன்றத் தலைவர் குடும்பம்தான். ஆனால், அரசியல் தலையீடு இருப்பதால் போலீஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கிறார் மரக்காணத்தைச் சேர்ந்த சுப்பையா.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகிலிருக்கும் ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - அருட்செல்வி தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பெயின்ட்டிங் வேலை செய்துவந்த வெங்கடேசன் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ‘என் தம்பியின் மர்ம மரணம் குறித்து போலீஸில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை இல்லை’ எனப் போராடிவரும் வெங்கடேசனின் அண்ணன் சுப்பையா, அதற்கான பின்னணியையும் நம்மிடம் விளக்கிக் கூறினார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்
அருட்செல்வி
அருட்செல்வி

“மரக்காணம் ஒன்றிய தி.மு.க துணைச் செயலாளரும், ஆலப்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவருமான தயாளன் என்பவருக்கும், என் தம்பி மனைவி அருட்செல்விக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்திருக்கிறது. இதைக் கண்டித்து, தயாளனின் மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்ட மூவர் என் தம்பி வெங்கடேசனையும், அவனுடைய மனைவி அருட்செல்வியையும் கடந்த ஜூன் 5-ம் தேதி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரில், போலீஸார் சி.எஸ்.ஆர் மட்டுமே பதிந்தனர். இந்த நிலையில், ஜூன் 24-ம் தேதி என் தம்பி மர்மமான முறையில் இறந்துவிட்டான். முதற்கட்ட உடற்கூறாய்வில் அவன், ‘கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறான்’ என்று இறப்பின் காரணம் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

எனவே, தயாளன் உட்பட பலரிடமும் போலீஸார் விசாரித்தனர். ஆனால், வேறு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாததால், மாவட்ட எஸ்.பி-க்குப் புகார் கடிதம் அனுப்பினேன். அதன் பிறகு, தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எனது லைனுக்கு வந்தார். அப்போது, ‘நீங்க ஒரு புகார்க் கடிதம் அனுப்புனீங்களே... அதை அமைச்சர் மஸ்தானிடம் சொல்லிட்டேன். அவரும் நடவடிக்கை எடுக்கறதா சொல்லிட்டாரு. நீங்க அவர்கிட்ட பேசுங்க’ என்றார். இதனால், அமைச்சர் செஞ்சி மஸ்தானை போனிலும் நேரிலும் தொடர்புகொண்டு பேசினேன். அவரும்கூட தயாளனைக் காப்பாற்றும் தொனியில்தான் பேசினார். தற்போது, இறுதிக்கட்ட உடற்கூறாய்வு முடிவும் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதை வெளியிடாமல் மாவட்ட எஸ்.பி நிறுத்திவைக்கச் சொல்லியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அரசியல்வாதியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமா?” என்றார் ஆதங்கத்துடன்.

தயாளன்
தயாளன்

நடந்த சம்பவம் குறித்து அருட்செல்வியிடம் பேசினோம். “எனக்கும் தயாளனுக்கும் இடையே பழக்கம் இருந்ததாகக் கூறி தயாளன் குடும்பத்தினரும், என் கணவர் வீட்டுப் பங்காளிகளும் என்னையும், என் கணவரையும் ரத்தம் வரும்படி பயங்கரமாகத் தாக்கினார்கள். இதில் என் கணவர் வெங்கடேசனுக்கு மூக்கில் ரத்தம் வந்தது. தயாளனின் மனைவி என் கணவரைச் செருப்பால் அடித்து அசிங்கப்படுத்திவிட்டார். அவமானம் தாங்காத அவர் மறுநாளே தூக்குப் போட்டுக்கொள்ள முயன்றார். நான் தடுத்தேன். பின்னர் சாராயம் வாங்கி வந்து குடித்தவர், நான் ஏரி வேலைக்குப் போய்விட்டுத் திரும்ப வந்து பார்த்தபோது, எங்கள் இளைய மகனின் சட்டையைக் கையில் பிடித்தவாறு இறந்துகிடந்தார். அப்போதும் அவரது மூக்கில் ரத்தம் வடிந்திருந்தது. ஆனால், அவரது இறப்பை தங்கள் சொந்த நலனுக்குப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் எங்கள் பங்காளி குடும்பத்தினர். இந்த வழக்கில் என்னையும் குற்றவாளியாக்கி, எங்கள் சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார்களோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்றார் கண்ணீர் வடித்தபடி.

கொலையா... தற்கொலையா? -  தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரைச் சுற்றும் சர்ச்சை!

இதையடுத்து ஆலப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் தயாளனிடமே விளக்கம் கேட்டோம். “நான் இரண்டாவது முறையாக பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறேன். என்னைப் பிடிக்காத வர்கள் என் பெயரைக் கெடுப்பதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம். மற்றபடி 100% நான் அப்படிப்பட்ட ஆளில்லை. எனக்கும் அருட்செல்விக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை, அதெல்லாம் வதந்தி” என்று மறுத்தார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் பேசினோம். “காவல்துறையிடம் விசாரித்ததில், ‘தயாளன் மீது ஊரில் அப்படியேதும் சந்தேகம் வரவில்லை’ எனத் தகவல் கிடைத்தது. ஆனால், இது ஒரு உயிர் பறிபோன விஷயம் என்பதால், யாராக இருந்தாலும் உண்மைத்தன்மையை விசாரித்துச் சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறேன். அப்படி, அவருக்குத் தொடர்பிருக்கிறது என்பதுபோலத் தெரியவந்தால், அவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார். அதில் மாற்றுக் கருத்தில்லை” என்றார்.

சுப்பையா
சுப்பையா
செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்
ஸ்ரீநாதா
ஸ்ரீநாதா

மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா பேசுகையில், “உடற்கூறாய்வு முடிவை எப்போதும் பப்ளிக்காக வெளியிட மாட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், நகல் கொடுப்போம். அவர்கள் குறிப்பிடுவதுபோல் நான் ஏதும் சொல்லவில்லை. இந்தப் புகாரை விசாரிக்கும்படியும், உடற்கூறாய்வு முடிவு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படியும் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி-க்கு ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறேன்” என்றார்.

சந்தேகத்துக்கு இடமின்றி உண்மையை நிரூபிக்கவேண்டியது காவல்துறையின் கடமை!