Published:Updated:

லாக் டெளன் திருமணங்கள் எப்படி? இப்படி!

லாக் டெளன் திருமணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
லாக் டெளன் திருமணங்கள்

நேற்று இல்லாத மாற்றம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. ஆனால், மணமக்களின் மனங்களிலும் பெற்றவர்களின் சந்தோஷங்களிலும் சில பல லட்சங்களிலும் நிச்சயிக்கப்படுவது வழக்கம். அப்படியிருக்க, க்வாரன்டீனில் நடந்த திருமணங்கள் மிக எளிமையாக நடந்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது. எப்படி உணர்கிறார்கள் பெற்றவர்கள்?

கரூர்

எளிமையும் நிம்மதியும்!

மணமக்கள்: பிரபாகரன் - அருளரசி

ரூர் புஞ்சைப் புகளூரில் உள்ள கண்டியம்மன் கோயிலில் நடந்திருக்கிறது இந்த திருமணம். மணமகனின் தாய் சுமதி, “கடன் வாங்கியாவது என் பையன் கல்யாணத்தைச் சிறப்பா நடத்த நெனச்சிருந்தேன். மண்டபம், சாப்பாடுக்கு மட்டும் மூணு லட்சம் ரூபாய். அதுல முன்தொகையைக் கட்ட, வட்டிக்கு ஒருத்தர்கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். அதுக்குள்ள கொரோனா வந்துட்டதால கல்யாணத்தை எளிமையா கோயில்ல நடத்திட்டோம். கடனாளி ஆகாம தப்பிச்சுட்டேன். ஆனா, பையன் திருமணத்தை எளிமையா நடத்திட்டோ மோங்கிற குற்ற உணர்வு இருக்கு’’ என்கிறார் சுமதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!
லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!
லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

அருளரசியின் தந்தை சுரேஷ், ‘`நான் சந்தையில் லோடு மேனா இருக்கேன். என் மனைவி சரஸ்வதி, கரூர்ல ஒரு ஹோட்டல்ல சமையல் வேலை பார்க்கிறாங்க. கஷ்டப்பட்டுத்தான் என் மகளை இன்ஜினீயரிங்வரை படிக்க வெச்சோம். நல்ல இடமா வந்ததால, எங்க சக்திக்கு மீறி மகள் திருமணத்தை நடத்தலாம்னு இருந்தோம். நெருங்கின உறவுகள், நண்பர்கள்னு யாரையும் கூப்பிட முடியலையேங்கிற வருத்தம் இருந்தாலும், கடனாளி ஆகலைங்கிற நிம்மதியிருக்கு’’ என்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருச்சி

மகள் பேர்ல டெபாசிட் செய்ய போறேன்!

மணமக்கள்: அருண்பாபு - கற்பகா

திருச்சி ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அனுசுயா, ``எங்க வீட்டின் கடைசி திருமணம் என்கிறதுனால பெரிய அளவுல நடத்த நினைச்சோம். கையிருப்பு, வெளியே கேட்ட தொகைன்னு ஒரு பிளான் போட்டு வெச்சிருந்தோம். கொரோனாவால வீட்டிலேயே என் மகள் கற்பகாவுக்கும் அருண்பாபுவுக்கும் திருமணம் நடந்தது. நாங்க எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே செலவாச்சு.

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

கல்யாணச் செலவுக்காக வெச்சிருந்த தொகையில் ஒரு பகுதியை எங்க வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கோயில் கும்பாபிஷேகத்துக்கும், ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கும் நன்கொடை தர முடிவு செஞ்சிருக்கோம். மீதித் தொகையை மகளின் பெயரில் டெபாசிட் செய்ய இருக்கோம்” என்கிறார் டாக்டர் அனுசுயா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூத்துக்குடி

300 குடும்பங்களுக்கு உதவினோம்!

மணமக்கள்: அருண் சுந்தரமார்த்தாண்டன் - மோனிஷா

‘இன்போசிஸ்’ நிறுவனத்தில் பணிபுரிகிறார் மோனிஷா. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சீனியர் மேனேஜர் அருண். நம்மிடம் பேசிய மோனிஷாவின் தந்தை ராமமூர்த்தி, ‘`திருமணப் பத்திரிகையை எல்லோருக்கும் கொடுத்து முடிச்சதும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாச்சு. ‘சொந்த ஊர்ல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு, அந்த மக்களுக்குச் சாப்பாடு போடலைனா எப்படிப்பா’ன்னு மகள் கேட்டா.

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

அதனால, கல்யாணச் செலவுக்காக வெச்சிருந்த தொகையிலே பாதியை நிவாரணத்துக்கு வழங்கினோம். ஊர்ல இருக்கிற 300 வீடுகளுக்கும் தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், காய்கறி, மாஸ்க், சானிட்டைசர் ஆகியவை அடங்கிய பையை நேர்ல கொடுத்தோம். நல்ல காரியத்துக்கு செலவு பண்ணுறதைச் சொல்லிக்காட்டக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதனால தொகையைக் கேட்காதீங்க’’ என்கிறார் நெகிழ்வுடன்.

கோவை

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

2,500 பேருக்கு உணவு வழங்கினோம்!

மணமக்கள்: விக்னேஷ் பாபு - பிரவீணா

கோவை குருடம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி, ``என் மகன் விக்னேஷ் திருமணத்துக்கு நாங்க போட்ட பட்ஜெட் எட்டு லட்சம் ரூபாய். சேமிப்பு தாண்டி நகைக்கடன், சொந்தக்காரங்க கிட்ட கடன் வாங்கணும்னு நெனச்சிருந்தோம். ஊரடங்கு உத்தரவால எளிமையா திருமணத்தை நடத்தினதோடு, காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்றோர்னு சுமார் 2,500 பேருக்கு உணவு வழங்கினோம். அதுக்கு மட்டும் ரூபாய் ஒரு லட்சமாச்சு. அது எங்க சேமிப்புத் தொகைதான். கடன் இல்லாததால, மணமக்கள் அவங்க வாழ்க்கையை நிம்மதியா தொடங்கியிருக்காங்க’’ என்கிறார் நிறைவுடன்.

சிவகங்கை

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

லோன் வேண்டாம்னு சொல்லிட்டோம்!

மணமக்கள்: மூர்த்தி - சாதனா

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியைச் சேர்ந்த லெஷ்மணன், தன் மகன் மூர்த்திக்கு நடந்த திருமணம் குறித்து, ‘`சிங்கம்புணரியில் உள்ள எங்க மருமக வீட்லதான் திருமணம் நடந்தது. கல்யாணத்துக்கு 5 லட்சம் ரூபாய் பட்ஜெட் போட்டோம். ஆனா, கல்யாணத்துல 20 பேர்தான் கலந்துகிட்டாங்க. கூடுதலா 50 பேருக்கு சமைச்சு, மணமக்கள் கையால ஆதரவற்றவர்களுக்குக் கொடுத்தோம். உடை, தாலி, சாப்பாடு, போக்குவரத்துன்னு மொத்தமே ரூபாய் ஒன்றரை லட்சம்தான் ஆச்சு. கல்யாணத்துக்காக என் பையன் லோன் அப்ளை பண்ணியிருந்தான். இப்ப அதை வேண்டாம்னு சொல்லிட்டான். நாங்க நிம்மதியா இருக்கோம்” என்கிறார் மலர்ந்த முகத்துடன்.

வேலூர்

தாம்பூலப்பையில உணவுப் பொருள்களைக் கொடுத்தோம்!

மணமக்கள்: பரணிதரன் - திவ்யா

வேலூர் எம்.எல்.ஏ-வும் மணமகள் திவ்யாவின் தந்தையுமான கார்த்திகேயன் தன் வீட்டுத் திருமணம் பற்றி பேசினார்.

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

‘`என் மகள் திவ்யாவோட கல்யாணத்துக்கு முந்தின நாள்தான் ஊரடங்கு அறிவிச்சாங்க. திருமணத்துல 20,000 பேருக்கு மேல கலந்துக்குவாங்கன்னு எதிர்பார்த்தோம். ரோட்டுல 240 அடி நீளத்துக்குப் பந்தல் போட்டிருந்தோம். அதைக்கூட இன்னும் பிரிக்கலை. கடைசியில திருமணம் எளிமையா நடந்ததால லட்சக்கணக்குல பணம் வீணாகிப்போச்சு. கல்யாணத்துக்கு வந்தவங்களை மகிழ்விக்கிறதுக்காக, கேரளாவுல இருந்து வந்த கலைக்குழுவினரை இன்னிக்கு வரைக்கும் என் மண்டபத்துல தங்கவெச்சு சாப்பாடு போட்டுட்டிருக்கேன். கல்யாணத்துக்கு வாங்கின தாம்பூலப் பையில உணவுப்பொருள்களை நிரப்பி, கஷ்டப்படுகிற வங்களுக்கும் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் கொடுத்திட்டிருக்கேன். கிட்டத்தட்ட 6,000 பேருக்கு மேல இதுவரைக்கும் உதவி செஞ்சிருக்கேன்’’ என்கிறார்.

சென்னை

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

மகள் பேர்ல பேங்க்ல போட்டுட்டோம்!

மணமக்கள்: பிரவீன் - பார்கவி

பார்கவியின் அம்மா மஞ்சுளா ராமனிடம் பேசினோம்... ‘`ஈ.சி.ஆர்ல தீம் வெடிங் செய்யணும்னு ஆசைப்பட்டோம். ஊரடங்கால எதுவும் நடக்கலை. கல்யாணத்துக்கான உடைகள் தவிர்த்து பெரிய செலவில்லை. எங்க பொண்ணும் மாப்பிள்ளையும் இப்பதான் வாழ்க்கையை தொடங்கியிருக்காங்க. நிச்சயம் அவங்களுக்கு நிறைய தேவைகள் இருக்கலாம். அதனால, கல்யாணத்துக்காக வெச்சிருந்த பணத்தை பார்கவி பேர்ல பேங்க்ல போட்டுட்டோம்’’ என்கிறார் திருப்தியாக.

தஞ்சாவூர்

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

பட்ஜெட் 15 லட்சம்... செலவு 20,000!

மணமக்கள்: தன்ஷிங் - ஆஷிபா

ஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த முஜுபர் ரகுமான், ``என்னுடைய ஒரே செல்ல மகள் ஆஷிபா - தன்ஷிங்குக்கு ஊரே மெச்சுற அளவுக்கு நிக்காஹ் செய்யணும்னு 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தேன். அழைப்பிதழ் கொடுத்திட்டிருந்த நேரத்துல ஊரடங்கு அமலாச்சு. நிக்காஹ்வுக்கான புது உடைகள்கூட எடுக்கலை. சீர்வரிசைப் பொருள்களும் வாங்க முடியலை. கடைசியில எங்க வீட்டிலேயே எளிமையா திருமணத்தை நடத்தினோம். 20,000 ரூபாதான் செலவாச்சு. சம்பந்தி வீட்ல எதுவுமே எதிர்பார்க்கலைன்னாலும், மகளை வெறும் கையோட அனுப்பறோம்கிற கவலை மட்டும் இருந்தது. ஊரடங்கு முடியடும் சிறப்பா செய்துடலாம்னு மனசைத் தேத்திக்கிட்டேன்'' என்கிறார்.

பெரம்பலூர்

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

30,000 ரூபாய்தான் செலவாச்சு!

மணமக்கள்: ராதாகிருஷ்ணன் - திவ்யா

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை, “எங்க வீட்ல இது கடைசி கல்யாணம், மருமகள் அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. அதனால கல்யாணத்தை கொஞ்சம் விமரிசையா பண்ண ஆசைப்பட்டோம். ஊரடங்கை நீடிச்சதுனால, வெளிநாட்டிலிருக்கும் மருமகன்கள், வெளியூர்ல இருக்கிற என்னோட நாத்தனாரால வர முடியல. கடைசியில எங்க ஊர் சிவன் கோயில்ல திருமணத்தை நடத்தினோம். நாங்க திட்டமிட்டபடி திருமணம் நடந் திருந்தா நாலு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகியிருக்கும். ஆனா, 30,000-க்குள்ளே முடிஞ்சிடுச்சு. ஊரடங்கு முடிஞ்சதும் வரவேற்பு நிகழ்ச்சியில சொந்தக்காரங்களுக்கு விருந்து கொடுக்கணும்” என்கிறார்.

நாகை

லாக் டெளன் திருமணங்கள்
எப்படி? இப்படி!

வரவேற்பு நிகழ்ச்சி நடக்கலை!

மணமக்கள்: மணிவேல் - சந்தியா

வேட்டங்குடி ஶ்ரீபுற்றடி மாரியம்மன் கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற்றிருக்கிறது. சந்தியாவின் தந்தை காசிநாதன், ‘`என் கடைசிப் பொண்ணு கல்யாணத்தைச் சிறப்பா செய்யணும்னு 10,000 பத்திரிகை அடிச்சேன். ஊரடங்கால 10 பேருக்கு மட்டுமே அதைக் கொடுக்க முடிஞ்சது. உறவினர்களை அழைச்சுட்டுப்போக ரெண்டு பேருந்து ஏற்பாடு பண்ணியிருந்தேன். கடைசியில, ரெண்டு வீட்டையும் சேர்த்து 12 பேர்தான் கலந்துக்கிட்டாங்க. கல்யாணம் முடிஞ்ச கையோட புகுந்த வீடு போன பொண்ணு, வரவேற்பு நிகழ்ச்சிக்கு வர முடியாததால அதையும் வைக்கலை” என்கிறார்.