உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் 11 நாள்களைக் கடந்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் 25 குழந்தைகள் உட்பட 364 பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். 759 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். போரில் இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. உக்ரைன் நாடு, நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன்மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. முதலில் உக்ரைன் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு ராணுவ மையங்கள், அரசு அலுவலகங்கள், அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போர் விமானங்கள் மூலமும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது ரஷ்யா. உக்ரைனின் முக்கிய வர்த்தக நகரும், துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் நகரமான கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களைக் கைப்பற்றியிருக்கின்றன ரஷ்ய படைகள். நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ், தலைநகரமான கீவ் நகரைக் கைப்பற்றக் கடுமையாகச் சண்டையிட்டுவருகின்றன.

பல கி.மீ தூரத்துக்கு பீரங்கிகள், ராணுவத் தளவாடங்களுடன் தனது படையை அணிவகுத்து நிறுத்தியிருக்கிறது ரஷ்யா. உக்ரைனுக்குப் படிப்பு மற்றும் தொழில்ரீதியாகச் சென்ற 20 ஆயிரம் இந்தியர்களில் இதுவரையில், சிறப்பு விமானங்கள் மூலமாக 17 ஆயிரம் பேரை இந்திய ஒன்றிய அரசு மீட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவு, தண்ணீரின்றி தஞ்சமடைந்துள்ளனர்.
`ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் கடந்த சில நாள்களில் இந்தியர்கள் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதியாக உக்ரைனில் இரண்டு நகரங்களில் தற்காலிகப் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. ஆனாலும், ரஷ்யாவின் தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உக்ரைன் மீதான இந்தப் போரை நிறுத்த, புதுச்சேரியைச் சேர்ந்த மணமக்கள் பதாகைகளுடன் வலியுறுத்தியிருக்கின்றனர். புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த, ’புதுவை விழித்தெழுந்த மாணவர் இளைஞர் பேரவை’ துணைத் தலைவர் அசோக்ராஜாவுக்கும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த கையோடு மணமேடையிலேயே மணமக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். "நாம் போரை முடிக்கவில்லையென்றால், போர் நம் மனிதகுலத்தையே முடிவுக்கு கொண்டு வந்துவிடும்", "போரை நிறுத்தி மக்களை நேசியுங்கள்" போன்ற வாசகங்கள் பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.

இது குறித்து நாம் அசோக்ராஜா - சத்யா தம்பதியினரைத் தொடர்புகொண்டு பேசினோம். " உக்ரைன்-ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்திய அரசு நம் நாட்டு மக்களைத் தாயகம் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. ஆனால், உக்ரைனில் உள்ளவர்களும் மனிதர்கள்தான், அவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக இந்திய அரசு இரண்டு நாடுகளிடமும் பேசித் தீர்வுகாண வேண்டும். அமைதி நிலவி உக்ரைனிலுள்ள வீடுகளிலும் சுபநிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். அதற்காகவே எனது திருமணத்தில் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தக் கோரி பதாகை ஏந்தி கோரிக்கை விடுத்தோம்" என்கிறார் அசோக்ராஜா.