Published:Updated:

வீரர்களின் வாரிசுகளுக்கு வெற்றி!

மரகதம்
பிரீமியம் ஸ்டோரி
மரகதம்

அதுபோலத்தான் விடுதலை வீரர்கள் மருதுபாண்டியர்களின் பெண் வாரிசு என்கிற அங்கீகாரம், பென்ஷனுக்காக 38 வருடங்களாகப் போராடி, சட்டரீதியாக வெற்றிபெற்றுள்ளார்கள்,

வீரர்களின் வாரிசுகளுக்கு வெற்றி!

அதுபோலத்தான் விடுதலை வீரர்கள் மருதுபாண்டியர்களின் பெண் வாரிசு என்கிற அங்கீகாரம், பென்ஷனுக்காக 38 வருடங்களாகப் போராடி, சட்டரீதியாக வெற்றிபெற்றுள்ளார்கள்,

Published:Updated:
மரகதம்
பிரீமியம் ஸ்டோரி
மரகதம்

விடுதலைப் போராட்டத்தில், தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழகப் போராளிகளை நினைவுகூரும் தமிழக அரசின் வாகனத்தை மத்திய பா.ஜ.க அரசு குடியரசு தின விழா அணிவகுப்பில் நிராகரித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

இது ஒரு பக்கமென்றால், அப்படிப்பட்ட போராளிகள், அவர்களின் வாரிசுகள், தாங்கள்தான் வாரிசுகள் என்பதை நிரூபிக்க பெரும் போராட்டமே நடத்திவருவது கசப்பான உண்மை. விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்கள் வாரிசுகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் கௌரவித்து, மாதந்தோறும் பென்ஷனும் இன்னும் பல சலுகைகளும் வழங்கிவருகின்றன. பென்ஷன் பெறுவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கும், நீதிமன்றத்துக்கும் ஆண்டுக்கணக்கில் அலைகின்ற எண்ணற்ற விடுதலைப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகளை இப்போதும் காணலாம்.

அதுபோலத்தான் விடுதலை வீரர்கள் மருதுபாண்டியர்களின் பெண் வாரிசு என்கிற அங்கீகாரம், பென்ஷனுக்காக 38 வருடங்களாகப் போராடி, சட்டரீதியாக வெற்றிபெற்றுள்ளார்கள், சகோதரிகளான மரகதம், கனகா, ராஜேஸ்வரி ஆகியோர். இதற்காக இவர்கள் நடத்திவந்த போராட்டம் சாதாரணமானது அல்ல. ஏற்கெனவே மருது பாண்டியர்களின் 202 வாரிசுகளுக்கு அரசு பென்ஷன் வழங்கிவரும் நிலையில், இவர்கள் மட்டும் இத்தனை ஆண்டுகள் போராட வேண்டிய காரணம் என்ன?

வீரர்களின் வாரிசுகளுக்கு வெற்றி!
வீரர்களின் வாரிசுகளுக்கு வெற்றி!

1772-ல் சிவகங்கைமீது போர் தொடுத்த பிரிட்டிஷ் படை, சமஸ்தானத்தைக் கைப்பற்றி மன்னர் முத்துவடுகநாதரைக் கொன்றது. ராணி வேலுநாச்சியாரை பிரிட்டிஷ் படையினரிடம் சிக்காமல் பாதுகாத்து, திண்டுக்கல் விருப்பாச்சிக்கு அழைத்துச் சென்று, தலைமறைவாக வாழ்ந்தபடி படை திரட்டினர். பின்னர் மைசூரை ஆண்ட ஹைதர் அலி படையுடன் இணைந்து, பிரிட்டிஷ் படைமீது போர் தொடுத்து, சிவகங்கையை மீட்டு 1780-ல் வேலு நாச்சியாரை சிவகங்கை ராணியாக அமரவைக்கப் பக்கபலமாக இருந்தவர்கள், மருது பாண்டியர்கள் என்றழைக்கப்பட்ட தளபதிகளான சின்னமருது, பெரியமருது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் முக்குளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மருது சகோதரர்கள், சிவகங்கை சமஸ்தானத்தில் படைத் தளபதிகளாக இருந்து பின்பு அமைச்சர்களாகவும், வேலுநாச்சியார் மறைவுக்குப் பின்பு சிவகங்கையின் மன்னர்களாகவும் ஆட்சிபுரிந்தனர்.

அதன் பின்பு, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், ஆதரவளிக்கும் பாளையக்காரர்களை எச்சரிக்கும் வகையிலும், `ஜம்புத்தீவு பிரகடனம்' எனும் பிரகடனத்தை வெளியிட்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிரவைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசு, கூடுதல் படைகளை அனுப்பி மருது சகோதரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. அவர்களை சரணடையச் சொல்லிப் பேச்சுவார்த்தை நடத்தியது. சின்னமருது, பெரியமருது உள்ளிட்ட அவர் குடும்பத்தினரைத் திருப்பத்தூர் கொண்டுசென்று தூக்கிலிட்டது பிரிட்டிஷ் அரசு. சின்னமருதுவின் மூன்றாவது மகன் துரைச்சாமி பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டதால், அங்கு கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து, நீண்ட காலத்துக்குப் பின்பு தமிழகம் திரும்பினார்.

வீரர்களின் வாரிசுகளுக்கு வெற்றி!

மருது சகோதரர்களின் மரணத்துக்குப் பின்பு எஞ்சிய வாரிசுகளும், நெருங்கிய உறவினர்களும் தமிழகம் முழுவதும் சிதறிக் கிடந்தனர். நாட்டுக்காகத் தியாகம் செய்த மருது சகோதரர்களின் வாரிசுகளுக்கு உதவிசெய்ய நினைத்த தமிழக அரசு, 1982-ல் ராக்கப்பன் கமிட்டியை அமைத்து, மருது சகோதரர்களின் வாரிசுகளைக் கணக்கெடுக்க உத்தரவிட்டது. அந்த அடிப்படையில், மருது சகோதரர்களின் வாரிசுகள் என 202 பேரைக் கண்டுபிடித்துப் பரிந்துரைத்ததன் அடிப்படையில், அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டுவருகிறது.

அதேநேரம், மருது சகோதரர்களின் பெண் வாரிசுதாரர்கள் யாரையும் அந்த கமிட்டி பரிந்துரை செய்யாததால், மருது பாண்டியர்களின் வாரிசுகளாகத் தங்களை அங்கீகரிக்க வேண்டும்; உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் வசிக்கும் மரகதம், சிவகங்கை கனகா, விருதுநகர் ராஜேஸ்வரி ஆகியோர் தொடர்ந்து அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டுவந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.

தங்கள் கோரிக்கையை நிராகரித்த ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவை ரத்து செய்யவும், தாங்களும் வாரிசுகள்தான் என்பதை அங்கீகரித்து பென்ஷன் வழங்க வலியுறுத்தியும், 2017-ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

வீரர்களின் வாரிசுகளுக்கு வெற்றி!

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘18-ம் நூற்றாண்டில் சமரசமின்றிப் போராடியவர்கள் மருது சகோதரர்கள். இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவர்களின் வாரிசுகளுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. இவர்களின் சகோதரர்கள் பெயர் 202 கொண்ட பட்டியலில் உள்ளபோது, இவர்களை மட்டும் புறக்கணித்தது சரியல்ல. விடுதலைப் போராட்ட வாரிசுகள் அங்கீகாரத்தில் பாலினப் பாகுபாடு கூடாது. இவர்கள் மருது சகோதரர்களின் வாரிசுகள் என்ற அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், பென்ஷன் வழங்குவது தொடர்பாக 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கடந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், அதற்குப் பின்பும் நீதிமன்றத்தின் உத்தரவு கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் அவர்கள் புதிய அரசிடம் கோரிக்கை வைக்க... பென்ஷன் வழங்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தங்கள் 38 வருடப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர் சகோதரிகள். இதுகுறித்து ராமநாதபுரம் அருகில் உச்சிப்புளியில் சிறிய அளவில் உணவகம் நடத்திக் கொண்டு வாழ்ந்துவரும் மரகதம் அம்மாவிடம் பேசினோம், ‘‘கடந்த 38 வருஷமா நாங்க நடத்துன போராட்டத்துக்கு இப்போதுதான் ஒரு முடிவு கிடைச்சிருக்கு. அரசு தரும் காசுக்காக மட்டும் இந்தப் போராட்டத்தை நடத்தலை. நாங்களும் மாமன்னர் மருது பாண்டியர்களின் வாரிசுங்கதான்கிற அங்கீகாரத்தை வாங்கத்தான் இவ்வளவு போராட்டமும்.

நாங்க பெரிய மருதுவின் வாரிசுகள். அவருடைய மகன் முத்துச்சாமி, அவரோட மகன் பெரியசாமி சேர்வை, அவர் மகன் பிச்சை சேர்வை, அடுத்து மருது சேர்வை, அடுத்து முத்துக்கருப்பு, அவங்க மகன் பிச்சை சேர்வை, அவரோட மகன்தான் எங்க அப்பா வெள்ளைச்சாமி சேர்வை. இத்தனை தலைமுறை தாண்டி வந்திருக்கோம். இதுல வாரிசுகளைக் கணக்கெடுத்தபோது சரியாத்தான் எடுத்தாங்க. ஆனா, எங்க கூடப் பொறந்த ஆம்பளை ஆளுங்களைத் தேர்வு செஞ்சவங்க, பெண்கள் எங்க மூணு பேரைச் சேர்க்கலை. கூடப் பொறந்த சகோதரர்களும் இதுல பெரிய ஆர்வம் காட்டல. எங்களுக்கு என்ன வருத்தம்னா, வாரிசுன்னா எல்லோரும் வாரிசுகள்தான். இதுல எங்கள மட்டும் நீக்குனது எந்த வகையிலும் நியாயமில்லை. நாங்க வேற வேற ஊர்களுக்கு வாக்கப்பட்டுப்போனாலும், நாங்களும் பெரிய மருதோட வாரிசுகள்தானே.

முக்குளம், நரிக்குடி, சூடியூர், கொம்புக்காரனேந்தல், சிவகங்கைன்னு பல ஊர்கள்ல வாரிசுகள் இருந்தாங்க. அதுல பெண் வாரிசுகளான எங்க மூணு பேரையும் வாரிசா அறிவிக்கணும்னு சொல்லி கலெக்டர்கிட்டே மனு கொடுத்தோம். எங்களுக்கு அந்த உரிமை இல்லேன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. தொடர்ந்து அதிகாரிங்க, அமைச்சர்கள்கிட்டே மனு கொடுத்து ஒண்ணும் நடக்காததால, உயர் நீதிமன்றத்துல வழக்கு போட்டோம். அதுக்குள்ள ரிக்கார்டு எல்லாம் ஒப்படைச்சோம்.

விசாரிச்ச நீதிபதி எங்களை வாரிசுன்னு அறிவிச்சு, பென்ஷன் வழங்க கடந்த வருசம் உத்தரவிட்டாங்க. நான் இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்து, மகளிர் சுய உதவிக்குழுவுல சிறப்பாச் செயல்பட்டு இந்தக் கடைய வச்சிருக்கேன். எங்கே எந்தத் தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்பேன். யாருக்கும் ஒரு பிரச்னைன்னா உதவி செய்வேன். சாதி மதம் பார்க்காமல் ஆதரவில்லாதவங்களுக்கு தினமும் சாப்பாடு கொடுக்கிறேன். நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தாலும், மருது பாண்டியரோட வாரிசுங்கிற உரிமையை வாங்குனதுதான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்றார்.

மருது சகோதரர்களின் போர்க்குணம் அவர்கள் வாரிசுகளின் உதிரத்திலும் ஊறியிருக்கும்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism