அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

ரத்தத்தில் நனையும் காஷ்மீர்! - மீண்டும் படுகொலைகள்... என்ன காரணம்?

காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீர்

கிராமப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது... அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது’ என்று பிரதமர் மோடி தொடங்கி பா.ஜ.க-வினர் அனைவரும் சொல்லிவருகிறார்கள். ஆனால், ‘ஜம்மு காஷ்மீரில் நிலவும் அமைதி, மயான அமைதி. காஷ்மீர் மக்களின் குரல்வளைகள் துப்பாக்கிமுனையால் நசுக்கப்பட்டிருக்கிறது’ என்பதே காஷ்மீர் தலைவர்களின் கருத்தாக இருக்கிறது!

‘காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பு, எந்த ஊரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினாரோ, அதே ரஜோரியில் இன்று துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. அங்கு, சமீபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேரை வீடு புகுந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் பயங்கரவாதிகள். ரத்தத்தில் நனையும் காஷ்மீருக்கு, 1,800 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

ரத்தத்தில் நனையும் காஷ்மீர்! - மீண்டும் படுகொலைகள்... என்ன காரணம்?

பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு இப்போது இலக்காகியிருப்பது சிறுபான்மை இந்துக்களும், வெளிமாநிலத்தவரும்தான். இதிலிருந்தே இந்தப் பிரச்னையின் பின்னணியைப் புரிந்துகொள்ளலாம். 2019, ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு முன்புவரை, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க உரிமை கிடையாது; வெளிமாநிலத்தவர் ஜம்மு காஷ்மீரில் வசிக்க வேண்டுமென்றால், அதற்கான சான்றிதழைப் பெறவேண்டியது கட்டாயம். இந்தக் கட்டுப்பாடுகளை 2019, ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு தளர்த்திவிட்டது. இந்தச் சூழலில், “வெளிமாநிலத்தவரை காஷ்மீருக்குள் அனுமதித்து, மக்கள்தொகை விகிதாசாரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முயல்கிறது என்று பயங்கரவாத அமைப்புகள் கருதுகின்றன. இந்தப் பின்னணியில்தான், இந்துக்களையும் வெளிமாநிலத்தவரையும் குறிவைத்துத் தாக்குதல்கள் நடக்கின்றன” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. ‘வாக்காளர் பட்டியலில் சேர 25 லட்சம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றிருப்பதாக’ மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சொல்ல, ‘அந்த 25 லட்சம் புதிய வாக்காளர்கள் பா.ஜ.க-வின் ஆதரவாளர்கள்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி. இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் ஆணையம், ‘அந்த 25 லட்சம் பேர், 18 வயதை நிறைவுசெய்த புதிய வாக்காளர்கள்’ என்று தெரிவித்திருக்கிறது.

பயங்கரவாதச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியிருப்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட கிராமப் பாதுகாப்புக் குழுக்களை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் முடுக்கிவிட்டிருக்கிறது. கிராமப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன.

காஷ்மீரில் அமைதி திரும்பட்டும்!