அலசல்
சமூகம்
Published:Updated:

வீட்டுக்கே வந்து மசாஜ் செய்கிறோம்... வில்லங்க வலை... வீடியோ... மிரட்டல்!

மசாஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
மசாஜ்

‘இரண்டு நாள்களுக்குள் தாங்கள் கேட்கும் பணத்தைத் தராவிட்டால், நிர்வாணப் புகைப்படத்தையும் வீடியோவையும் இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நாயகன், ரயில் பயணத்தின்போது நாயகியைச் சந்திப்பார். அவர்களின் எதிர்பாராத நட்பு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கும் அளவுக்குச் சென்றுவிடும். இருவர் இருக்கும் அறைக்குள் நுழையும் ஒரு நபர், நாயகியைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, இருவரிடமும் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு சென்றுவிடுவான். அடுத்தடுத்த நாள்களில் பணம் கேட்டு நாயகனை மிரட்டும் அந்த நபர், `பணம் தரவில்லையென்றால் ஹோட்டல் அறையில் நாயகியுடன் இருந்தது குறித்து உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன்’ என்று மிரட்டுவான். இதற்கு பயந்து நாயகன் தன் மகனின் சிகிச்சைக்காக வைத்திருக்கும் பணத்தைத் தந்துவிடுவார். அதன் பின்னரே நாயகனுக்கு, நாயகியும் பிளாக்மெயில் செய்யும் நபரும் சேர்ந்துதான் இந்த நாடகத்தை நடத்தினார்கள் என்ற உண்மை தெரியும். இந்தத் திரைப்படத்தைப்போலவே ஒரு நிஜ சம்பவம் திருப்பூரிலும் நடந்திருக்கிறது.

திருப்பூர் அவரப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ். 63 வயதாகும் இவர் ஃபர்னிச்சர் கடை நடத்திவருகிறார். இவரது செல்போனுக்கு அக்டோபர் 24-ம் தேதி திவ்யா என்ற பெண்ணிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. போனில் அழைத்த பெண், ‘உங்களுக்கு மசாஜ் செய்துகொள்ள விருப்பமிருந்தால், உங்கள் வீட்டுக்கே வந்து மசாஜ் செய்துதருகிறோம். இதற்குக் கட்டணமாக 1,200 ரூபாய் கொடுத்தால்போதும்’ எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அன்றிரவே அந்தப் பெண்ணை வரச்சொல்லி கடையின் பின்புறமுள்ள அறையில் வைத்து சண்முகராஜ் மசாஜ் செய்யச் சொல்லியிருக்கிறார். அதில் மகிழ்ந்துபோன சண்முகராஜ், இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அதே பெண்ணை தனக்கு மசாஜ் செய்ய வரும்படி அழைத்திருக்கிறார்.

வீட்டுக்கே வந்து மசாஜ் செய்கிறோம்... வில்லங்க வலை... வீடியோ... மிரட்டல்!

அதன்படி, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நேரில் வந்த அந்தப் பெண், ஃபர்னிச்சர் கடைக்குப் பின்புறமுள்ள அறையில்வைத்து சண்முகராஜுக்கு மசாஜ் செய்திருக்கிறார். திடீரென அறைக்குள் நுழைந்த மூன்று இளைஞர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சண்முகராஜையும், அந்தப் பெண்ணையும் நிர்வாணமாக்கி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். மேலும், சண்முகராஜ் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் மூன்று ஏ.டி.எம் கார்டுகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பியோடினர்.

ஒரு ஏ.டி.எம் கார்டிலிருந்து ரூ.22,100 எடுத்த அந்தக் கும்பல், ‘இரண்டு நாள்களுக்குள் தாங்கள் கேட்கும் பணத்தைத் தராவிட்டால், நிர்வாணப் புகைப்படத்தையும் வீடியோவையும் இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம்’ என்று சண்முகராஜை மிரட்டியிருக்கிறார்கள். பயந்துபோன சண்முகராஜ், பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், மசாஜ் செய்த பெண்ணும், அந்த இளைஞர்களும் கூட்டுச் சேர்ந்து, இந்த நாடகத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார், இந்தச் செயலில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், பெரியசாமி நகரைச் சேர்ந்த கோகுல்ராஜ், யுவராஜ், உடுமலை எலையமுத்தூரைச் சேர்ந்த புஷ்பலதா ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், “இந்தக் கும்பல் சட்டவிரோதமாக இயங்கும் மசாஜ் சென்டர்களுக்கு அடிக்கடி வருவோரின் எண்களைப் பெற்று, அவர்களின் வீட்டுக்கே வந்து மசாஜ் செய்வதாக ஆசைவார்த்தை கூறியிருக்கிறது. அதன்படி, சண்முகராஜின் எண்ணையும் ஏதோ ஒருவழியில் இந்தக் கும்பல் பெற்றிருக்கிறது. புஷ்பலதாவை விசாரித்தபோது, `கோகுல்ராஜும் யுவராஜும் என்னுடன் உடுமலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். இது போன்று மசாஜ் செய்யப் போகும்போது, இருவரையும் பாதுகாப்புக்காக அழைத்துச் செல்வேன். இதற்கு அவர்களுக்கு ஒரு தொகையைத் தந்துவிடுவேன்.

யுவராஜ், கோகுல்ராஜ், புஷ்பலதா
யுவராஜ், கோகுல்ராஜ், புஷ்பலதா

சண்முகராஜுக்கு முதல் தடவை மசாஜ் செய்யப்போகும்போது, ரூ.5,000 தருவதாகக் கூறினார். ஆனால், ரூ.1,200-தான் தந்தார். இதனால், இரண்டாவது தடவை மசாஜ் செய்யப்போகும்போது, பழைய பாக்கியையும் சேர்த்து வசூலிக்க கோகுல்ராஜ், யுவராஜ் இருவரையும் அழைத்துச் சென்றேன்’ என்றே முதலில் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து புஷ்பலதாவிடம் விசாரிக்கையில், இது தனக்கு முதல் சம்பவம் என்றும், கோகுல்ராஜ், யுவராஜ், மற்றொருவர் இணைந்துதான் சண்முகராஜை மிரட்டி வீடியோ எடுத்ததாகத் தெரிவித்தார்.

முதலில் சண்முகராஜை மிரட்டி 5 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள். அதன் பிறகு படிப்படியாகத் தொகையைக் குறைத்து 2 கோடி ரூபாயும், அதைத் தொடர்ந்து 50 லட்ச ரூபாய் கொடுக்குமாறும் மிரட்டியிருக்கிறார்கள். இதற்கு சண்முகராஜ் உடன்படாததால் கடைசியாக 2 லட்ச ரூபாய்க்கு இறங்கி வந்திருக்கிறார்கள். இவர்களின் தொடர் மிரட்டலுக்கு பயந்தே சண்முகராஜ் போலீஸில் புகார் அளித்தார். இந்தக் குற்றச் செயல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர் தலைமறைவாக இருக்கிறார். அவரைத் தேடிவருகிறோம். அவரைப் பிடித்து விசாரித்தால்தான், இதுவரை யார் யாரையெல்லாம் இந்தக் கும்பல் இப்படி மிரட்டிப் பணம் பறித்தது என்பது தெரியவரும்” என்றனர்.

சட்டவிரோதமாக இயங்கும் மசாஜ் சென்டர்களுக்குச் செல்வோருக்கு, திருப்பூர் சம்பவம் ஓர் எச்சரிக்கை!