Published:Updated:

அமெரிக்காவின் Chemtool இரசாயன ஆலையில் தீ விபத்து… சுற்றுசூழலுக்கும், உயிரினங்களுக்கும் பேராபத்து!

Chemtool fire
Chemtool fire

Lead, nitrogen, sulfuric acid, போன்ற பல இரசாயனங்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் அவற்றில் ஏற்பட்டிருக்கும் இந்த பெரிய தீவிபத்து கணக்கில் அடங்கா சேதத்தை சூழலுக்கும் அதன் உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

எரிமலை சீற்றம், இரசாயனக் கப்பல் தீ விபத்து என மக்களையும் சூழலையும் ஒன்றன் பின் ஒன்றாக விடாது தாக்கிக் கொண்டிருக்கும் அழிவுகளில், அடுத்தது அமெரிக்காவின் வடக்கு இல்லினாய்ஸ் ரசாயன ஆலையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய வெடி விபத்து.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் என்ற இடத்தில் புகழ்பெற்ற ராக் ரிவரின் அருகே அமைந்துள்ள Chemtool இரசாயன ஆலையில் திங்கள் அன்று ஏற்பட்ட தீ விபத்து இன்று வரை விண்ணை முட்டும் தீச்சுவாலைகளாக கொழுந்து விட்டு ஆக்ரோஷமாக எரிந்து கொண்டிருக்கிறது. பல மைல் தூரத்திற்கு பரந்துள்ள தடிமனான கரிய புகை மூட்டம் அந்த இடத்தையே மயான நிலைக்கு மாற்றியுள்ளது.

உள்ளே எரியும் அட்டைப் பெட்டிகளின் துண்டுகள், கொள்கலன்கள் மற்றும் மரத்தாலான பலகைகளின் சாம்பலும் துகள்களும் காற்றில் அள்ளிச் செல்லப்பட்டு மாலை மாலையாக, மழை போல வானிலிருந்து கொட்டுகிறது. அருகில் இருக்கும் நீர் நிலைகளுக்குள் கலக்கும் ஒவ்வொரு துளி இரசாயனமும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இதனாலேயே பக்கத்தில் இருக்கும் ராக் ஆற்றில் இருந்து தீயணைப்பிற்காக மேற்கொண்டு நீரை எடுப்பதையும் அவர்கள் உடனடியாக நிறுத்தி உள்ளனர்.

விபத்தின்போது ஆலையில் பணியில் இருந்த 70 ஊழியர்களும் பாதுகாப்பாக உடனே வெளியேற்றப்பட்டதாகவும், தீயணைப்பு நடவடிக்கையின் போது ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலைக்கு அருகில் உள்ள வீடுகளில் வசித்த மக்களையும், வணிக நிறுவனங்களையும் கட்டாயமாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே போல வளி மாசு காரணமாக மூன்று மைல் சுற்றளவில் உள்ளவர்களை முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணியுமாறும் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

chemtool fire
chemtool fire

Lead, nitrogen, sulfuric acid, போன்ற பல இரசாயனங்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் அவற்றில் ஏற்பட்டிருக்கும் இந்த பெரிய தீவிபத்து கணக்கில் அடங்கா சேதத்தை சூழலுக்கும் அதன் உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக அறியப்படவில்லை என்றும், உள்ளே இருக்கும் தீ பிடிக்கும் இரசாயனங்கள் முற்றாக எரிந்து அணைய இன்னும் பல நாட்கள் எடுக்கும் என்றும் ராக்டன் தீயணைப்புத் துறைத் தலைவர் கிர்க் வில்சன் தெரிவித்துள்ளார்.

Chemtool இரசாயன ஆலையில் ஆட்டோமொபைல் மற்றும் தொழில்துறை இயந்திர உற்பத்திக்கான பூச்சு, கிரீஸ்கள் மற்றும் மேலும் பல இரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வாகன, கட்டுமானம், எரிசக்தி, விவசாயம், உணவு மற்றும் கனரக மொபைல் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள வேறு எந்த ஆலையையும் விட அதிகமான தொழில்துறை கிரீஸை உற்பத்தி செய்யும் இந்த ஆலையில், டஜன் கணக்கான இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் ஈயம் மற்றும் சல்பூரிக் அமிலம் போன்றவை சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

இரசாயனப் பொருட்களின் பயன்பாடு மற்றும் உருவாக்கம், வெப்பத்தை உருவாக்கும். வெப்பம் மற்றும் இரசாயனங்கள் ஒன்றிணையும் போது ஏற்படக்கூடிய எதிர்வினைகள் மூலம், பெரிய வெடிப்புகள் ஏற்படக்கூடும். இது தீக்காயங்கள், நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறுகள், வளி நீர் மற்றும் நில மாசு, சுற்றுச்சூழல் வாழ்வாதார கட்டமைப்பை சிதைத்தல், சொத்து சேதங்கள் உள்ளிட்ட கடுமையான உடனடிப் பாதிப்போடு மட்டும் நின்று விடாமல் எதிர்கால சூழலிலும், சமூகத்திலும் கூட தொடர்ச்சியான, சரி செய்யப்பட முடியாத சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

இவ்வாறான விபத்துகள் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வரும் ஒரு துயரம்தான். டிசம்பர் 3, 1984-ல் இந்தியாவின் போபாலில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடின் பூச்சிக்கொல்லி ஆலையில் மீதில் ஐசோசயனேட் (methyl isocyanate) எரிவாயு கசிவு, அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள இங்கிலாந்து எண்ணெய் நிறுவனமான பி.பியின் டெக்சாஸ் சிட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட இரசாயன கசிவு, 1988-ல் அமெரிக்காவின் ஹென்டர்சன், நெவாடா ராக்கெட் எரிபொருள் (ammonium percolate) ஆலை வெடிப்பு, செப்டம்பர் 2012-ல், ஜப்பானின் ஹியோகோ ப்ரிபெக்சரில் உள்ள ஒரு இரசாயன ஆலை விபத்து என இந்த விபத்துக்களின் பட்டியல் நீடித்துக்கொண்டே செல்கிறது.

chemtool fire
chemtool fire

மக்கள் தொகை அதிகரிப்பு, நிலப்பற்றக்குறை மற்றும் அதிகரித்து வரும் தொழில் துறை வளர்ச்சியின் விளைவாக பல இரசாயன ஆலைகள் மக்கள் குடியிருக்கும் இடங்களிலேயே அமைக்கப்பட்டு வரும் சூழலில், ஒரு இரசாயன ஆலையின் வெடிப்புக்கு பல வேறுபட்ட காரணிகளும் சூழ்நிலைகளும் வழிவகுக்கின்றன.

மனிதனின் அலட்சிய போக்கு, மின்னல் புயல்கள் அல்லது பூகம்பங்கள் போன்ற இயற்கை அழிவுகள், இயந்திரங்களின் முறையற்ற பராமரிப்பு மற்றும் செயலிழப்பு, கண்டறியப்படாத அல்லது கவனிக்கப்படாத கசிவுகள், சரியாக பராமரிக்கப்படாத கொதிகலன்கள், இரசாயனங்களின் முறையற்ற சேமிப்பு, அபாயகரமான இரசாயனங்களின் போக்குவரத்து, பணியாளர்களின் போதிய பயிற்சி இன்மை, உபகரணங்களின் செயல்பாட்டில் மனித பிழை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் இவ்வாறான விபத்துக்கள் சூழலியலை மிகப் பெரும் அளவில் பாதிப்பதோடு மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினருக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடுகிறது. அலட்சியம் அல்லது துரதிர்ஷ்டம் மிகவும் எளிதாக பல பேரழிவுகளை ஏற்படுத்திச் சென்றுவிடுகிறது.

chemtool fire
chemtool fire

இரசாயனங்கள் நமது நவீன உலகின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறி விட்டன. வேதிப் பொருட்களின் பயன்பாடு பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இந்த இரசாயனங்கள் ஆபத்தான வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பது துரதிர்ஷ்டவசமான உண்மை. அதற்கு அப்பாவி மனிதர்களும், விலங்குகளும் சூழலும் தான் இறுதியில் விலை கொடுத்தாக வேண்டும்.

ஒவ்வொரு பேரழிவிலிருந்தும் மனிதன் பாடங்களைக் கற்றுக்கொண்டு தான் இருக்கிறான். இருந்தும் விபத்துக்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன!

அடுத்த கட்டுரைக்கு