அலசல்
சமூகம்
Published:Updated:

“கொஞ்சம் அசந்திருந்தால் எங்கள் பிணம்தான் ஒதுங்கியிருக்கும்” - துயரத்தில் மயிலாடுதுறை மக்கள்

பயிர் சேதம்
பிரீமியம் ஸ்டோரி
News
பயிர் சேதம்

மூன்று ஆறுகள் இணையும் இடமென்பதால் ஆண்டுதோறும் கனமழை பெய்யும்போது எங்கள் ஊருக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கைதான்

தமிழ்நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்திருக்கும் இந்தப் பெருமழையால், சீர்காழி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. காவிரியின் கிளை நதிகளான உப்பனாறு, புதுமன்னியாறு ஆகியவற்றில் ஏற்பட்ட கரை உடைப்பால், பல கிராமங்கள் தீவுகளாக மாறி, வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்திருக்கிறது.

மேலும், மூன்று நாள்களுக்கும் மேலாக மின்சாரம் தடைசெய்யப்பட்டதால் இருளிலும், தேங்கிய மழைநீரிலும், கொடிய விஷப்பூச்சிகளிடையேயும் மக்கள் தவித்துப்போயிருக்கிறார்கள்.

“கொஞ்சம் அசந்திருந்தால் எங்கள் பிணம்தான் ஒதுங்கியிருக்கும்” - துயரத்தில் மயிலாடுதுறை மக்கள்

மிகுந்த பாதிப்புக்குள்ளான சீர்காழி தெட்சிணாமூர்த்தி நகரில் வசித்துவரும் அபிவர்ஷினி, “இங்கு இது போன்ற பெருமழையை நாங்கள் பார்த்ததேயில்லை. யாரும் வீட்டைவிட்டே வெளியே போக முடியவில்லை. குடிநீர் சரியாகக் கிடைப்பதில்லை. வீட்டுக்குள் பாம்புகள் புகுந்துவிடுகின்றன. 2015-ல் சென்னை பெருவெள்ளம் வந்தபோது, மக்கள் அனுபவித்த கஷ்டங்களை இப்போது நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார் நொந்தவாறு.

மங்கைமடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி, “எங்க ஊரில் மட்டும் 126 ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கிவிட்டன. வயல், வீடு என அனைத்தும் வெள்ளக்காடாகிவிட்டன. மின்சாரமும் இல்லாததால், இருள் சூழ்ந்த தீவாகவே ஊர் மாறிவிட்டது. நாங்கள் உயிருடன் இருக்கிறோமா, இல்லையா என்று பார்க்கக்கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை” என்றார் கோபமாக.

சூரக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், “மூன்று ஆறுகள் இணையும் இடமென்பதால் ஆண்டுதோறும் கனமழை பெய்யும்போது எங்கள் ஊருக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கைதான். ஆனால், இந்த முறை நடுராத்திரியில் ஆற்றின் கரை உடைந்து திடீரென வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட்டது. மார்பளவுத் தண்ணீரில், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ரோட்டுக்கு வந்து உயிர்பிழைத்தோம். சோறு சமைக்க வைத்திருந்த அரிசி உட்பட எல்லாமே வெள்ளத்தில் போய்விட்டன. ஊருக்குள் வெள்ளம் வருவதைத் தடுக்க, ஏழு மாதங்களுக்கு முன்புதான் கரைகளை மண்ணால் உயர்த்தினார்கள். அப்போதே நாங்கள் ‘கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டிக்கொடுங்கள்’ என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், செய்யவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியில் பணியைத் தரமாகச் செய்திருந்தால், இப்போது எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. கொஞ்சம் அசந்திருந்தால், எங்கள் உடல்கள்தான் கரை ஒதுங்கிக் கிடந்திருக்கும்” என்றார் ஆதங்கத்தோடு.

செல்வம்
செல்வம்

பொன்செய் கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி ராமச்சந்திரன், “மார்க்கெட்டுக்கு வெட்டி அனுப்புவதற்காகத் தயாராக இருந்த 400 வாழைத்தார்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன. வரும் பொங்கலுக்குப் பலன் கொடுக்கவேண்டிய வாழை மரங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியிருப்பதால், எனக்கு மட்டுமே 6 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே தி.மு.க அரசு சென்னைக்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதே முக்கியத்துவத்தை, தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு’’ என்றார் சோகமாக.

மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 17,000 பேர், 36 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை பெய்த கனமழையில், 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 36 பசு மாடுகள், 34 கன்றுக்குட்டிகள், 62 ஆடுகள் உயிரிழந்திருப்பதாகவும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், கடலோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இறால் பண்ணைகள் பேரழிவைச் சந்தித்திருக்கின்றன. சுமார் 2,000 டன் இறால்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

கடந்த 14.11.2022 அன்று, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, உமையாள்பதி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, “தமிழ்நாட்டிலேயே கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரசு எடுத்த துரித நடவடிக்கைகளால், மக்கள் அனைவரும் இப்போது திருப்தியாக இருக்கிறார்கள். இருந்தபோதிலும், இது போதாதென நானும் நேரடியாக வந்து ஆய்வு செய்திருக்கிறேன்” என்றார் முதல்வர்.

இதைத் தொடர்ந்து, சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் வாழும் மக்களுக்குக் குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் நிவாரணமும், உயிரிழந்த கால்நடைகளுக்கு 30 ஆயிரம், ஆட்டுக்கு 3 ஆயிரம், கோழிக்கு 100 ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் முதல்வர். நெற்பயிர்களைப் பொறுத்தவரை கணக்கெடுப்புக்குப் பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். இருந்தாலும், ‘எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஹெக்டேருக்கு 75 ஆயிரம் கேட்ட ஸ்டாலின் இப்போது அதை வழங்க வேண்டும்’ என்று ஓ.பி.எஸ்-ஸும், இ.பி.எஸ்-ஸும் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்!

என்ன செய்யப்போகிறது தி.மு.க அரசு?

தத்தளிக்கும் சிதம்பரம்!

கடலூர் மாவட்டத்தில், கடந்த 10-ம் தேதி இரவு தொடங்கி 12-ம் தேதி வரை வானத்தைக் கிழித்துக்கொண்டு கொட்டித் தீர்த்த மழையால், இதுவரை இல்லாத அளவுக்கு சிதம்பரம், வல்லம்படுகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 30.7 செ.மீ மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் 271 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், சுமார் 6,000 ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்!