அரசியல்
அலசல்
Published:Updated:

‘இன்னொரு எய்ம்ஸ் ஆகிவிடுமோ?’ - பதறும் மயிலாடுதுறை கல்லூரி மாணவர்கள்!

மாதிரிமங்கலம் ஊராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மாதிரிமங்கலம் ஊராட்சி

தற்போது கல்லூரியில் 300-க்கும் மேற்பட்டோர் படிக்கிறோம். ஆனால், ஒரு கழிப்பறைகூட இல்லை. மாணவர்களாவது எதிர்ப்புறம் உள்ள ஆற்றுப் பகுதியில் ஒதுங்குகிறார்கள்.

‘நூலும் இல்லை... வாலும் இல்லை... வானில் பட்டம் விடுவேனா?’ என்ற டி.ராஜேந்தர் பாடலைப்போல, வகுப்பறை, ஆசிரியர்கள், நூலகம், உணவகம், விளையாட்டரங்கம், கழிவறை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மயிலாடுதுறையில் ஓர் அரசுக் கல்லூரி செயல்படுவதாகத் தகவல் கிடைத்ததும் நேரில் சென்றோம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மாதிரிமங்கலம் ஊராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு அரசு கலைக் கல்லூரி ஒன்று தொடங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரிக்கென இடம் எதுவும் ஒதுக்கப்படாததால், தேரழுந்தூரிலுள்ள கம்பர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி செயல்பட்டது. முதற்கட்டமாக பி.ஏ (தமிழ், ஆங்கிலம்), பி.எஸ்சி (கணிதம், கணினி அறிவியல்), பி.காம் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடந்தது. முதலாம் ஆண்டில் 70 மாணவர்களும், அடுத்த கல்வியாண்டில் (2021-22) 200 மாணவர்களும் சேர்ந்தனர்.

‘இன்னொரு எய்ம்ஸ் ஆகிவிடுமோ?’ - பதறும் மயிலாடுதுறை கல்லூரி மாணவர்கள்!

இதையடுத்து, குத்தாலம் சமுதாயக்கூடத்துக்குக் கல்லூரி மாற்றப்பட்டது. கல்லூரிக்கு வந்த மாணவர்கள், மொத்தக் கல்லூரிக்கும் ஒரே ஒரு கட்டடம் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அதிலும், வகுப்பறையோ, கழிப்பறையோ, போதிய ஆசிரியர்களோ இல்லாததால், 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிப்படை வசதி வேண்டுமென்று மாணவர்கள் போராட்டம் செய்திருக்கிறார்கள். அன்று முதல் தற்போதுவரை அடிப்படை வசதிக்காக மாணவர்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இது குறித்து கல்லூரியில் பயிலும் மாணவர் மணிபாரதி நம்மிடம் பேசுகையில், “தற்போது கல்லூரியில் 300-க்கும் மேற்பட்டோர் படிக்கிறோம். ஆனால், ஒரு கழிப்பறைகூட இல்லை. மாணவர்களாவது எதிர்ப்புறம் உள்ள ஆற்றுப் பகுதியில் ஒதுங்குகிறார்கள். ஆனால், மாணவிகள், ஆசிரியைகளின் நிலைதான் பரிதாபம். வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியதோடு, குத்தாலம் தாசில்தாரிடம் மனுவும் கொடுத்தோம். நடப்புக் கல்வியாண்டில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்திருப்பதால், மாடியில் இரும்பு மேற்கூரை அமைத்து, அதை வகுப்பறைகளாக மாற்றியிருக் கிறார்கள். புதிதாக கட்டிய கழிப்பறையும் இன்னும் பயன் பாட்டுக்கு வரவில்லை. அரசுக் கல்லூரியை நம்பி வந்த நாங்கள் விளையாட்டு, தொழில்நுட்ப அறிவு, துறை சார்ந்த அறிவு எதையும் முழுமையாகப் பெறாமலேயே கல்லூரியை விட்டுச் செல்லப் போகிறோம்” என்றார் சோகத்துடன்.

‘இன்னொரு எய்ம்ஸ் ஆகிவிடுமோ?’ - பதறும் மயிலாடுதுறை கல்லூரி மாணவர்கள்!

மாணவர் ரஞ்சித் கூறுகையில், “இது முதலில் கல்லூரியே இல்லை. குடிக்கத் தண்ணீர்கூட இங்கு கிடையாது. கல்லூரிக்கு பஸ் வசதியும் இல்லை. மொத்தக் கல்லூரிக்கும் ஒரே ஒரு கணினி இருக்கிறது. ஆனால், இணைய வசதி கிடையாது. அட்மிஷனின்போது இன்னும் ஒரு மாதத்தில் நிரந்தரக் கட்டடம் வந்துவிடும் என்று சொன்னார்கள். அதை நம்பித்தான் சேர்ந்தேன். கல்லூரிக் காலம் இனிமையானது என்பார்கள். ஆனால், எங்களது கல்லூரிக் காலம், அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடத்தியே முடிந்துவிட்டது. பல ஆயிரம் பணம் கட்டி, தனியார் கல்லூரியில் சேர முடியாத ஏழை மாணவர்கள், இந்தக் கல்லூரியில் எதுவுமே இல்லையென்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் தான் சேருகிறார்கள். இந்தக் கொடுமை எங்களோடு போகட்டும். எங்களுக்கு அடுத்து வரும் மாணவர் களுக்காவது நல்ல கட்டடம் கட்டிக் கொடுங்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

மணிபாரதி
மணிபாரதி

இதற்கிடையே கல்லூரி முதல்வர் வெளியிட்டதாக ஓர் அறிக்கை மாணவர்கள் மத்தியில் பரவி, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், “கல்லூரியில் இருக்கும் வசதிகள் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்று கருதும்பட்சத்தில், வசதி வாய்ப்புள்ள கல்லூரியில் சேர்ந்து கொள்ளுங்கள். டி.சி தர கல்லூரி நிர்வாகம் தயார். என்னை தகாத வார்த்தைகளால் வாழ்த்தி கோஷமிட்ட மாணவர்கள் அனைவருக்கும் நன்றி. இனிமேல் ஆட்டம் ஆரம்பம்” என்று சினிமாத்தனமான பன்ச் இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது.

இது குறித்து கல்லூரி முதல்வர் விஜயேந்திரனிடம் கேட்டபோது, “469 பேர் படிக்கிற இந்தக் கல்லூரி, ஒரு சமுதாயக்கூடத்தில் ஐந்து அறைகளில்தான் இயங்கிவந்தது. நான் பணிக்கு வந்த 11 மாதங்களில் மேலும் 10 வகுப்பறைகள், ரூ.5 லட்சத்தில் கழிவறைகள் என எம்.பி சார் உதவியோடு கட்டி முடித்திருக்கிறேன். மேலும் போராடி ரூ.10 கோடியில் கல்லூரிக்கான கட்டடம் அமைக்கவும் அனுமதி பெற்றிருக்கிறேன். ஆனால் அதற்கான இடம் தேர்வு செய்து தருவதில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறையில்லை.

ரஞ்சித்
ரஞ்சித்

இந்தச் சூழ்நிலையில் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் சாலைமறியல் செய்வதும், அதற்கு சில அமைப்புகள் சப்போர்ட் செய்வதும் தொடர்கதையாக இருக்கிறது. அதைத் தீர்க்க வரும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் நயமாகப் பேசி, கல்லூரி முதல்வரான என்னை, நான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல் மன்னிப்புக் கேட்கச் சொல்கின்றனர். என் பெயரில் போலியான அறிக்கையை வெளியிடுகின்றனர். இதற்கெல்லாம் முக்கியக் காரணம் மூன்று மாணவர்கள்தான். அவர்களால் மொத்தக் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். வேறு வழியின்றி அந்த மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து, கல்லூரியைத் தற்காலிகமாக மூடியிருக்கிறோம். என்றாலும், மூன்றாமாண்டு மாணவர்களின் செய்முறைத் தேர்வுகள் இந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் நடைபெற விருப்பதால், அவர்களின் நலன் கருதி கல்லூரியைத் திறக்க ஏற்பாடு செய்துவருகிறேன்.

விஜயேந்திரன்
விஜயேந்திரன்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்து, ‘இனி தகாத நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன்’ என உறுதிமொழி கொடுத்தால் மீண்டும் சேர்த்துக்கொள்வோம். யாரையும் பழிவாங்கும் நோக்கம் எனக்கில்லை. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள 163 கல்லூரிகளில் இப்படியொரு மோசமான கல்லூரியை எனது பணியில் சந்தித்ததில்லை. எனக்குப் பணியிட மாற்றம் கொடுத்தாலும் சந்தோஷப்படுவேன். மாணவர்களின் நலனும், அவர்களின் எதிர்காலமும் முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும்” என்றார்.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகளிடம் பேசியபோது, “குத்தாலம் அரசு கலைக் கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வுசெய்யும் வேலை நடைபெற்றுவருகிறது. அதுவரை, மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும். தற்போது கூடுதலாக இரண்டு வகுப்பறைகளும், கழிப்பறையும் கட்டப்பட்டுவருகின்றன. அதேபோல, விரைவில் பேராசிரியர்களும் நியமிக்கப்படவிருக்கிறார்கள்” என்றனர்.

வேகமாக இடத்தைத் தேர்வுசெய்து, புதிய கட்டடம் கட்டுவது ஒன்றே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்!