Published:Updated:

``அரசியல்வாதியாக இருப்பேனே தவிர அரசியல் `வியாதி' யாக இருக்க மாட்டேன்" - துரை வைகோ

கடந்த சில வருடங்களாகக் கட்சியினர் என்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். ஆனாலும் நான் அரசியலுக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று துரை வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க-வின் தலைமை நிலையச் செயலாளராக புதிதாகத் தேர்வான துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று ம.தி.மு.க தலைமை எனக்குத் தலைமைக் கழகச் செயலாளர் என்ற பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. 106 பேரிடம் நடத்திய வாக்கெடுப்பில் 104 பேர் `வேண்டும்' என்றும் இரண்டு பேர் `வேண்டாம்' என்றும் வாக்களித்திருக்கின்றனர். இவ்வளவு பேர் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற மனச்சுமை என்னிடம் இருக்கிறது.

`எவ்வளவோ முயன்று பார்த்தேன்; ஆனால்..?!’ -துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து வைகோ

எனக்கு வாக்களிக்காத இருவரும், ‘தம்பிக்கு நாம் வாக்களிக்க வில்லையே’ என்று வருத்தப்படும் அளவுக்கு என்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு மலையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டது போன்ற சுமையாகவும் சவால் நிறைந்த பயணமாகவும் உணர்கிறேன்.

தலைவர் வைகோவைப்போல செயலாற்றல், சொல்லாற்றல் எனக்குக் கிடையாது. ஆனாலும் என்மீது தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் என்னால் முடிந்த வரை உழைக்கத் தயார். 6 சதவிகிதமாக இருந்த ம.தி.மு.க-வின் வாக்கு வங்கியில் கடந்த சில வருடங்களாக சிறிய தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அதைச் சரிசெய்து முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும். அதற்காக நான் கடமையாற்றுவேன்.

பேட்டியின்போது
பேட்டியின்போது

எனக்குப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று வெளியில் இருந்தோ குடும்பத்தில் இருந்தோ யாரும் தலைவருக்கு பிரஷர் கொடுக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு 6 சீட் ஒதுக்கப்பட்டபோதுகூட சாத்தூர் தொகுதி எனக்கு ஒதுக்கப்படும் எனப் பேசப்பட்டது. தி.மு.க தலைமையும் முக்கிய நிர்வாகிகளும் நான் நிற்க வேண்டும் என்று விரும்பினார்கள். பலரும் தலைவருக்கும் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் நானோ தலைவரோ அதை விரும்பவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் தலைவரின் விருப்பம். அவருக்கு மட்டுமல்லாமல் எனக்கும்கூட, அரசியல் என்பது நச்சு நிரம்பியது என்று நினைப்பவன். தலைவரைப் பொறுத்தவரைக் கடந்த சில வருடங்களாக நிறைய இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் நிர்வாகிகள், தொண்டர்களின் நல்லது கெட்டதுக்குச் செல்லத் தொடங்கினேன். அப்போதுதான் கட்சியினர் தலைவர்மீது கொண்டிருந்த அன்பைப் புரிந்துகொண்டேன்.

அரசியலுக்கு வருவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை
துரை வைகோ, ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர்

சில வருடங்களாக எனக்குத் தொண்டர்களிடம் இருந்து மகேள்விகள் வந்தன. அவர்கள் என்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் ம.தி.மு.க-வுக்காக நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியலில் நான் கத்துக்குட்டி.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அ.தி.மு.க அரசின் தேக்க நிலையைப் போக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை இப்போதே நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள், தி.மு.க கூட்டணிக்கு நூற்றுக்கு நூறு வெற்றியைக் கொடுத்திருக்கின்றனர்.

பேட்டியின்போது
பேட்டியின்போது

தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த அரசில் சிறிய பிழை வந்தால்கூட எங்கள் தலைவர் அதைச் சுட்டிக்காட்டுவார். இந்த அரசு அமையும்போது கொரோனா 2-ம் அலை உச்சத்தில் இருந்தது. கொரோனாவை தடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியம் சிறப்பாகச் செயல்பட்டார். முதல்வர் யாரை எங்கே வைக்க வேண்டும் எனப் பார்த்து வைத்திருக்கிறார். அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனர்.

எங்கள் கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிற இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், எங்களோடு இருக்கும்வரை நிறைய நல்ல காரியம் செய்திருக்கிறார். 28 வருடத்தில் அவர் கட்சிக்கு ஆற்றிய பணியை நான் மதிக்கிறேன். அவர் மிகக் கண்ணியமாக தன் முடிவைத் தெரிவித்திருக்கிறார். பெரும்பான்மையானவர்களின் முடிவை அவரால் ஏற்க முடியவில்லை என்ற போதிலும் அவர் ஆரம்பிக்க இருக்கும் இயக்கத்துக்கு வாழ்த்துகள்.

தேர்தலில் போட்டியிட துரை வைகோ விருப்பமா? - வாரிசு அரசியலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா வைகோ?

எனக்கு அரசியலில் முன்அனுபவம் கிடையாது. ஆனாலும் காலப்போக்கில் என்னை நானே பக்குவப்படுத்திக் கொள்வேன். மக்கள் சேவை செய்ய அதிகாரம் தேவை. ஆனால் தலைவருக்கு அதில் மாறுபட்ட கருத்து இருந்தது. அதனால்தான் அவர் அமைச்சர் பொறுப்பைக் கூட ஏற்க மறுத்தார். வைகோவைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அவர் சமரசம் இல்லாத போராளி.

எனக்கு கட்சியில் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதில் விருப்பம் கிடையாது. அதனால் என்னை வர வேண்டாம் என்று தலைவரோ அல்லது கட்சிக்காரர்களோ சொல்லியிருந்தால் நான் அதை முழுமனதோடு ஏற்றிருப்பேன். மகிழ்ந்திருப்பேன். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் இப்போது நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நான் அரசியல்வாதியாக இருப்பேனே தவிர அரசியல் வியாதியாக இருக்க மாட்டேன்

பேட்டியளித்த துரை வைகோ
பேட்டியளித்த துரை வைகோ

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தலைவர் வைகோ தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் அவரால் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளுக்குச் செல்ல முடியாது. என் சகோதரி அமெரிக்காவில் வசிக்கிறார். கடந்த 15 வருடங்களாக அவரைப் பார்க்கப் போகமுடியாது. அந்த அளவுக்கு அவர் சிரமப்பட்டார். அதனால் எனக்கு அத்தகைய வலி வேண்டாம் என்று அவர் விரும்பினார்.

எங்கள் கட்சியின் பலம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த சில வருடங்களாக கட்சியில் சிறிய தொய்வு ஏற்பட்டிருந்தது. அந்தத் தொய்வைச் சரிசெய்வது தான் என் முதல் இலக்கு” என்று துரை வைகோ தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு