அலசல்
Published:Updated:

அசைவம் அத்தியாவசியம் இல்லையா?

இறைச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
இறைச்சி

- ஊரடங்கில் இறைச்சிக் கடைகளுக்குத் தடை ஏன்?

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.

இந்த 12 நாள்களில் காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதித்துள்ள அரசு, இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது. இது பொதுவெளியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம் மாநிலத்தில் அசைவ உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை மிக அதிகம். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலான மக்கள் தங்கள் புரதச்சத்து தேவைக்கு மாமிச உணவையே அதிகம் சார்ந்துள்ளனர். இந்த நிலையில், ஊரடங்கில் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து மருத்துவர்களும் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

‘‘காய்கறிகளையும் மளிகைப் பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் சேர்க்கும் அரசு, இறைச்சியையும் அந்த வரிசையில் சேர்க்க வேண்டும்’’ எனக் கூறும் பொது மருத்துவர் அரவிந்த ராஜிடம் பேசினோம்.

‘‘ஊரடங்கு காலத்தில் காய்கறிக் கடைகள் வழக்கம்போலச் செயல்படுகின்றன. ஆனால், இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படு கிறது. ‘காய்கறிகள் அத்தியாவசியமானவை. அவற்றிலிருந்தே நமக்குத் தேவையான புரதம், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் கிடைத்துவிடுகிறது. பின்பு ஏன் இறைச்சிக் கடைகளைத் திறக்க வேண்டும்... மேலும், இறைச்சிக் கடைகளால் நோய்க்கிருமிகள் பரவலாம்’ என்கிற தவறான பொதுப்பார்வையே இதற்குக் காரணம். இதனால் மறைமுகமாக, ‘ஒருவரின் உணவில் இறைச்சி அத்தியாவசியம் இல்லை’ என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல.

 அரவிந்த ராஜ் - ராதாகிருஷ்ணன்
அரவிந்த ராஜ் - ராதாகிருஷ்ணன்

சராசரியாக 60 கிலோ உடல் எடை கொண்ட ஒருவருக்கு நாளொன்றுக்கு 60 கிராம் புரதம் தேவை. அசைவ உணவுடன் ஒப்பிட்டால் சைவ உணவு மூலம் இந்தப் புரதத்தைப் பெறுவதற்கு இரு மடங்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, ஏழை மக்கள் அசைவ உணவுகள் மூலமே குறைந்த செலவில் அதிக அளவு புரதத்தைப் பெற முடியும்.

நம் உடலில் செல்களின் வளர்ச்சி, செல்களின் கட்டமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி என எல்லா வற்றிலும் புரதச்சத்து முக்கியப் பங்குவகிக்கிறது. அந்த வகையில் தாவரப் புரதம் முழுமையான புரதத்தை நமக்குத் தருவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அமினோ அமிலங்களின் கட்டமைப்பே புரதம். மொத்தம் 21 அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றில் ஒன்பது அமினோ அமிலங்கள் அத்தியாவசியமானவை. விலங்கு புரதத்திலிருந்து மட்டுமே 21 அமினோ அமிலங்களையும் நம்மால் முழுமையாகப் பெற முடியும். தவிர ஹார்மோன்கள் இயக்கத்துக்குக் கொழுப்புச்சத்து இன்றியமையாதது. இதையும் விலங்குப் புரதத்திலிருந்து எளிதில் பெறலாம். எனவே, உணவில் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல இறைச்சியையும் கருத வேண்டும்.

‘இறைச்சிக் கடைகள் மூலம் நோய்க்கிருமி பரவி, தொற்று ஏற்படலாம்’ என்பது தவறான பார்வை. தற்போது காய்கறிக் கடைகள் எப்படி சமூக இடைவெளி மற்றும் அடிப்படைச் சுகாதார முறைகளைப் பின்பற்றி இயங்குகின்றனவோ, அதேபோல் இறைச்சிக் கடைகளும் இயங்கினால் ஆபத்து எதுவும் இல்லை. இறைச்சிக் கடையில் பணிபுரிவோர் முகக்கவசம், கையுறை அணிந்து சுகாதாரமான முறையில் இறைச்சிகளைக் கையாள வேண்டும். இறைச்சியைக் கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு நன்றாகச் சுத்தம் செய்து, முழுமையாக வேகவைத்து உட்கொண்டால் நம் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கொரோனா போன்ற நோய்த் தொற்று காலங்களில் மனிதர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். எனவே, ஊடரங்கு காலத்தில் காய்கறி, மளிகைக் கடைகளைப்போலவே இறைச்சிக் கடைகளையும் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்றார் மருத்துவர் அரவிந்த ராஜ்.

அசைவம் அத்தியாவசியம் இல்லையா?

இது குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ‘‘இது அரசின் முடிவு. இந்த 12 நாள்கள் முழு ஊரடங்கின் காரணமே மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டேபோகும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். ஏற்கெனவே கடைவீதிகளில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூடுவதைக் காண முடிகிறது. இறைச்சிக் கடைகள் வேறு இயங்கினால், அங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூடும். இதன் காரண மாகவே இறைச்சிக் கடைகள் இயங்குவதற்குத் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், மருத்துவர்கள் சொன்னதாக நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களையும் பரிசீலிக்கிறோம்’’ என்றார்.