Published:Updated:

நள்ளிரவில் நடுக்கடலில் பற்றி எரிந்த மீன்பிடிப் படகு! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 மீனவர்கள்

நடுக்கடலில் பற்றி எரிந்த படகு

ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்ற இயந்திரப் படகு நடுக்கடலில் இருக்கும்போது திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அதிலிருந்த மீனவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த சிலர் அவர்களைக் காப்பாற்றினார்கள்.

நள்ளிரவில் நடுக்கடலில் பற்றி எரிந்த மீன்பிடிப் படகு! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 மீனவர்கள்

ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்ற இயந்திரப் படகு நடுக்கடலில் இருக்கும்போது திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அதிலிருந்த மீனவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த சிலர் அவர்களைக் காப்பாற்றினார்கள்.

Published:Updated:
நடுக்கடலில் பற்றி எரிந்த படகு

கன்னியாகுமரியைச் சேர்ந்த சகாய ஆண்டனி என்பவர், அவரின் மனைவி வினோ என்பவரின் பெயரில் இயந்திர மீன்பிடிப் படகு (பதிவு எண் 314) மூலம் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்தார். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இயந்திரப் படகு மூலம் மீனவர்கள் சேர்ந்து ஆழ்கடலுக்குச் சென்று தங்கியிருந்து, மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். .

தீப்பிடித்து எரியும் படகு
தீப்பிடித்து எரியும் படகு

வழக்கம்போல, சின்ன முட்டம் பகுதியிலிருந்து 14 மீனவர்களுடன் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் படகு சென்றிருக்கிறது. படகை செபஸ்தியான் என்பவரின் மகன் ஞானசெல்வம் (வயது 49) என்பவர் ஓட்டிச் சென்றிருக்கிறார். ஆழ்கடலில் நிறைய மீன்கள் கிடைத்த நிலையில், படகில் இருந்தவர்கள் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரைக்கு படகு வந்துகொண்டிருந்தபோது திடீரென படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திரத்தின் ரேடியேட்டரில் ஏற்பட்ட கோளாற்றைச் சரிசெய்ய அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், படகு திடீரென தீப்பற்றிக்கொண்டதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

படகில் பற்றிய தீயை அணைக்க முடியாத அளவுக்கு காற்றின் வேகம் அதிகம் இருந்திருக்கிறது. அதனால் தீ வேகமாகப் பரவியதால், படகிலிருந்த மீனவர்கள் உயிர் தப்புவதற்காக உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

நள்ளிரவு நேரத்தில் நடுக்கடலில் படகு தீப்பற்றி எரிவதை, கடலுக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த சக மீனவர்கள் பார்த்ததும் உதவிக்காகப் படகுகளில் அருகில் சென்றுள்ளனர். அப்போது தீப்பற்றிய படகில் உயிருக்காகப் போராடிய 14 மீனவர்களை போஸ்கோ என்பவரின் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

படகு விபத்தில் உயிர் தப்பிய மீனவர்கள்
படகு விபத்தில் உயிர் தப்பிய மீனவர்கள்

நடுக்கடலில் பற்றி எரிந்த அந்த இயந்திரப் படகு, சின்ன முட்டம் பகுதியிலிருந்து 4 கடல் மைல் தொலைவில், கூடங்குளம், பஞ்சல் ஆகிய இடங்களுக்கு இடையே கடலுக்குள் எரிந்து மூழ்கிவிட்டது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான படகு தீப்பற்றி எரிந்து கடலுக்குள் மூழ்கியதால் மீனவர்கள் வருத்தமடைந்தபோதிலும், 14 பேர் உயிர் தப்பியதால் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.