பெண் ஐ.பி.எஸ் பாலியல் புகார்: உயரதிகாரியின் பெயரை ஊடகங்கள் பயன்படுத்தத் தடை! - உங்கள் பார்வை

காவல்துறையின் உயர் பதவியிலுள்ள அதிகாரி ஒருவர், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பலகட்ட நெருக்கடிகளைத் தாண்டி, தனது புகாரை தமிழக காவல்துறை டி.ஜி.பி-யிடம் அளித்தார் அந்தப் பெண் அதிகாரி. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, புகாரை விசாரிக்க தமிழக அரசு சார்பில் சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. மற்றொருபுறம், சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது. ``பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நேர்ந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது” என்று கருத்து தெரிவித்ததோடு, இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், இந்த வழக்கின் நகர்வுகளை உன்னிப்பாக கவனிப்போம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்கால உத்தரவில், `இந்த வழக்கு விசாரணை முறையாக நடப்பதை உறுதி செய்யும் பொருட்டு, அரசியல் கட்சிகள் இந்த வழக்கை அரசியலாக்கவோ, பரப்புரை மேற்கொள்ளவோ, அறிக்கைகள் வெளியிடவோ கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. விசாரணை நடைபெறும் நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயரையும், குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரையும் ஊடகங்களில் வெளியிடவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த உத்தரவுகளை மீறுவது, நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்’ என்று நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.
பாலியல் குற்றங்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி உங்கள் பார்வை என்ன?