Published:Updated:

`பசங்க உட்கார்ந்து ஒருவாய் சோறு சாப்பிட்டாக்கூட போதும்!’- ஒரு தாயின் பாசப்போராட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மகன்களுடன் நம்பி நாச்சியார்
மகன்களுடன் நம்பி நாச்சியார்

துன்பங்களால் சூழப்பட்டு, எதிர்கால வாழ்க்கைக்கான வழி தெரியாமல் தவிக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தின் கதை இது.

கனவுகளைத் துரத்தி எட்டிப்பிடிக்கும் வயதில் கொடிய வியாதிக்கு ஆட்பட்ட இரண்டு மகன்கள். கணவரைப் பிரிந்து வாழும் மகள். அவர்களின் நலனுக்காகவே தங்கள் கடைசிக் காலத்தையும் நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வயதான பெற்றோர். சொந்த பந்தங்கள் இருந்தும் யாருடைய ஆதரவும் இல்லை. ஆறு ஜீவன்கள் வசிக்கும் அந்த வீட்டின் ஒவ்வொரு பொழுதும் கஷ்டங்களுடன் கழிவது வேதனையின் உச்சம்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணன் - திருமலை நம்பி நாச்சியார் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்களும் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையில் இருக்கின்றனர். தாங்கள் வாழும் காலம்வரை மகன்களைப் பராமரிக்க வேண்டும் என்ற தவிப்பில் இவர்கள் எதிர்கொள்ளும் பாசப்போராட்டம் விழிகளை ஈரமாக்கும் சோகக்கதை.

தளர்வான குரலில் தன் குடும்பச்சூழல் குறித்துப் பேசுகிறார் நம்பி நாச்சியார்.

``என்னோட பூர்வீகம் சாத்தான்குளம் பக்கத்துல ஒரு கிராமம். அம்மாவோட தம்பியைத்தான் எனக்குக் கட்டி வச்சாங்க. அவருக்கு ஒரு காது கேட்காது. மாலைக்கண் நோயும் இருந்துச்சு. அவருக்கு ஒத்தாசையா இருக்க தாய்மாமனுக்கே என்னைக் கல்யாணம் செய்துவெச்சுட்டாங்க. அப்போல்லாம் பெத்தவங்க பேச்சை மீற முடியாது. அதனால நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் அவருக்கு நிரந்தரமாவே ஒரு கண் தெரியலை. காதும் இப்பவரை சரியா கேட்காது. ஆனாலும், அவர் என்னை நல்லாவே பார்த்துக்கிட்டார். கஷ்டங்களை ஏத்துக்கிட்டு, சந்தோஷமாதான் வாழ்ந்தோம்.

மகன்களுடன் பெற்றோர்
மகன்களுடன் பெற்றோர்

விவசாயத் தொழில்தான். ரெண்டு ஏக்கர் நஞ்சை நிலம் வெச்சிருந்தோம். ஒவ்வொரு வருஷமும் ஒருபோகத்துக்கு நெல் பயிர் மட்டும்தான் சாகுபடி செய்ய முடியும். அப்புறம் அக்கம்பக்கத்துல வேற வேலைக்குப் போவோம். எங்களுக்கு மூணு பிள்ளைங்க. சின்னத்துரை பெரியவன். அடுத்து மக முத்துலட்சுமி. கடைக்குட்டி முருகன். எவ்வளவு சிரமம் இருந்தாலும், பிள்ளைகளை நல்லாவே வளர்த்தோம். மூணு பிள்ளைங்களும் ரொம்ப ஆரோக்கியமாதான் வளர்ந்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் வீட்டுக்காரரும் நானும் படிக்கலை. பசங்களை நல்லா படிக்க வைக்க ஆசைப்பட்டோம். மூணு பேருக்கும் படிப்புல பெரிசா நாட்டமில்லை. ஏழாவதுக்கு மேல யாருமே படிக்கலை. பொண்ணு மட்டும் வீட்டு வேலைகளைக் கவனிச்சுக்கிட்டு இருந்துச்சு. பெரிய பையன் ஹோட்டல் வேலைக்குப் போனான். 20 வயசுல அவனுக்கு அடிக்கடி இருமலோடு மூச்சுவிடவே சிரமப்பட்டான். மூச்சிரைப்பு அதிகமாகி, திடீர்னு உடம்பு சரியில்லாம வீட்டுல படுத்துட்டான். ஆஸ்பத்திரியில மருந்து மாத்திரிகளைக் கொடுத்தாங்களே தவிர என்ன பிரச்னைனு முழுசா சொல்லலை. ஓரளவுக்கு நடந்தவன், ஒருகட்டத்துல படுத்த படுக்கையாகிட்டான்” - நாச்சியாரின் கண்கள் கலங்குகின்றன.

மகன்களுடன் பெற்றோர்
மகன்களுடன் பெற்றோர்

``பெரிய பையனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போறது, பார்த்துக்கிறதுனு இருந்தேன். ஏழாவது படிக்கிறப்போ, சின்னவன் சைக்கிள் ஓட்டி கீழ விழுந்துட்டான். அப்புறம் அவனால நடக்க முடியலை. அவனுக்கும் ஆஸ்பத்திரியில மருந்து, மாத்திரைதான் கொடுத்தாங்க. என்ன பிரச்னைனு முழுசா யாரும் சொல்லலை. ஒருகட்டத்துல திருவனந்தபுரத்துல ஒரு கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனேன். `சொந்தத்துல கல்யாணம் செய்துகிட்டதால பசங்களுக்குப் பிறக்கிறப்போவே மூளையில பாதிப்பு ஏற்பட்டிருக்கு’ன்னு சொன்னாங்க.

சொந்த வீடு, நிலம், என்னோட அஞ்சு பவுன் நகைகள் எல்லாத்தையும் வித்து வைத்தியம் பார்த்தோம். கொஞ்சம்கூட பலன் கிடைக்கலை. அதுக்காகப் பசங்களை அப்படியே விட்டுட முடியுமா? ஒருத்தர் மாத்தி ஒருத்தரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனேன். ரொம்பவே சிரமம்தான். ஆனாலும், ரெண்டு பசங்களுக்கும் வைத்தியம் பார்க்கப் போகாத ஆஸ்பத்திரி இல்லை.

ஒருகட்டத்துல பசங்களால சுத்தமா நடக்க முடியலை. `பசங்களைக் கூட்டிட்டு வந்தாலும் எந்தப் பயனும் இருக்காது. இந்த நோயைக் குணப்படுத்தவே முடியாது. மாதமானா வந்து மாத்திரை மட்டும் வாங்கிட்டுப் போங்க’ன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால பல வருஷமா எங்க வீட்டுல யாராச்சும் ஒருத்தர் மாதாமாதம் ஸ்ரீவைகுண்டம் கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் மாத்திரைகளை மட்டும் வாங்கிட்டு வந்திடுவோம். ரெண்டு பசங்களுக்கும் ஒரே மாதிரியான மாத்திரைகளைத்தான் கொடுக்கறோம். இப்பவரை எந்த ஆஸ்பத்திரியிலயும் பசங்களுக்கு இருக்கிற பிரச்னைக்குப் பேரு சொல்ல மாட்டிக்கிறாங்க. ஆனா, எலும்புருக்கி நோயா இருக்கலாம்னு சொல்றாங்க. அந்த நோயைப் பத்திக்கூட எங்களுக்கு எதுவும் தெரியாது.

நானும் பொண்ணும் பெரிய பையனைத் தூக்கிட்டுப்போய் பாத்ரூம்ல குளிப்பாட்டுவோம். மத்தபடி படுக்கையிலதான் இருப்பான். கொஞ்சம் கொஞ்சம் பேசுவான். ஆனா, சின்னவனால சுத்தமா நடக்கவே உட்காரவோ முடியாது. அவனால பேசவும் முடியாது. படுத்த படுக்கையாவே இருக்கான். படுக்கையிலதான் சாப்பாடு ஊட்டுவோம். பாத்ரூம் போறது, குளிப்பாட்டிவிடுறது எல்லாமே படுக்கிற இடத்துலயேதான். அதனால, பாத்ரூம் பக்கத்துல இருக்கிற இடத்துலயே பசங்களை தரையில படுக்க வெச்சிருக்கோம்” என்கிற நம்பி நாச்சியாரின் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

நம்பி நாச்சியார் குடும்பம்
நம்பி நாச்சியார் குடும்பம்
இரண்டு மகன்களுக்கும் அரசின் சார்பில் தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மாதம்தோறும் கிடைக்கிறது. இந்த இரண்டாயிரம் ரூபாயைத் தவிர, குடும்பத்தில் வருமான வாய்ப்புகள் எதுவுமில்லை. எனவே, மொத்தக் குடும்பமும் விவரிக்க முடியாத பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொள்கிறது.

``வாடகை வீட்டுலதான் இருக்கோம். ஆஸ்பெஸ்டாஸ் சீட் வீடுதான். வெயில் சூடும் வெக்கையும் அதிகமா இருக்கிறதால பசங்க ரொம்பவே சிரமப்படுறாங்க. வாடகை ரெண்டாயிரம் ரூபாய். பசங்களுக்கு வர்ற உதவித்தொகையை அப்படியே வாடகைக்குக் கொடுத்துடுவோம். மத்தபடி எங்களுக்குக் கிடைக்கிற ரேஷன் அரிசியிலதான் சாப்பாடு செய்வோம். ரேஷன் பொருள்கள் பத்தாது. இருந்தாலும் இருக்கிறதை வெச்சும், கடன் வாங்கியும்தான் அரைகுறையா வயித்தைக் கழுவிக்கிறோம். என் வூட்டுக்காரருக்கு 70 வயசு. எனக்கு 60 வயசுக்கு மேலாச்சு. பசங்களுக்கு உதவித்தொகை வர்றதால, எங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்காதுனு சொல்லிட்டாங்க. சிவகுமார்னு ஒரு போலீஸ்கார அண்ணாச்சி ஒத்தாசையா இருக்கார். வேற யார்கிட்ட எப்படி உதவி கேட்கிறதுனு எங்களுக்குத் தெரியலை. யாராச்சும் உதவினா பயனுள்ளதா இருக்கும்.

எங்க நிலைமை மோசமானதும் சொந்த பந்தங்கள் எல்லோருமே ஒதுங்கிக்கிட்டாங்க. நாங்களும் யாரையும் தொந்தரவு செய்றதில்லை. யாருமே எங்களைப் பார்க்க வரமாட்டாங்க. எங்களுக்கு நாங்களே துணையா இருக்கோம்.
நம்பி நாச்சியார்

பொண்ணு முத்துலட்சுமியை சென்னையில கல்யாணம் செஞ்சு கொடுத்தோம். பொண்ணு வூட்டுக்காரருக்கு எப்பயுமே குடிதான். அதனால கொடுமை தாங்க முடியாம தவிச்சுக்கிட்டு இருந்தவ, பிரசவத்துக்கு எங்க வீட்டுக்கு வந்தா. இங்கயே தங்கிட்டா. பேரக்குழந்தைக்கு ஸ்கூல் சேர்க்குற வயசு ஆகிடுச்சு. எங்க குடும்பத்துல பேரனாவது படிக்கணும்னு ஆசைப்படறோம். ஆனா, எங்க நிலைமைக்குப் பையனை ஸ்கூல் சேர்த்த முடியுமானுகூட தெரியலை.

வயசான என் வூட்டுக்காரருக்கு காது ரொம்பவே மந்தமாகிடுச்சு. அவராலயும் எங்கயும் வேலைக்குப் போக முடியாது. எந்நேரமும் பசங்கள பக்கத்துல இருந்து பார்த்துக்கணும். நானும் என் பொண்ணும் வீட்டுலயே இருந்தாகணும். அதனால எங்களால வெளி வேலைக்கும் போக முடியிறதில்லை. பொண்ணுக்கு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்தாகூட, வீட்டுல இருந்தபடியே துணியாவது தெப்பா. அதனால கொஞ்சம் வருமானம் கிடைச்சாலும் எங்களுக்கு ஒத்தாசையா இருக்கும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

இளைய மகனுடன் நாச்சியார்
இளைய மகனுடன் நாச்சியார்

``எனக்குக் கூடப்பிறந்தவங்க மூணு தம்பி, ரெண்டு தங்கச்சி இருக்காங்க. எங்க நிலைமை மோசமானதும் சொந்த பந்தங்கள் எல்லோருமே ஒதுங்கிக்கிட்டாங்க. நாங்களும் யாரையும் தொந்தரவு செய்றதில்லை. யாருமே எங்களைப் பார்க்க வரமாட்டாங்க. எங்களுக்கு நாங்களே துணையா இருக்கோம். பண்டிகைக் காலத்துலகூட எங்களால நல்ல சாப்பாடு சாப்பிட முடியாது. அதுக்குக்கூட நான் கவலைப்பட்டதில்லை.

பசங்க எழுந்து உட்கார்ந்து ஒருவாய் சோறு சாப்பிட்டாக்கூட எனக்கு ரொம்பவே திருப்தியா இருக்கும். அதுக்குக்கூட கொடுத்துவைக்கலை. கல்யாணம் ஆகி வந்த நாள்ல இருந்து புருஷன், பசங்கனுதான் வாழ்ந்துட்டிருக்கேன். எனக்குனு எந்தத் தனிப்பட்ட ஆசைகளும் கிடையாது. பெரிய பையனுக்கு 35 வயசு, சின்னப் பையனுக்கு 30 வயசாகுது. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிக்கொடுத்து நல்லபடியா அவங்க வாழ்றதைப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனா, பெத்த மூணு பிள்ளைங்க வாழ்க்கையும் நல்லா இல்லாம இருக்கிறதைக் கண்ணு முன்னாடி பார்த்து வேதனைப்படுறதெல்லாம் வாழ்நாளுக்கும் ரணம்தான். யாருக்கும் எங்க நிலைமை வரக்கூடாது” - வெடித்து அழும் நாச்சியாரின் கண்ணீர்த் துளிகள் அருகிலுள்ள மகன்கள் மீது விழுகிறது. விவரம் அறியாதவர்களின் முகத்தில் மெதுவாக எட்டிப்பார்க்கிறது குழந்தைத்தனமான புன்னகை!

இந்தக் குடும்பத்தின் துயர் துடைக்க, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு