Published:Updated:

இது இயற்கையின் மரணம்!

உருகும் பனிப்பாறை
பிரீமியம் ஸ்டோரி
உருகும் பனிப்பாறை

கண்ணீர் வடிய அந்தக் குறுகிய பனிப்பாறையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஐஸ்லாந்து மக்கள். பல நூறு ஆண்டுகளாகத் தங்களைச் சுமந்த மூத்த உயிர் ஒன்று வெப்பமயமாதலின் தாக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுத்திணறி... உருக்குலைந்து...

இது இயற்கையின் மரணம்!

கண்ணீர் வடிய அந்தக் குறுகிய பனிப்பாறையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ஐஸ்லாந்து மக்கள். பல நூறு ஆண்டுகளாகத் தங்களைச் சுமந்த மூத்த உயிர் ஒன்று வெப்பமயமாதலின் தாக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுத்திணறி... உருக்குலைந்து...

Published:Updated:
உருகும் பனிப்பாறை
பிரீமியம் ஸ்டோரி
உருகும் பனிப்பாறை

சிதறுண்டு தங்கள் கண்முன்னே இறந்தே போய்விட்டதை தாங்க முடியாமல் கதறி அழுகிறார்கள் மக்கள். உலக வரலாற்றில் முதல்முறையாக, பனிப்பாறைத் தீவு ஒன்று இறந்துவிட்டது. இது இயற்கையின் மரணம் மட்டுமல்ல... மனிதக் குலத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை.

ஐஸ்லாந்தில் மிகவும் பிரபலமான ‘ஒக் ஜோக்கல் க்ளேசியர்’தான் இப்போது இறந்திருக்கும் பனிப்பாறை. ஒக் க்ளேசியர் என்று ஆராய்ச்சியாளர்களால் செல்லமாக அழைக்கப் படும் ஒக் ஜோக்கல் க்ளேசியர் ஐஸ்லாந்தின் பெருமை. அந்த நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரச் சின்னம். சூழலியல் ஆய்வாளர்கள், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம். பல நூறு ஆண்டுகளாக, மேற்கு ஐஸ்லாந்தில் 15 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துகிடந்த மிகப் பெரிய ஒக் க்ளேசியர், ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுக்குச் சுருங்கி, கடைசியில் உயிரையும் விட்டுவிட்டது. இந்தப் பனிப்பாறையின் இறப்பு மிகவும் குரூரமானது. மெதுவாக உருகி, துண்டு துண்டாக உடைந்து, உருக்குலைந்து, சரளைக் கற்களைப்போல சிதறுண்டு, கடைசியில் சகதியாகக் கடலடியில் படிந்துவிடும்.

இது இயற்கையின் மரணம்!

ஐஸ்லாந்திலுள்ள 400 க்ளேசியர்களில், க்ளேசியர் என்கிற அந்தஸ்தை முதலில் இழந்ததுள்ளது ஒக் ஜோக்கல். உலகில் நம் கண்ணெதிரில் மறைந்த முதல் பனிப்பாறையும் இதுதான். அதனால்தான் அமெரிக்காவின் ரைஸ், ஹவுஸ்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான சைமன் ஹோவே, டொமினிக் போயர், ஆட்டர் சிகர்ஸன் ஆகியோர் ஒக் க்ளேசியருக்கு நினைவுச்சின்னம் அமைக்க முடிவெடுத்தனர். ஒக் ஜோக்கல் க்ளேசியர் இறந்த இடத்துக்கு அருகே, வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி இதன் நினைவுச்சின்னம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவிடத்தில் பொறிக்கப்படும் வாக்கியங்கள் கண்கலங்க வைக்கின்றன...

“என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

என்ன செய்யவேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

ஆனால், நாங்கள் அதைச் செய்தோமா என்பது உனக்கு மட்டுமே தெரியும்!”

ஒக் ஜோக்கலின் மறைவுக்காக இப்படி ஓர் இரங்கற்பாவை எழுதியவர் ஐஸ்லாந்தின் பிரபல எழுத்தாளர் ஆண்ட்ரி ஸ்னாகர் மாக்னஸன். இந்த நினைவிடத்தில் இடம்பெறப்போகும் மற்றொரு முக்கியமான வார்த்தை ‘415 ppm CO2’. வளிமண்டலத்தில் கலந்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடின் உச்சகட்ட அளவு இது! அடுத்த 200 ஆண்டுகளில், ஐஸ்லாந்திலிருக்கும் 400 பனிப்பாறைகளுக்கும் ஒக்-குக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏற்கெனவே, அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் உள்ள த்வைட்ஸ் க்ளேசியரில் 14 சதுர மைல் பரப்பளவில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துவிட்டது. கிழக்குப் பகுதியிலிருக்கும் டாட்டன் க்ளேசியரும் கடந்த மூன்று ஆண்டுகளாக உருகிவருகிறது. தென் துருவத்தை காட்டிலும் அதிவேகமாக வெப்பம் அடைவது வடமுனைதான். மத்திய ஐரோப்பா, மேற்கு கனடா, அமெரிக்காவிலிருக்கும் பனிப்பாறைகள் 2100-க்குள் அழிந்துவிடும். இதற்கு முக்கிய காரணம், வளிமண்டல வெப்பமயமாதல்.

உருகும் பனிப்பாறை
உருகும் பனிப்பாறை

நாங்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாகப் பனிப்பாறைகள் உருகுகின்றன. ஒவ்வொரு வருடமும் 369 பில்லியன் டன் பனி உருகுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், கடல்மட்டம் ஆறு அங்குலம் வரை உயரும். அதனால். உலகின் பல தீவுகள், கடலோர நகரங்கள் மூழ்கும் என அஞ்சுகின்றனர் ஆய்வாளர்கள்.

இவையெல்லாம் எங்கோ வட, தென் துருவங்களில் நடக்கும் அழிவு என்று நாம் உதாசீனப்படுத்த முடியாது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்க தேசத்தின் நீராதாரமாக விளங்கும் இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கி விட்டன. அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பனி உருகும் வேகம் இரு மடங்காகும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். வெப்பமயமாதலை இன்றே கட்டுப்படுத்தத் தொடங்கினால்கூட இமயமலையில் 30 சதவிகித பனிப்பாறைகள் உருகுவதைத் தடுக்கமுடியாது. பனிப்பாறைகளின் பேரழிவு, உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் மனிதர்களைக்கூட இடம்பெயர வைக்கும். மனித இறப்பும் பலமடங்கு அதிகரிக்கும். கேரளத்தின் மன்றோ தீவுகள், மாலத் தீவுகள் முதல் செஷெல்ஸ் மற்றும் வடமேற்கு ஹவாய் தீவுகள் வரை பாதிக்கும் என எச்சரிக்கின்றன ஆய்வுகள்.

பனிப்பாறைகள் உலகின் நன்னீரைப் பாதுகாக்கும் பெட்டகங்கள். பூமியின் வயது, இயற்கைச் சுழற்சி, பூமி கிரகத்தின் எதிர்கால தொடர்புகளை அடையாளம் காண உதவும் அளவுகோல். அதன் இழப்பு அளவிடமுடியாது. நன்னீரை மட்டும் நாம் இழக்கவில்லை. ஒரு வரலாற்றையே இழந்துவிட்டோம். மறைந்த பனிப் பாறையின் வரலாறு ஒரு வறண்ட பாறையில் எழுதப்படுவதுதான் கொடூரத்தின் உச்சம். பசுமைக்குடில் வாயுக்களை நாம் குறைக்கத் தவறியதால், ஐஸ்லாந்து தண்டனை அனுபவிக்கிறது. உடனடித் தேவை போர்க்கால நடவடிக்கை. எடுக்கத் தவறினால், மனிதகுலம் மொத்தமும் துக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை!