Published:Updated:

ஜெ-வைச் சிறைக்கு அனுப்பிய நேர்மை!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை அவர் விசாரிக்க ஒப்புக்கொண்டபோது, எங்களுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.

பிரீமியம் ஸ்டோரி

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, மிக முக்கிய வழக்கு. இவ்வழக்கை விசாரித்த கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும், சசிகலா தரப்புக்கும் சிறைத் தண்டனையும், பல கோடி அபராதமும் விதித்து 2014-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புதான் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர், வழக்கை விசாரித்த அப்போதையை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. நல்லம நாயுடு. அந்த வழக்கு விசாரணையின்போது பல நெருக்கடிகளைச் சந்தித்தார். ஆனால், எதையும் அவர் வெளியில் சொன்னதில்லை. இந்த மாதம் 17 அன்று மறைந்தார் நல்லம நாயுடு.

கடந்த 1961-ல் காவல் சார்பு-ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த நல்லம நாயுடு, சி.பி.சி.ஐ.டி மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையில் பணியாற்றியவர். கருணாநிதி மற்றும் அவரின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷனுக்கு உதவியாகப் பணிபுரிந்தவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரியாக இருந்து சி.பி.ஐ அதிகாரிகளுக்கு உதவியுள்ளார். 1997-ம் ஆண்டு பணி ஓய்வு பெற வேண்டிய சூழலில்தான், ஜெயலலிதா வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஒரு முன்னாள் முதல்வரை ஊழல் வழக்கில் விசாரிக்கும் பணியைக் கச்சிதமாகச் செய்தார். தமிழக வரலாற்றில் ஒரு காவல் அதிகாரிக்கு நான்குமுறை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது இவருக்குத்தான் என்கிறார்கள்.

ஜெ-வைச்  சிறைக்கு அனுப்பிய நேர்மை!

நல்லம நாயுடுவின் சொந்த ஊர், தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி. அங்கு அவரின் இறுதிச்சடங்கு முடிந்தபிறகு, அவரின் மனைவி விஜயலட்சுமியிடம் பேசினோம். ‘‘எங்களுக்குத் திருமணம் நடந்தபோது அவர் காவல்துறையில் நேரடி எஸ்.ஐ-யாகப் பணியில் சேர்ந்திருந்தார். அவர் எஸ்.ஐ-யாக இருந்தபோதும், ராயபுரம் உதவி ஆணையராக இருந்தபோதும் மட்டுமே, அவர் மிகவும் நேசித்த காவல் சீருடையை அணிந்திருந்தார். பெரும்பாலான காலம் சீருடை அணியாத சிறப்புப்பணிதான். காவல் சீருடை அணியாமல் இருப்பதாக அவ்வப்போது வருத்தப்படுவார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை அவர் விசாரிக்க ஒப்புக்கொண்டபோது, எங்களுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், அவர் தொழில்மீது வைத்துள்ள பிடிப்பு குறித்து எங்களுக்குத் தெரியும். அதில் எங்களால் தலையிட இயலாது. அந்த நேரத்தில், எங்கள் வீட்டுக்குத் தொடர்ந்து போன் வரும். குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில்தான் அதிகமாக மிரட்டல் போன் கால்கள் வரும். ஆபாசமாகப் பேசுவார்கள், திட்டுவார்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டுவார்கள். அப்போது என் இரண்டாவது மகள் பிரசவத்திற்காக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். எங்களுக்கு ஆரம்பத்தில் அச்சம் இருந்தது. போகப் போகப் பழகிவிட்டது. தொடர்ந்து 6 மாதங்களில் 4 முறை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நள்ளிரவு குடும்பத்துடன் ரோட்டில் நின்று கொண்டிருப்போம். மோப்ப நாய்களுடன், வெடிகுண்டு பரிசோதனை செய்பவர்கள் வீடு முழுவதும் சோதனையிட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு ஏதுமில்லை என்றதும் வீட்டுக்குள் செல்வோம்.

சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த சமயத்தில் நள்ளிரவுதான் வீட்டுக்கு வருவார். மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவார். சாப்பிடும் நேரம் மட்டும் ‘ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தினேன். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தேன்' என்பார். ஆனால், முழுமையாக எதுவும் சொல்லமாட்டார். கேட்டால் ‘விசாரணை முடியும்வரை இதையெல்லாம் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது' என்பார்.

ஜெ-வைச்  சிறைக்கு அனுப்பிய நேர்மை!

ஜெயலலிதா, தினகரனுடன் சேர்ந்து லண்டனில் ஹோட்டல் வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. அது தொடர்பான விசாரணைக்கு இரண்டு முறை லண்டன் சென்றார். அங்கு சாப்பிடப் பிடிக்காமல் ஓட்ஸ் கஞ்சியை மட்டும் குடித்துக்கொண்டு விசாரணை நடத்தியுள்ளார். இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்பு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது, அ.தி.மு.க-வினர் என் கணவருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர். நீதிமன்றத்துக்குள் நுழையவிடாமல் கூச்சலிடுவது, தள்ளுமுள்ளு ஏற்படுத்துவது, லிப்ட்டில் ஏறவிடாமல் செய்வது எனத் தொந்தரவு கொடுப்பதாக என்னிடம் வருந்தினார். வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டதும் அந்தத் தொந்தரவுகள் இல்லாமல்போனது. தீர்ப்புக்கு முந்தைய நாள்களிலேயே எங்களிடம் ‘குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும்’ என மிகவும் உறுதியாகக் கூறினார். ஆனால், அரசுப் பணியிலிருந்த என் மூத்த மகன், மருமகன் ஆகியோர் தேவையின்றிப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். எவ்விதத் தவறும் செய்யாத அவர்கள் குடும்பத்துடன் அங்கும் இங்குமாக 10 ஆண்டுகள் அலைந்தனர்'' என்றார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின்போது ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர்கள் 3 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் வழக்கறிஞர் ஜவஹர்லாலும் ஒருவர். அவரிடம் ஜூனியராக இருந்தவர் நல்லம நாயுடுவின் இளைய மகன் சரவணன். அவரிடம் பேசினோம். ‘‘1997-ல் இந்த வழக்கை டி.ஐ.ஜி ரேங்க்கில் உள்ள பெண் அதிகாரிதான் எடுத்து விசாரிப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய கணவர் கான்ட்ராக்டராக இருந்ததால், அவரிடம் வழக்கு ஒப்படைக்கப்படவில்லை. அப்பாவும் சட்டம் படித்தவர் என்பதால்தான் தமிழகத்தின் மிக முக்கியமான வழக்கு விசாரணையை ஏற்ற 6 மாதங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்தது. ஜெயலலிதாவின் சொத்து விவரங்களைக் கணக்கிடும்போது, அவ்வளவு எண்களும் கால்குலேட்டரில் வராது. பாதி பாதியாக மட்டுமே கணக்கிட முடியும் என்ற நிலை இருந்தது. அப்பா பென்சிலால் கணக்குப் போடுவார். அதைக் கணினியில் போட்டுப் பார்த்தால் மிகச் சரியாக இருக்கும்.

இப்போது தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். மூன்று மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்துக்குக் குடும்பத்துடன் சென்றோம். அங்கு அப்பாவிடம் முதல்வர் மிகவும் மரியாதையாகவும், அன்பாகவும் பேசினார். அப்போது முதல்வரிடம், ‘ஜெயலலிதாவின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும். அவற்றை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்’ என அப்பா கோரிக்கை வைத்தாா்.

லஞ்ச ஒழிப்பு தொடர்பாகவும் அதிகாரிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தெல்லாம் விரிவான ஒரு புத்தகம் எழுத வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார். அவர் பணியில் சேர்ந்த 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சென்னையில் அவருடைய பேட்ச் போலீஸார் சேர்ந்து ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு முந்தைய தினம்தான் அப்பா இறந்துவிட்டார்.

பணி விஷயத்தில் எதற்கும் சமரசம் செய்துகொள்ள மாட்டார். ஜெயலலிதா வீட்டில் மூன்று நாள்கள் சோதனை நடத்தியபோது, அப்பாவின் உயரதிகாரி ஒருவர் ஜெயலலிதாவின் படுக்கையில் ஏறியுள்ளார். இதையறிந்த என் அப்பா அவரிடம், ‘இவ்வழக்கின் விசாரணை அதிகாரி நான், நீங்கள் தேவையின்றி இங்கு வரவேண்டிய அவசியமில்லை’ எனக் கூறி அவரை அங்கிருந்து அனுப்பியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் அப்பாவுடன் பணியாற்றிய போலீஸார் மிகவும் நம்பகமாகவும் உறுதுணையாகவும் இருந்ததாகக் கூறுவார். அதேவேளையில், பல போலீஸார் சரியில்லை எனவும் வருந்தினார். குறிப்பாக, அப்பாவை இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமித்தவர், பிறகு பிறழ்சாட்சியாக மாறியது குறித்து வருத்தப்பட்டார்.

விசாரணை அதிகாரியாக யாரை எப்போது விசாரித்தார் என்பது குறித்து தேதி வாரியாக டைரியில் குறித்து வந்தார். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முயன்றோம். ஆனால், அந்த டைரி காணாமல்போய்விட்டது.

ஜெயலலிதாவின் எதிரே அமர்ந்து துணிவுடன் கேள்விகளை எழுப்பி வாக்குமூலம் பெற்றுள்ளார். சிறையிலிருந்த ஜெயலலிதாவிடம் 15 நாள்கள் தொடர்ச்சியாக சந்தித்து விசாரணை நடத்தினார். ஜெயலலிதா பிடிவாதமானவர், கடுமையாக நடந்துகொள்ளக் கூடியவர் எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவர் மிகவும் சாந்தமாக நடந்துகொண்டதாக என் தந்தை கூறினார். மேலும், விசாரணையின் தொடக்கத்தில், ‘இங்கு யார் நேர்மையானவர்களாக உள்ளனர்’ என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு என் தந்தை, ‘நான் எனது கடமையைச் செய்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.

ஜெ-வைச்  சிறைக்கு அனுப்பிய நேர்மை!

‘சிறந்த புலன்விசாரணை அதிகாரி’ என்ற விருது என அப்பாவுக்கு அறிவிக்கப்பட்டது. அதற்காக ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சிக்குச் சென்ற என் தந்தையிடம் அப்போதைய டி.ஜி.பி, ‘விழாவுக்கு வர வேண்டாம்; வீட்டுக்குத் தங்கப்பதக்கம் வந்துவிடும்' என்றார். மறுநாள் ஒரு இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் பதக்கத்தைக் கொடுக்க வந்தார். அதை என் அப்பா வாங்கவில்லை. பிறகு அந்த இன்ஸ்பெக்டர், ‘இதைக் கொடுக்கவில்லை என்றால், எனக்குத்தான் சிக்கல்' எனக் கூறி வீட்டில் இருந்த டேபிளில் வைத்துச் சென்றார். `எனது உழைப்புக்குக் கிடைத்த இந்தப் பதக்கம் உரிய முறையில் வழங்கப்படவில்லை. இதை நான் விரும்பி ஏற்கவில்லை' என்று அப்பா கடிதம் எழுதி அனுப்பினார்.அதேநேரத்தில், இவ்வழக்கில் தொடர்புடைய சசிகலா தரப்பில் இருந்தும் எவ்வித இடையூறும் என் தந்தைக்கோ, எங்களுக்கோ ஏற்படவில்லை'' என்றார்.

நல்லம நாயுடுவின் சகோதரர் ராஜாவிடம் பேசினோம். ‘‘அரசியல் தலைவர்களுடன் அண்ணனுக்கு நல்ல பழக்கம் இருந்தபோதும் எவ்வித சிபாரிசுக்கும் செல்லமாட்டார். என் அண்ணனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், நாங்கள் எவ்வளவு சொத்து வைத்துள்ளோம் என தேனியில் உள்ள எங்கள் சொந்தக்காரர்களிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். ஆனால், பூர்வீகச் சொத்தைத் தவிர எங்களிடம் எந்தச் சொத்தும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்கெனவே ஊரின் மயானம், பள்ளிக்கு எங்களுக்குச் சொந்தமான இடத்தைக் கொடுத்துள்ளோம். ஏழை மாணவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய அறக்கட்டளை தொடங்க வேண்டும் எனக் கூறிவந்தார். தற்போது அவர் இல்லையென்றபோதிலும் அவரின் ஆசையை நாங்கள் நிறைவேற்றுவோம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு