சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

“அழகானது வாழ்க்கை… அன்பே அதன் மொழி..!”

திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (20.10.1938 – 06.11.2022)
பிரீமியம் ஸ்டோரி
News
திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (20.10.1938 – 06.11.2022)

காலத்தில் கலந்த புன்னகை!

“வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகானது. இந்த உலகத்துல நம்மோடு வாழுற எல்லாருமே நல்லவங்கதான். எல்லாருக்கும் பொதுவான, புரியுற மொழின்னா… அது அன்புதான்!” மிக எளிமையான இந்த நம்பிக்கைச் சொற்களை, மிக வலிமையான புன்னகையோடு வாழ்நாள் முழுக்க முன்வைத்த ஆளுமை திருமதி சரோஜா பாலசுப்ரமணியன். உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோதும், தன்னைச் சந்திக்க வருபவர்களிடமும், அங்கு பணிபுரியும் செவிலியர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டிருந்த பிரதான கேள்வி “சாப்ட்டீங்களா?” அந்த அன்பு, இன்று உறைந்துவிட்டது நினைவாக!

ஆம்… ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரும், ஜூனியர் விகடன் இதழின் நிறுவனருமான அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவி திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (84) கடந்த 06.11.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் இயற்கையில் கலந்துவிட்டார்.

திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (20.10.1938 – 06.11.2022)
திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (20.10.1938 – 06.11.2022)

பத்திரிகையாளர், எழுத்தாளர், இயக்குநர், பிரமாண்ட சினிமாத் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட பேராளுமை எஸ்.எஸ்.வாசனின் மருமகள், அச்சுவார்த்ததுபோல அதே பன்முகத்திறன்கொண்ட ஆளுமை எஸ்.பாலசுப்ரமணியனின் மனைவி. ஆனாலும், எளிமையே உருவானவர். அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், சினிமா நட்சத்திரங்களின் நட்புகளுக்கு இணையாக எளிய மனிதர்களை நேசித்துப் பழகியவர். பிறருக்குக் கொடுத்து மகிழவே, பிறரைச் சந்தோஷப்படுத்திப் பார்க்கவே திருவிழாக்கள் வருகின்றன என்று நம்பியவர். ஒருமுறை சந்தித்துப் பிரிந்தவர் என்றாலும், அவர் வீட்டு நாய்க்குட்டியின் பெயர்வரை நினைவில்வைத்திருந்து விசாரிக்கும் ஆச்சர்ய நினைவாற்றலுக்குச் சொந்தக்காரர். பறவைகள், விலங்குகள், தாவரங்களின்மீது அதீத நேசம்கொண்டவர். அன்பும் புன்னகையுமே அவரது பிரதான தத்துவம்.

மன உறுதியிலும் வியக்கவைப்பவர். ஆனந்த விகடனின் தலைவர், ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் ஒரு கருத்துப்படத்தை வெளியிட்ட காரணத்துக்காகச் சிறைக்குச் சென்றபோது, மிக உறுதியோடு அவரின் பின் நின்றவர். புகழில், ஏற்ற இறக்கங்களில், இழப்பில், எங்கும் தன் இயல்பு குலையாத வலிமையான மனுஷி. சிகிச்சைக்காக மருத்துவமனையிலிருந்த இறுதிக் கணங்களிலும், பிரார்த்தனையும் நற்சொற்களையும் மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்த கனிந்த இதயத்துக்குச் சொந்தக்காரர்.

“அழகானது வாழ்க்கை… அன்பே அதன் மொழி..!”

அம்மையாரின் மறைவு, விகடன் குழுமத்துக்குப் பேரிழப்பு. அன்பும் புன்னகையுமாக இயற்கையில் கலந்துவிட்ட அவருக்கு, விகடன் குழுமத்தின் ஒவ்வோர் ஊழியரின் இதயபூர்வமான அஞ்சலி. அவரது நினைவை இக்கணம் பேரன்போடு ஏந்திக்கொள்கிறோம்!

ஜூனியர் விகடன் நிறுவனர், அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் நேசித்து வளர்த்த கொண்டைக்கிளிகள், அம்மையாரைப் பார்த்துவிட்டால் “சரோஜா… சரோஜா...” என மகிழ்ச்சியில் கூச்சலிடும். அது நிறுவனருக்கும் அம்மையாருக்குமிடையிலான காதலின் அடையாளம். அந்தக் கிளியின் குரல், காற்றிலும் காலத்திலும் அம்மையாரின் புகழைப்போல என்றும் நிலைத்திருக்கும்!

- ஜூ.வி.