சினிமா
Published:Updated:

காலத்தில் உறையாத பனித்துளி! - சத்யஜித்ரே

சத்யஜித்ரே
பிரீமியம் ஸ்டோரி
News
சத்யஜித்ரே

கல்கத்தாவில் பாலிகஞ்ச் பகுதியில் 1921-ல் பிறந்த ரே வுக்கு 6 வயதில் ஓர் அதிர்ஷ்டம் கிட்டியது.

ரே இறந்து முப்பதாண்டுகள் ஓடிவிட்டன. உலக சினிமாவின் முகம் இன்று நிறைய மாறிவிட்டது. இந்த முப்பதாண்டில் குவாண்டின் டொராண்டினோக்களும் கிம் கி டுக்குகளும் அலெஜாண்ட்ரோ இன்னாரிட்டோக்களும் தங்களின் புதிய சொல்முறையால் உலக சினிமாவைத் தலைகீழாக மாற்றிவிட்டனர்.

நல்லவர்களின் நியாயத்தை மட்டுமே பிரதிபலித்த கதைக்கருக்கள் போய், கெட்டவர்கள் பக்கத்து அறத்தையும் இந்தத் திரைப்படங்கள் பேசுகின்றன. 1, 2, 3, 4, 5 எனும் ஒழுங்கு வரிசையில் கதை சொல்லும் முறை போய் 3, 5, 1, 4, 2 என்று கலைத்துப்போட்டு, பார்வையாளர்களோடு கண்ணாமூச்சி ஆடும் திரைக்கதைகள் வந்துவிட்டன.

இப்படியான முரட்டு மோஸ்தரில் உலக சினிமாப் போக்கு ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவின் பெருமைமிக்க இயக்குநர் சத்யஜித் ரே 1954-ல் தன் முதல் திரைப்படமான ‘பதேர் பாஞ்சாலி’யில் காட்டிய அபு - துர்கா ஆகியோரின் உலகம் இன்று சினிமாவின் உன்னத சாதனைகளாகவும், இருபதாம் நூற்றாண்டில் தனி மனிதச் சிதைவின் கலை ஆவணங்களாகவும் விமர்சகர்களால் போற்றப்பட்டுவருகிறது.

அரசியல், வரலாறு, பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தலைமுறைதோறும் ரசனைகள் மாறினாலும் தேசம், மொழி, இனம் எனும் எல்லைகள் கடந்து மனித மனம் மட்டும் அப்படியேதான் இருக்கிறது என்னும் உண்மையை அவர் தன் திரைப்படங்கள் வழி உலகிற்கு உணர்த்தி வருவதால்தான், ரே இன்று காலத்தின் அழியாப்புகழை அடைந்திருக்கிறார்.

இதன் வழியாக உலக நாடுகளின் மத்தியில் காந்தி, தாகூருக்குப் பிறகு ரே இந்தியக் கலாசாரத்தின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

ரே ஏன் இப்படிக் கொண்டாடப்படுகிறார் என்றால், அவர் வெறும் முப்பதுக்கும் மேற்பட்ட உன்னத கலைப்பொக்கிஷங்களை சினிமாவாக இயக்கினார் என்பதால் மட்டுமல்ல, அவர் அடிப்படையில் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர். மிகச்சிறந்த ஓவியர், இசையமைப்பாளர். இந்தியாவில் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் அவர் எழுதிய பெலூடா வரிசைச் சிறுகதைகளே உச்சம்.

இப்படிப் பன்முக ஆளுமை என்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் அவர் அளப்பரிய சாதனைத்தடத்தைப் பதிய வைத்தவர் என்பதுதான் இன்று அவரை உலகமே வியக்கக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இல்லாவிட்டால் இப்படிப்பட்ட ஆளுமைகள் ரேவைத் தங்கள் முன்மாதிரிகளாக எடுத்துக்கொள்வார்களா? அவ்ர்கள் யார் யார்? பட்டியலைப் பாருங்கள்...

காலத்தில் உறையாத பனித்துளி! - சத்யஜித்ரே

மார்ட்டின் ஸ்கார்சிசி, குவாண்டின் டொராண்டினோ, கிரிஸ்டோபர் நோலன், பிரான்சிஸ் போர்ட் கொப்போலா, ஜார்ஜ் லூகாஸ், வெஸ் ஆண்டஸன் போன்ற உலகம் வியக்கும் இயக்குநர்களும் கீனு ரீவ்ஸ், ஆட்ரே ஹெப்பர்பன், ஜூலியா ராபர்ட்ஸ், மெரீல் ஸ்ட்ரீப் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களும் சத்யஜித் ரேவைத் தங்களின் குருவாகவும் வழிகாட்டியாகவும் கருதுகின்றனர். அவர் திரைப்படங்கள் தங்களது அனுபவத்தின் மீதும் அறிவின் மீதும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி வழி நடத்தியதாகவும் வியந்து போற்றுகின்றனர்.இயக்குநர் அகிரா குரசோவா ‘சத்யஜித் ரேவின் திரைப்படங்கள் தன்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கின்றன’ எனப் பரவசத்துடன் குறிப்பிடுகிறார். “இதுவரை ஒருவர் ரேவின் படைப்புகளைப் பார்க்காவிட்டால், அவர் சூரியனையும் நிலவையும் பார்க்காமல் இந்த பூமியில் வாழ்வதற்கு ஒப்பானதாகும்’ எனக் கூறியிருக்கிறார். ரே படங்களின் கலை மதிப்பீடு உலக அளவில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால், ரேவை ‘ஹோமர், காரல் மார்க்ஸ், சார்லி சாப்ளின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு இணையான ஞானி’ எனப் புகழ்கிறார், அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ட்ரூ ராபின்சன். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ரேவை நிழல்போலத் தொடர்ந்து ஆய்வு செய்து அவர் வாழ்க்கை வரலாற்றை 1984-ல் ‘இன்னர் ஐ’ என்ற நூலாக வெளியிட்டு உலகில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்த எழுத்தாளர் அவர். ஆண்ட்ரூ ராபின்சன் மேலே பட்டியலிட்ட மேதைகள் அனைவரும் உலக வரலாற்றில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தங்கள் படைப்புகள் மூலம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர்கள். அவ்வகையில் ‘ரேவின் படங்கள் இருபதாம் நூற்றாண்டின் மானுட வாழ்வியலின் சாட்சியங்கள்’ என்று குறிப்பிடுகிறார் அவர்.

ரே சினிமாவை வெறும் கலைப்படைப்பாக மட்டும் பார்க்கவில்லை. அவர் கேமரா வழியே யாருமே பார்க்க முடியாத மனித அவலங்களை, வாழ்வியலின் சிதைவுகளைக் காட்சிப்படுத்துகிறார். அவரது படங்களில் நாம் எதிர்கொள்ளும் நிதானமும் பொறுமையும் அதன் பொருட்டு உருவாவதுதான். அவரது இந்த அணுகுமுறையும், அதன்மூலம் அவர் உண்டாக்க முயலும் கவித்துவமும்தான் இன்று அவரது படங்களை உலக சினிமாவின் பொக்கிஷங்களாக அடையாளப்படுத்தியிருக்கின்றன.

அபுவின் உலகம் சார்ந்து அவர் எடுத்த ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபு சன்சார்’, ‘அபராஜிதோ’ எனும் மூன்று படங்களுமே உலகம் முழுக்க சினிமா மாணவர்களுக்கு பைபிளாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மூன்று படங்களுமே பார்வையாளர்கள் மனதில் உண்டாக்கும் கவித்துவச் சலனம், கலையின் உன்னதம். ‘இது தனக்கு மட்டுமே சொந்தமானதல்ல’ என ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் ரே. அவரின் அப்பா சுகுமார் ரேவும், தாத்தா உபேந்திரா கிஷோர் ரேவும் மிகச்சிறந்த கதை சொல்லிகள். அவர்களும் சிறுவர்களுக்கான கதைகள் எழுதுவதிலும் ஓவியம் தீட்டுவதிலும் வல்லவர்கள் என்கிறார். குறிப்பாக, ‘என் தாத்தாவே எனக்கு கதைகளை உருவாக்குவதில் ஆதர்சம்’ என வியக்கிறார் ரே.

கல்கத்தாவில் பாலிகஞ்ச் பகுதியில் 1921-ல் பிறந்த ரே வுக்கு 6 வயதில் ஓர் அதிர்ஷ்டம் கிட்டியது. அவரின் அம்மா சுபத்ரா, ரவீந்தரநாத் தாகூரிடம் ஆசி வாங்க சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச்செல்கிறார். ரேவின் கையில் குட்டி நோட்டு, தாகூரிடம் ஆட்டோகிராப் வாங்க! ஆனால் அன்று தாகூர் நோட்டை வாங்கிக்கொண்டு, மறுநாள் வரும்படி கூறிவிடுகிறார். வழக்கமாக மகாகவி அப்படிச் செய்வதில்லை. மறுநாளும் செல்கின்றனர். அன்று தாகூர் கொடுத்ததாகச் சொல்லி நோட்டை சுபத்ராவிடம் தருகிறார்கள். அதில் ஆட்டோகிராபுடன் குட்டிக் கவிதை ஒன்றும் எழுதியிருந்தார் தாகூர். யாரோ லட்சத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் பேறு இது. சுபத்ரா அப்போதே, ரேவின் எதிர்கால வாழ்க்கையில் ஒரு வெளிச்சக்கீற்று கண்சிமிட்டுவதை உணர்ந்திருப்பார். அந்த வெளிச்சம், ரேவின் 29வது வயதில் முதன்முதலாக புகழ்பெற்ற இயக்குநர் ழான் ரெனுவார் மூலம் கல்கத்தாவில் நடந்தது.

அதுவரை வெறும் விளம்பரக் கம்பெனிக்குப் படம் வரைபவராக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார் ரே. தன் அலுவலகத்தின் எதிரே இருந்த சொகுசு விடுதியில் படப்பிடிப்புக்காக பிரெஞ்சு இயக்குநர் ரெனுவார் வந்திருக்கும் செய்தி கேள்விப்பட்டதும், ஏதோ உணர்ச்சிகள் உந்தித்தள்ள அந்த விடுதிக்குச் சென்று ரெனுவார் அறைமுன் காத்திருக்கிறார், அன்று ரெனுவார் தன் முன் கைகட்டி அமர்ந்திருக்கும் இளைஞனின் சினிமாமீதான ஆர்வத்தைக் கேட்டறிந்ததும், தாகூர் உணர்ந்த ஏதோ ஒரு சமிக்ஞையை அவரும் உணர்ந்திருப்பார்போல. மிகுந்த அக்கறையுடன் அவர் உடனே ‘ஒரு நல்ல திரைப்பட இயக்குநராக ஆவதற்கு என்னென்ன செய்யவேண்டும்’ எனப் பட்டியலிட்டுச் சொல்ல, அதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார் ரே. தொடர்ந்து அந்தப் பாதையில் பயணித்து, பின் ரெனுவாரே வியக்கும் திரைப்படங்களை எடுத்து ஆச்சர்யம் நிகழ்த்தினார். இப்படி அவர் வாழ்வில் எதிர்கொண்ட இரண்டு ஆளுமைகளின் உந்துதலை அவரது படங்கள் முழுக்கவும் காணமுடிவது இன்னொரு ஆச்சர்யம். ரேவின் கதைகளில் தாகூரின் தாக்கத்தையும் ரேவின் காட்சி மொழியில் ரெனுவாரின் அணுகுமுறையும் இருப்பதை எவரும் உணரலாம். ‘பதேர் பாஞ்சாலி’ இந்த இரண்டின் உச்ச வெளிப்பாடு.

காலத்தில் உறையாத பனித்துளி! - சத்யஜித்ரே

இன்றும் ‘பதேர் பாஞ்சாலி’ உலகின் ஒட்டுமொத்த சினிமாக்களிலும் தனித்து அடையாளம் காணப்படுவதற்கு அதன் காட்சி மொழி நமக்குக் கொடுக்கும் அனுபவம் உலகின் எந்தக் கலையாலும் தரமுடியாமலிருப்பதே காரணம். அப்படத்தில் குறிப்பாக மழையை முன்னதாக அறிவிக்கும், குளத்தில் நகரும் தத்துப்பூச்சியின் க்ளோசப்... இரவில் வரும் மிட்டாய் வண்டி பின்னால் ஓடும் சிறுவர்கள்... அக்காவைத் தேடி அலையும் அபுவின் கண்கள்... காஷ் பூக்கள் மலர்ந்த ஆளுயர புல்வெளியினூடே புகைவண்டியைப் பார்க்க ஓடும் துர்காவையும் அபுவையும் துரத்தும் கேமரா... அந்தக் கூன் பாட்டியின் மரணம்... துர்காவின் மரணம் போன்ற காட்சிகள் அவர்களை இன்னமும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

கடைசிக் காட்சியில் துர்காவின் அம்மா வீட்டை காலி செய்துகொண்டு போகும்போது, அதுவரை காணாமல்போனதாகக் கருதப்பட்ட பக்கத்துவீட்டுப் பெண்ணின் நெக்லசை சிறுவன் அபு கண்டுபிடிப்பதும், அதை யாரும் அறியாமல் குளத்தில் வீசிவிட்டு அதையே பார்ப்பதும், அந்தக் கண்களின் வழியே அதன் ஆழத்தில் ரே காட்டும் சஞ்சலங்களும் இன்றுவரை உலக சினிமாவில் நிகழாத உன்னதத் தருணங்கள்.

“அந்தச் சமயத்தில் அந்தச் சிறுவனிடம் என்ன சொன்னீர்கள்? அவன் எப்படி அந்தப் பாத்திரத்தில் அவ்வளவு துல்லியமாக நடித்தான்?” என விமர்சகர்கள் ஒரு திரையிடலின்போது சத்யஜித் ரேவைக் கேட்டனர். பதிலுக்கு அவர், “தெரியவில்லை. அவன் என்ன நினைப்பான் என நான் யோசித்து அதை எடுக்கவில்லை. தன் அக்காதான் திருடினாள் என யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் யாரும் அறியாமல் குளத்தில் எறிவதாக மட்டும் சொல்லிக் காட்சியை விளக்கினேன். பிறகு அந்தச் சிறுவன் அவனாக என்ன நினைத்தானோ தெரியாது” என்று வெளிப்படையாகக் கூறினார்.

இப்படி சாதனைகள் செய்த, உலக அறிஞர்களை இந்தியா பக்கம் திரும்பி அதன் மதிப்பை உயர்த்தச்செய்த சத்யஜித் ரேவின் நூற்றாண்டு விழாவை நம் இந்திய அரசு எப்படிக் கொண்டாடியிருக்க வேண்டும்? மாறாக அவரது நூறாவது பிறந்த நாளான கடந்த மே மாதம் 2ம் தேதியன்று கோவா திரைப்பட விழாவில் தனித்திரையிடல்கள் மற்றும் ஒரு ஆவணப்பட உருவாக்கம் என அறிவிப்புகளுடன் நிறுத்திக்கொண்டது. இதைவிட மோசம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தது. அன்று காலை வெறும் ஒரு ட்வீட்டோடு ரேவுக்கான நூற்றாண்டு விழாவை முடித்துக்கொண்டார்.

ஒரு ஐம்பது அடிக்கு இல்லாவிட்டாலும், தலைநகரில் ஐந்து அடிக்கு ஒரு சிலை; அல்லது உலக இயக்குநர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் கலந்துகொள்ளும் அவர் படங்கள் பற்றிய ஆய்வரங்கு; மேலும், அவர் பெயரில் போர்ட் அரங்கம்போல ஒரு கலையரங்கம்; இன்னும் நூலகம், ஆவணக்காப்பகம் இப்படி ஏதாவது அறிவித்திருக்கலாம்.

ரேவுக்கு ஆறு வயதில் அவர் ஆட்டோகிராபோடு தாகூர் எழுதிய கவிதைதான் இங்கு ஞாபகத்துக்கு வருகிறது. அது நமக்கும், நம் அரசாங்கத்துக்கும்கூட பொருந்தும். அந்த நான்கு வரிக்கவிதை இதுதான்...

பல வருடங்களாக பல்வேறு இடங்களுக்கு பல காததூரம் அலைந்து திரிந்தேன்
காடு மலை மேடு கடல் வெளி எல்லாம் சுற்றினேன்
ஆனால் நான் பார்க்கத் தவறிவிட்டேன்
என் வீட்டிலிருந்து இரண்டே அடிகளில் இருக்கும்
நெற்கதிரில் உறங்கிக்கிடக்கும் பனித்துளியை.