Published:Updated:

கொரோனா தொற்று... அம்மா, அப்பா இருவரும் மரணம்... தவிக்கும் மனவளர்ச்சி குன்றிய மணி!

அம்மாவுடன் மணி
அம்மாவுடன் மணி

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கே.வி.பி கார்டனில்தான் ஏ.கே.அருணாசலமும் அவருடைய மனைவி கீதாவும் வசித்துவந்தனர். இவர்களின் ஒரே மகன்தான் மணி.

கொரோனா நோய்த் தொற்றுடன் நம் மக்கள் போராடத் தொடங்கி சில மாதங்கள் கடந்துவிட்டன. தங்களால் இயன்ற அளவு பாதுகாப்புடன் இருந்தபோதும், கொரோனா பல உயிர்களைக் காவு வாங்கிற்று. பொருளாதார சிக்கல், நோய் குறித்த அச்சம் என மக்கள் பலரும் பதற்றத்தோடு காலம் நகர்த்திவருகின்றனர். பலரது வாழ்வை நிர்மூலமாக்கிய கொரோனா, மணியின் வாழ்க்கையையும் களைத்துப் போட்டிருக்கிறது.  மனவளர்ச்சி குன்றிய மணி, தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சைபெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன், கொரோனாவுக்கு தன் தந்தையையும் தாயையும் அடுத்தடுத்து பறிகொடுத்தவர். தாய், தந்தை இருவரும் இறந்ததை உணரும் நிலையில் மணி இல்லை என்பது பெரும் சோகம். மணியின் தந்தை ஏ. கே. அருணாசலம் விழித்திறன் குறைபாடுடையவர்.  

அருணாச்சலம் மற்றும் கீதா
அருணாச்சலம் மற்றும் கீதா

தம் அறிவுக் கூர்மையாலும், நிர்வாக ஆற்றலாலும் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநிலத் தலைவராக (All India Blind Progressive Association) பணியாற்றி வந்தார். இந்த கொரோனா காலத்தில், தன் அக்கம் பக்கத்தினர் பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். சமூக ஆர்வலரான அருணாசலம், இந்த ஊரடங்கு காலத்திலும்கூட பார்வையற்றவர்கள் உணவுக்கு தவித்துக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்தால், தம் வயதைப் பொருட்படுத்தாமல் அங்கு போய் உதவிவந்தார். அவரின் மனைவி கீதாவும் அவரோடு சேர்ந்து உதவிகளைச் செய்துவந்துள்ளார்.

இந்தத் தம்பதியினரைப் பற்றி அவர்கள் சுற்றத்தினர் பெருமிதம் பொங்கப் பேசுகின்றனர். இவர்கள் மறைந்த செய்தியைக் கேள்வியுற்று பெரும் சோகம் கொண்டனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி கார்டனில்தான் ஏ.கே.அருணாசலமும் அவருடைய மனைவி கீதாவும் வசித்து வந்தனர். இவர்களின் ஒரே மகன்தான் மணி. திருநெல்வேலியிலுள்ள மன வளர்ச்சி குறைபாடுடையவர்கள் பள்ளி ஒன்றில் மணி படித்துவந்துள்ளார். கொரோனா காரணமாக அவரைத் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். சென்னையில் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கே. வி. பி. கார்டனும் அடங்கும். கடந்த சில  வாரங்களாக இப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளான அருணாசலம், கீதா, மணி மூவரும்  ஓமந்தூரார் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி மனைவி கீதா சில தினங்களுக்கு முன் இறந்துபோனார். அவர் இறந்த மறுநாள் காலை அருணாசலமும் இறந்துவிட, தற்போது மணி மட்டும் சிகிச்சை பெற்றுவருகிறார். மணியை உடனிருந்து பார்த்துக்கொள்ளும் தினேஷிடம் பேசினோம்...

அருணாச்சலம் மற்றும் கீதா
அருணாச்சலம் மற்றும் கீதா

``அருணாசலம் சார் எனக்கு நண்பர். நாங்க `ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ்'ங்கிற அமைப்புல இருந்து கொரோனா நோய்த் தொற்றுள்ள மக்களுக்கு சில உதவிகள் செஞ்சுகிட்டு இருக்கோம். சில நாள்களுக்கு முன், அருணாசலம் சாரோட உறவினர் எனக்கு கால் பண்ணியிருந்தார். அருணாசலம் சார், கொரோனாவால பாதிக்கப்பட்டிருக்கிறதா சொன்னார். எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்காருனு தெரியலனு சொன்னாங்க. எனக்குத் தெரிஞ்ச மருத்துவர்கள் மூலமா விசாரிச்சு, ஓமந்தூரார் மருத்துவமனைல சிகிச்சைபெற்று வருகிறார்னு தெரிஞ்சது. நான் வந்து அவங்களைப் பார்க்கிறப்ப, அருணாச்சலம் சாரும் அவரது மனைவியும் சிகிச்சை பெற்று வந்தாங்க. சில நாட்கள் கழித்து, கீதா அம்மா இறந்து போனாங்க. அதற்கடுத்த நாள் அருணாசலம் சாரும் இறந்துபோனார். இப்போ, அவர் பையன் மணி சிகிச்சை பெற்றுகிட்டு வர்றார். மணிக்கு அவங்க அப்பா, அம்மா இறந்து போனது எதையுமே உணரக்கூடிய மனவளர்ச்சி கிடையாது. அருணாசலம் சார் நிறைய பேருக்கு உதவிசெய்யக்கூடிய அளவுக்கு ரொம்ப நல்ல மனிதர். கீதா அம்மாவும் அவருக்கு உறுதுணையா இருந்திருக்காங்க. அவர் உதவி செய்யுற இடத்துக்கு இவங்களும்கூட போயிருவாங்க. இவங்க இரண்டு பேரோட இறப்பும்கூட இப்படி கிட்டத்தட்ட ஒண்ணா நடக்கும்னு எதிர்பார்க்கல. மணிக்கு சீக்கிரம் கொரோனா குணமாகணும்" என்றார் வேதனையுடன்.

தன் தந்தையும் தாயும் இறந்ததை உணரக்கூடிய நிலையில் இல்லாத மணி, கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலும். கொரோனா போன்ற நோய்த் தொற்று பல தசாப்தங்களுக்கு ஒருமுறை ஏற்படக்கூடியது என்கின்றனர். இப்படியான பெருந்தொற்று, மணி போன்றவர்களின் வாழ்வை நிர்மூலமாக்கிவிடுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மணி, தன்னை தினமும் பராமரித்த, சோறூட்டிய தன் தாய், தந்தையின் அன்பை இனி ஒருபோதும் உணரப்போவதில்லை. அவருக்குத் துணையாக அன்பு செய்யவுள்ள சில நெஞ்சங்கள் மருத்துவமனையிலிருந்து மணி மீண்டுவர காத்திருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு