Published:Updated:

மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் சர்ச்சை - விலை போகிறதா மலை ரயில்?

ரயில்
பிரீமியம் ஸ்டோரி
ரயில்

பலரும் இது ஊட்டி மலை ரயிலையே மொத்தமாகத் தனியாருக்குக் குத்தகை விடுவதற்கான முன்னேற்பாடுதான் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் சர்ச்சை - விலை போகிறதா மலை ரயில்?

பலரும் இது ஊட்டி மலை ரயிலையே மொத்தமாகத் தனியாருக்குக் குத்தகை விடுவதற்கான முன்னேற்பாடுதான் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

Published:Updated:
ரயில்
பிரீமியம் ஸ்டோரி
ரயில்

நூற்றாண்டுப் பழைமை கடந்தும் குறைவில்லாத பாரம்பர்ய அழகுடன் தடதடத்துக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில். கானகக் குகைகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையில் ரயில் ‘கூகூகூ...’வென ஊர்ந்து செல்லும்போதே ‘தக்கத் தையத்தையா... தையா...’ பாடலை நம்மையறியாமல் பாடவைத்து, உற்சாகத்தில் திளைக்கச் செய்யும் பரவசப் பயணம் அது. அந்த ரயிலைத்தான் தற்போது, வார விடுமுறை நாள்களில் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து, கட்டணத்தையும் பல மடங்கு ஏற்றி, மொத்த உற்சாகத்தையும் வடியச் செய்துள்ளது ரயில்வே நிர்வாகம்!

மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் சர்ச்சை - விலை போகிறதா மலை ரயில்?

யுனெஸ்கோ பாரம்பர்ய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில், கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக இயங்கவில்லை. மலை ரயில் மீண்டும் இயங்குவது குறித்து தெற்கு ரயில்வே எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், ‘TN 43’ என்ற தனியார் நிறுவனத்தினர், ‘டிசம்பர் மாதம் சனி, ஞாயிறு மற்றும் ஜனவரிகளில் அனைத்து நாள்களும் மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யுங்கள்’ என்று மேட்டுப்பாளையத்தில் விளம்பர பேனர் வைத்தனர். அதில் டிக்கெட் கட்டணம் 3,000 ரூபாய் என்று குறிப்பிடப் பட்டிருந்ததுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், மலை ரயிலில் ‘TN 43’ என்ற எழுத்துகளுடன் இருக்கைகளையும் காவி நிறத்தில் மாற்றி, டிசம்பர் 5, 6-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) ரயில் பயணத்தையும் தொடங்கினர். ஒவ்வொரு பெட்டிக்கும் பணிப்பெண்கள் நியமிக்கப்பட்டு, அவர்களும் காவி நிற உடையில் காட்சியளித்தனர். என்னதான் நடக்கிறது? தென்னக ரயில்வே துறையில் சில அதிகாரிகளிடம் பேசினோம்.

‘‘மலை ரயிலைப் பொறுத்தவரை மூன்று பிரிவுகள் உள்ளன. முதலில் அட்டவணைப் பிரிவு. இதில் குறிப்பிட்ட தேதிகளில் ரயில் வழக்கம்போல இயங்கும். இந்தப் பிரிவில் இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.175 முதல் ரூ.295 வரை கட்டணம். முதல் வகுப்பில் பயணிக்க ரூ.520 முதல் ரூ.600 வரை கட்டணம்.

இரண்டாவது பிரிவு, சிறப்பு ரயில். இது சுற்றுலா சீஸனில் கூடுதல் டிரிப் அடிக்கும். இதற்கு முதல் வகுப்புக் கட்டணமாக 1,450 ரூபாயும், இரண்டாம் வகுப்புக் கட்டணமாக 1,050 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மூன்றாவது பிரிவு, சார்ட்டர்டு ரயில். இதில், ட்ரிப் அடிப்படையில் முழு ரயிலையும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய நிலவரப்படி ஒரு சார்ட்டர்டு ட்ரிப்புக்கு ஜி.எஸ்.டி வரியுடன் 4,93,000 ரூபாய் கட்ட வேண்டும்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ‘TN 43’ பெயரில் ஹோட்டல், பேக்கரி நிறுவனம் இயங்கிவருகின்றன. அவர்கள்தான் மலை ரயிலை சார்ட்டர்டு டிரிப் அடிப்படையில் வாடகைக்கு எடுத்துள்ளனர். மலை ரயிலில் காணப்படும் NMR (Nilgiri Mountain Rail) என்ற பெயருக்கு பதிலாக ‘TN 43’ என்ற பெயரை எழுதிவிட்டனர். பல்வேறு ரயில் நிலையங்களில் கவுன்ட்டர் திறந்து, ரூபாய் 3,000 வரை டிக்கெட் விற்பனையைத் தொடங்கிவிட்டனர். இது, சில அதிகாரிகள் செய்த தவற்றால்தான் நடந்தது’’ என்றார்கள்.

இந்த விவகாரத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், போராட்டத்துக்கும் தயாராகிவருகின்றன. பலரும் இது ஊட்டி மலை ரயிலையே மொத்தமாகத் தனியாருக்குக் குத்தகை விடுவதற்கான முன்னேற்பாடுதான் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரிகளிடம் பேசியபோது, ‘பெயர் வெளியிட வேண்டாம்’ என்ற நிபந்தனையுடன் பேசினார்கள்.

மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் சர்ச்சை - விலை போகிறதா மலை ரயில்?

‘‘கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு முற்றிலும் வருமானம் இல்லை என்பதால், கிடைக்கும் வருவாயை விடவேண்டாம் என்றுதான் நினைத்தோம். அந்தத் தனியார் நிறுவனத்தைப் பொறுத்தவரை டிசம்பர், ஜனவரி மாதங்களில் 13 ட்ரிப்புக்கு அனுமதி கேட்டார்கள். அவற்றில் நான்கு ட்ரிப்புக்குத்தான் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். அதற்கு மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்களோ, ‘ஜனவரியிலிருந்து தினமும் இயக்கப்போகிறோம். சம்மரிலும் இயங்குவோம்’ என்று விளம்பரம் வெளியிட்டு, ஊடகங்களில் பேட்டி கொடுத்திருக்கின்றனர். இது முற்றிலும் தவறு. தற்போது மலை ரயிலிலிருந்து அந்த நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டோம். மேலிடத்தில் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் வழக்கமான மலை ரயில் இயக்கப்படும்” என்றார்கள்.

‘TN 43’ நிறுவனத்தின் உரிமையாளர் முஜிப் ரஹ்மானிடம் பேசினோம். ‘‘ரயிலுக்குள் சீட் மாற்றியுள்ளோம். பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க், ஸ்நாக்ஸ் கொடுத்தோம். எல்லாவற்றையும் கணக்கிட்டுத்தான் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறோம். வாடகை தவிர, செக்யூரிட்டி கட்டணமாக ரூ.1,20,000 கட்டியிருக்கிறோம். எங்களது பிராண்டை மக்களிடம் கொண்டுசெல்ல நினைத்துச் சில விஷயங்களைச் செய்தோம். சொல்லப்போனால், 160 பேர் பயணம் செய்யக்கூடிய ரயிலில் ஒரு ட்ரிப்புக்கு 70 பேர்தான் வந்தார்கள். இது எங்களுக்கு நஷ்டம்தான். எங்கள் ஹோட்டல் லோகோ தொடங்கி, கடைகள் செட்-அப் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அதைத்தான் ரயிலிலும் செய்தோம். அதை வைத்துக்கொண்டு, பி.ஜே.பி-யுடன் தொடர்புபடுத்துகின்றனர்’’ என்றவரிடம், ‘‘நீங்கள் பி.ஜே.பி-யில் இருக்கிறீர்களா?’’ என்று கேட்டோம். ‘‘நான் மோடி ஜியைப் போற்றுகிறேன். பி.ஜே.பி-யில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறேன். அது என் தனிப்பட்ட விருப்பம். அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை’’ என்றார்.

சாமானியன் சந்தோஷமாக இருப்பது இது போன்ற பயணங்களின்போது மட்டுமே... அந்த அரிய வாய்ப்பையும் பறித்துவிட வேண்டாம்!