அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ராமாவரம் தோட்ட அரசியல்... எம்.ஜி.ஆர் வாரிசுகளுக்குள் குழப்பக் கச்சேரி!

ராமாவரம் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமாவரம் தோட்டம்

போனமுறை தோட்டத்தில் விழா நடத்தவும், நினைவு இல்லத்தில் கல்வெட்டு வைக்கவும் சசிகலாவுக்கு அனுமதி கொடுத்ததே லதா ராஜேந்திரன் குடும்பத்தினர்தான்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உயிரோடிருந்த காலத்தில், அ.தி.மு.க-வின் அத்தனை நகர்வுகளையும் தீர்மானிக்கிற, அதிகார பீடமாகத் திகழ்ந்த இடம் அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டம். ஆனால், இன்று அந்தத் தோட்டத்துக்குள்ளேயே பல்வேறு அரசியல் களேபரங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஒருவர் பா.ஜ.க ஆதரவு, ஒருவர் ஓ.பி.எஸ் ஆதரவு, ஒருவர் சசிகலா ஆதரவு, ஒருவர் திடீர் எடப்பாடி ஆதரவு என அ.தி.மு.க-போலவே எம்.ஜி.ஆரின் வாரிசுகளுக்குள்ளும் ஏகப்பட்ட அரசியல் முரண்பாடுகள். என்ன நடக்கிறது ராமாவரம் தோட்டத்தில்?

எம்.ஜி.ஆர் தனக்கு வாரிசு இல்லை என்கிற காரணத்தால், தன் மனைவி ஜானகியின் தம்பி நாராயணனின் மகள்கள் லதா, கீதா, ஜானகி, சுதா ஆகிய நான்கு பேரையும் வளர்ப்பு மகள்களாகத் தத்தெடுத்தார். அதோடு அவரது சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்புகளையும் பிரித்து உயில் எழுதிவைத்தார். அந்த வகையில், தோட்டத்திலுள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தில் தற்போது கீதா மதுமோகன், சுதா ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் வசித்துவருகின்றனர். அதேபோல எம்.ஜி.ஆரின் விருப்பப்படி அமைக்கப்பட்ட, காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளி, தற்போது லதா ராஜேந்திரன் வசம் உள்ளது.

குமார் ராஜேந்திரன்
குமார் ராஜேந்திரன்

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்கவிழாவை ராமாவரம் தோட்டத்தில் நடத்த சசிகலா முடிவுசெய்திருந்தார். அதேநாளில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ராமாவரம் தோட்டத்தில் விழா நடத்த அனுமதி கேட்டனர். குடும்பத்துக்குள்ளேயே ஒருவர் சசிகலாவுக்கு ஆதரவாகவும், மற்றொருவர் எடப்பாடிக்கு ஆதரவாகவும் நிற்க, முட்டல் மோதல்கள் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இது குறித்து எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசிகள் நம்மிடம் பேசும்போது, ``போனமுறை தோட்டத்தில் விழா நடத்தவும், நினைவு இல்லத்தில் கல்வெட்டு வைக்கவும் சசிகலாவுக்கு அனுமதி கொடுத்ததே லதா ராஜேந்திரன் குடும்பத்தினர்தான். ஆனால், இந்த முறை சசிகலா அனுமதி கேட்டும் லதா ராஜேந்திரன் மறுத்துவிட்டார். கூடுதலாக, பள்ளி விழாவைக் காரணம் காட்டி பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக் டருக்குக் கடிதமும் எழுதினார். அதனால், அதிர்ச்சியடைந்த சசிகலா தரப்பு, மற்றொரு வாரிசான சுதா ராஜேந்திரனிடம் அனுமதியைப் பெற்று விழா நடத்தினர்.

ராமாவரம் தோட்ட அரசியல்... எம்.ஜி.ஆர் வாரிசுகளுக்குள் குழப்பக் கச்சேரி!

இது ஒருபுறமிருக்க, மற்றொரு வாரிசான கீதா, அதேநாளில் எடப்பாடி பழனிசாமிக்கும் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்துவிட்டார். கீதா பா.ஜ.க-வில் இருப்பதோடு, வானதி சீனிவாசனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். அவர் மூலமாகவே எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக கீதா செயல்பட்டுவருகிறார். இரு தரப்பினரும் அனுமதி கேட்ட நிலையில், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி, சசிகலாவுக்கு 17-ம் தேதியும், எடப்பாடிக்கு 19-ம் தேதியும் விழா நடத்திக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது. இந்த நிலையில், லதா ராஜேந்திரனின் மகன் குமார் ராஜேந்திரன் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக, தி.நகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் விழா நடத்த அனுமதியளித்திருக்கிறார். இப்படி, ராமாவரம் தோட்டத்தை மையமிட்டு அடுத்தடுத்து அ.தி.மு.க அரசியல் கச்சேரிகள் நடக்கின்றன’’ என்றார்கள்.

கீதா
கீதா

பள்ளி வளாகத்தில் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று காவல்துறையில் கடிதம் கொடுத்துவிட்டு, தற்போது எடப்பாடி தரப்புக்குப் பள்ளியிலேயே விழா நடத்த அனுமதியளித்திருப்பது குறித்து, பள்ளி நிர்வாகி லதா ராஜேந்திரனின் மகன், குமார் ராஜேந்திரனிடம் பேசினோம். ``வெளிநாட்டுத் தூதுவர் பள்ளிக்கு வருகை தந்ததாலேயே 17 மற்றும் 18-ம் தேதி பள்ளி வளாகத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் கொடுத்தோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வில்தான் கலந்து கொள்கிறார். அதுவும் 19-ம் தேதிதான். அரசியல் நிகழ்வுகள்தான் வேண்டாம் என்று சொன்னோமே தவிர, குழந்தைகளுக்கு யார் வேண்டுமானாலும் உணவளிக்கலாம். இதனால் நாங்கள் சசிகலாவுக்கு எதிராகவோ, எடப்பாடிக்கு ஆதரவாகவோ செயல்படுகிறோம் என்பது சரியல்ல. ஆட்சியிலிருக்கும்போது யாருக்கும் எம்.ஜி.ஆர் தேவைப்படவில்லை. இப்போது தேவைப்படுகிறார். அதனால்தான் படையெடுத்து வருகிறார்கள். மற்றபடி தோட்டத்தில் எந்த அரசியலும் நடக்கவில்லை” என்றார் அவர்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

சசிகலா விழா நடத்த ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த அதே நாளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி கொடுத்தது ஏன் என்று எம்.ஜி.ஆரின் வாரிசும், பா.ஜ.க தமிழ் இலக்கியம் & தமிழர் நலன் பிரிவின் மாநிலச் செயலாளருமான கீதா மதுமோகனிடம் பேசினோம். ``சசிகலா வரும் விஷயம் எனக்குத் தெரியாது. அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்ட விஷயமும் எனக்குத் தெரியாது. ஒரு மாதத்துக்கு முன்பே என்னிடம் முதலில் வந்து அனுமதி கேட்டது எடப்பாடி தரப்புதான். இது தொடர்பாக காவல் நிலையத்தில் கடிதம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதால், கடிதம் கொடுத்தேன். மற்றபடி நான் யாருக்கும் ஆதரவு இல்லை’’ என்றார் சுருக்கமாக.

எம்.ஜி.ஆரின் வாரிசும், ஓ.பி.எஸ் அணியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பவருமான ராமச்சந்திரன் நம்மிடம், ``சின்னம்மாதான் முதலில் விழா நடத்த அனுமதி கேட்டார். ஆனால், ஆவின் வைத்தியநாதனின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, லதா ராஜேந்திரன் பொது நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது எனக் காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்தார். வைத்தியநாதன்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம். என் அம்மா ஆரம்பத்திலிருந்தே சின்னம்மா ஆதரவாளர்தான். அந்த அடிப்படையிலேயே அனுமதி கொடுத்தார். நான் எப்போதும் ஓ.பி.எஸ்-ஸுக்குத்தான் ஆதரவு. அ.தி.மு.க-வைத் தன் சொந்தக் கட்சியாக்கத் துடிக்கும் எடப்பாடி பழனிசாமியை எப்போதும் ஆதரிக்க மாட்டோம்’’ என்றார் அவர்.

வைத்தியநாதன்
வைத்தியநாதன்

ஆவின் வைத்தியநாதனிடம் இது குறித்துக் கேட்டோம். ``இருபது வருடங்களாகத் தலைவரின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்வுகளை ராமாவரம் தோட்டத்தில் கொண்டாடிவருகிறோம். மற்றபடி, எம்.ஜி.ஆர் வாரிசுகளின் குடும்ப விவகாரங்களில் தலையிட நான் யார்... ராமச்சந்திரனைப்போல பணத்துக்காக எதையும் செய்பவன் நான் இல்லை’’ என்று தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

ஏனோ எம்.ஜி.ஆரின் இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது...

`சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்... ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்..!’