Published:Updated:

`சூட்கேஸில் தூங்கும் சிறுவன்; உணவுக்கு சண்டையிடும் தொழிலாளர்கள்!' - லாக்டெளன் பரிதாபங்கள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் மாநிலம் விட்டு மாநிலம் பயணமாகிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை இன்றும் பார்க்கமுடிகிறது. கைகளில் கொஞ்சம் பணம் உள்ளவர்கள் கிடைத்த வாகனத்தில் பயணிக்கின்றனர். இல்லாதவர்கள் கால்நடையாகவே செல்கின்றனர். இவர்கள் எல்லாம் வேலை வாய்ப்பு தேடி பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றவர்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லை. வருமானம் இல்லாததால் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது.

சரி சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் என்றால் போக்குவரத்துக்கு வசதிகள் இல்லை. இதனால் வேறுவழியின்று கால்நடையாகவே சொந்த ஊர்களுக்குப் பயணமாகின்றனர். அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு ரயில்களில் முன்பு பயணம் செய்ததைவிட டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருக்கிறது. டிக்கெட் வாங்குவதற்கு பணமில்லாமல் சொந்த ஊர்களுக்கு நடைப்பயணம் தொடங்கிவிட்டனர்.

லாக்டெளன்
லாக்டெளன்

சூட்கேஸில் குட்டித்தூக்கம் போடும் சிறுவன்

உத்தரப்பிரதேச மாநில ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய குழுவினர் நடந்து சென்றுள்ளனர். நீண்ட தூரம் நடந்து வந்ததால் அந்தக் கூட்டத்தில் இருந்த சிறுவனால் இதற்கு மேல் நடக்க முடியவில்லை. அவனது தாயார் இழுத்துச் சென்ற சூட்கேஸின் மீது ஏறி படுத்துக்கொண்டான். சூட்கேஸ் மேலும் கணமானது. அந்தப்பெண்ணும் தன் மகனுடன் சேர்த்து சூட்கேஸை இழுத்துச் செல்கிறாள். எங்கே போகிறீர்கள் என்று கேட்டதற்கு ஜான்சிக்கு என்று மட்டும் பதிலளித்துள்ளனர். பஞ்சாப்பில் இருந்து ஜான்சிக்கு இவர்கள் நடந்து செல்கின்றனர். 800 கிலோமீட்டர் தொலைவை வெறுங்கால்களுடன் கடக்கத் தயாராகிவிட்டனர்.

`நான் மீண்டும் வருவேன் சார்...’ -ரயிலில் சொந்த ஊர் சென்ற ஜார்க்கண்ட் தொழிலாளி உருக்கம்!

சைக்கிள் பிரயாணம்

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணமாகின்றனர். செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாததால் தங்களது ஊர்களுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர். சைக்கிளில் தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்தக் குடும்பத்தலைவன் கால்நடையாக சைக்கிளைத் தள்ளிக்கொண்டு செல்கிறார். ஒரு சிறுவன் தூங்க அவனை அனைத்தபடி மற்றொரு சிறுவன் அமர்ந்திருக்கிறான்.

ஊரடங்கு காரணமாக மாநிலங்களில் சிக்கியிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மாநில அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பீகாரிலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பீகார் ரயில் நிலையத்தில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை முறையாக வழங்காததால் தொழிலாளர்கள் அந்தப் பொருள்களை பெறுவதற்கு சண்டையிடும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு