லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கும் ஆவின் பால் விலை, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பல தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட அடுத்தடுத்த நிகழ்வுகள், தமிழகத்தைப் ‘பொங்க’வைத்துள்ளன.

ஜூலை 5-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் பால்வளத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் பேசிய திருவொற்றியூர் எம்.எல்.ஏ-வான கே.பி.பி.சாமி, ‘‘கடந்த நான்கு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவேயில்லை. அதை உயர்த்த வேண்டும்’’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘பால் கொள்முதல் விலையை நிச்சயமாக உயர்த்துவோம். பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி வழங்கப்படும்போது, நிச்சயமாக நுகர்வோருக்கும் விலை உயர்த்தப்படும். ஏனெனில், நிர்வாகம் இப்போதே நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருக் கிறது’’ என்றார்.

இந்த விவாதம் நடந்து ஒன்றரை மாதத்துக்குள்ளாகவே, பால் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி, உடனடியாக அது நடைமுறைக்கும் வந்துவிட்டது. ஆவின் பால் விலை உயர்வுக்கு அரசு தரப்பில் சொல்லப்படும் காரணம், ‘நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கிவருகிறது’ என்பதுதான். ஆனால், பால் முகவர்கள் சிலரும் நேர்மையான ஆவின் அதிகாரிகளும், ‘ஆவின் நிர்வாகத்தில் நடைபெறும் நிர்வாக முறைகேடுகளையும் ஊழல்களையும் சரிசெய்தாலே, ஆவின் லாபத்தில் இயங்கும்’ என்கின்றனர்.

பாலில் நீர் கலந்து கொள்முதலில் நடைபெற்றுவரும் கொள்ளைகள், பால் பாக்கெட்டுகள் கசிந்துவிட்டன எனக் காரணம்காட்டி சமர்ப்பிக்கப்படும் நஷ்டக்கணக்குகள் என அரசு நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில், ‘பொதுமக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டுவரும் நுகர்வோர் மாதாந்தர அட்டை வாயிலாக, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது’ என்ற அதிர்ச்சித் தகவல் நமக்குக் கிடைத்தது.

நம்மிடம் பேசிய ஆவின் ஊழியர்கள் சிலர், ‘‘தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் இரண்டு விதங்களில் விற்பனையை மேற்கொள்கிறது. ஒன்று, மாதாந்தர நுகர்வோர் அட்டை மூலம் விற்பனை. இன்னொன்று, கடைகளின் மூலம் செய்யப்படும் விற்பனை. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில், ஏழு லட்சம் லிட்டர் பால் மாதாந்தர அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாதாந்தர அட்டை முறையில், 15 நாள்களுக்கு முன்பாகவே ஒரு மாதப் பாலுக்கான தொகையை மொத்தமாகச் செலுத்த வேண்டும். இதற்கு அட்டைதாரர் களுக்குச் சலுகையாக, ஒரு லிட்டர் பாலுக்கு இரண்டு ரூபாய் குறைத்து வழங்கப்பட்டுவருகிறது. இந்தச் சலுகையைப் பெற, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றைச் சமர்ப்பித்துப் பதிவுசெய்திருக்க வேண்டும்.

ஆவின் முன்னாள் ஊழியர்கள், தற்போது பதவிகளில் இருப்பவர்கள், சில டீலர்கள் ஆகியோர், அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இரண்டு ரூபாய் சலுகையை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு நெருக்கமானவர்கள், தங்கள் ஏரியாவைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் அடையாள அட்டைகளைப் பெற்று, அவர்களின் பெயரிலேயே மொத்தமாகப் பணம் செலுத்துகின்றனர். சலுகை விலையில் வாங்கும் பாலை, வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்று லாபம் அடைகின்றனர்.

சென்னையில் அட்டைதாரர்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக ஏழு லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் மூன்று லட்சம் லிட்டர் பால்தான் நேரடியாக அட்டைதாரர்களுக்குச் சென்றடைகிறது. மீதம் உள்ள நான்கு லட்சம் லிட்டர் பால், இது மாதிரியான அதிகாரிகள், டீலர்களால் முறைகேடாக வாங்கி விற்கப்படுகிறது. இதனால் சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு எட்டு லட்சம் ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை மாதத்துக்குக் கணக்கிட்டால் 2.4 கோடி ரூபாய்; ஆண்டுக்கு, 28.8 கோடி ரூபாய். இதுவும் சென்னையின் நஷ்டக்கணக்கு மட்டும்தான். தமிழகம் முழுவதும் கணக்கிட்டால், முறைகேடு தொகை மலைக்கவைக்கும்’’ என்று சொல்லி கிறுகிறுக்கவைக்கின்றனர்.

தொடர்ந்து அவர்கள் பேசும்போது, ‘‘இந்த நூதன முறைகேட்டை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. காரணம், அதில் ஈடுபடுவோர் எவரும் பால் பூத்துகளுக்கு நேரடியாக வந்து மொத்தமாக பால் பாக்கெட்டுகளை வாங்கிச் செல்வதில்லை. எந்தெந்த டீலர்களுக்கு எவ்வளவு லிட்டர் பால் கொடுக்க வேண்டும் என்ற தகவல்கள், பால் பூத்தில் உள்ளவர்களுக்குச் சென்றுவிடும். அதன் அடிப்படையில் சேர வேண்டியவர்களுக்கான பால் சென்று சேர்ந்துவிடும். அதன் பிறகு, முறைகேட்டில் ஈடுபடும் ஆவின் அதிகாரிகளும் டீலர்களும் தனியாகச் சென்று தங்களுக்கான பணத்தை வசூலித்துக்கொள்வார்கள்.

மாதாந்தர அட்டை விநியோக முறையில் 15 நாள்களுக்கு முன்பாகவே பணம் வந்துவிடுவதால், விற்பனை உறுதி செய்யப்படுவதாகக் கூறி நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ள மறுக்கிறது.

இதுபோக, ஆவின் பால் பாக்கெட் பிளாஸ்டிக் உறையின் தடிமனிலும் முறைகேடு நடைபெறுகிறது. விற்பனைக்கு வரும் உறையின் தடிமன் அளவு வேறு; டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள அளவு வேறு. இதிலும் அதிகாரிகள் லாபமடைகின்றனர்’’ என்றனர்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, ‘‘நுகர்வோர் மாதாந்தர அட்டைத் திட்டத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் தொடர்பான புகார் ஒன்றை ஆவின் நிர்வாகத்திடம் அளித்தோம். ஆனால், அந்தப் புகார்குறித்து விசாரணை மேற்கொள்ளாமலேயே, `குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது’ என அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, ஆவின் பால் விநியோகத்தில் டீலர்களை நியமிப்பதால், தேவையில்லாத முறையில் நிறைய பணம் வீணடிக்கப்படுகிறது. டீலர்களின் வண்டி வாடகை போன்றவற்றுக்காக பணத்தைத் தனியாக ஆவின் செலவிடுகிறது. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நிறுவனங்களே நேரடியாகக் கடைகளுக்கு பால் விற்பனை செய்கின்றன. அவர்கள் மக்களுக்கு விற்கிறார்கள். ஆவின் பால் விநியோகத்தில் நடுவில் டீலர்களை வைப்பதால், அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது’’ என்றார்.

சென்னை ஆவின் பொது மேலாளர் (விற்பனைப் பிரிவு) ரமேஷ், ‘‘பால் விநியோக அட்டை என்பது, பொதுமக்களின் நலனுக்காகத்தான் அளிக்கப்படுகிறதே தவிர, தனிப்பட்ட முறையில் யாருக்காகவும் வழங்கப்படுவதில்லை. இதுமாதிரியான புகார்கள் வரும்போதெல்லாம் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்துவிடுவோம். பால் தட்டுப்பாடுள்ள காலங்களில்தான் இத்தகைய புகார்கள் வருகின்றன. இப்போதுதான் பால் தாராளமாக இருக்கிறதே! இனிமேலும் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்’’ என்றார்.

ஆவின் மேலாண்மை இயக்குநர் காமராஜ், ‘‘இதெல்லாம் தவறான கருத்து. இதுவரை இதுமாதிரியான எந்தத் தவறும் நடக்கவில்லை. எங்களுக்கும் இ-மெயில் மூலமாகக்கூட எந்தப் புகாரும் வரவில்லை” என்றார்.

பால் அட்டையில் நடைபெறுவதாகச் சொல்லப்படும் முறைகேடுகள், நம்மைப் பதறவைக்கின்றன. அதிகாரிகளோ கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் இருப்பதுதான் நம்மை ஆச்சர்யப்படவைக்கிறது.