Published:Updated:

“மது வேண்டாம்... பால் விற்பனையே போதும்!”

பால்
பிரீமியம் ஸ்டோரி
பால்

தமிழக அரசின் வருவாயைப் பெருக்க எளிய வழி

“மது வேண்டாம்... பால் விற்பனையே போதும்!”

தமிழக அரசின் வருவாயைப் பெருக்க எளிய வழி

Published:Updated:
பால்
பிரீமியம் ஸ்டோரி
பால்
`ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது’ என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்துவருகின்றன.

மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்த போதிலும், உச்ச நீதிமன்றம் சென்று தடைக்கு விலக்கு பெற்று மதுக்கடைகளைத் திறந்துவிட்டது தமிழக அரசு.

‘தமிழக அரசின் முக்கிய வருமானமே டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம்தான். அதனால்தான், மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு இவ்வளவு முனைப்புக்காட்டுகிறது’ என்று ஒரு வாதம் வைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், ‘பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தியில் தமிழக அரசு இறங்கினால், மது விற்பனைமூலம் கிடைக்கும் வருமானத்தைவிட கூடுதலாக வருமானம் எடுக்க முடியும்’ என்று அடித்துச் சொல்கிறார், சமூக ஆர்வலர் மற்றும் தமிழ் கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் முழுநிலவன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்துப் பேசிய அவர், ‘‘குஜராத் மாநிலத்தில் பால் விற்பனையின் பெரும்பகுதி அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. குஜராத் அரசின் ‘அமுல்’ நிறுவனம், பால் விற்பனை மூலம் ஆண்டுக்கு 38,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. மேலும், பால் பவுடர், சாக்லேட் என மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருள்கள்மூலம் 10,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான ‘ஆவின்’ ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்தான் வருமானம் ஈட்டுகிறது. வெளிமாநில பால் நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிக்கின்றன.

“மது வேண்டாம்... பால் விற்பனையே போதும்!”
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 1 கோடியே 80 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 20 சதவிகித பாலைத்தான் ஆவின் விற்பனை செய்கிறது.

மீதி 80 சதவிகித பால் விற்பனை கர்நாடக அரசின் நந்தினி பால் நிறுவனம், ஆந்திராவைச் சேர்ந்த திருமலா, டோட்லா, ஹெரிடேஜ் ஆகிய தனியார் நிறுவனங்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஹட்சன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்வசம்தான் இருக்கின்றன.

கர்நாடக அரசின் நந்தினி பால் நிறுவனம் மட்டுமே, தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 75,000 லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. இப்படி பால், தயிர், மோர், வெண்ணெய், சீஸ், பனீர், பால் பவுடர், மில்க் ஷேக் எனப் பல பொருள்களின் சந்தை, தனியார் நிறுவனங்கள்வசம்தான் இருக்கிறது.

சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 2.5 லட்சம் லிட்டர் தயிர் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கும் அதிகம். அதேபோல், ஒரு மாதத்தில் சென்னையில் மட்டும் 400 டன் நெய் மற்றும் 200 டன் வெண்ணெய் விற்பனை செய்யப்படு கின்றன. இவற்றின் மதிப்பு 2 கோடி ரூபாயைத் தாண்டும். பால் பொருள்கள் சந்தையில் இந்த மூன்று பொருள்களின் மதிப்பு சென்னையில் மட்டுமே இவ்வளவு என்றால், தமிழ்நாடு முழுவதும் கணக்குப்போட்டால் எத்தனை கோடிகள் வரும்?! இந்த வருமானத் தில் பெரும்பங்கு தனியாருக்குத்தான் செல்கிறது’’ என்ற முழுநிலவன் நிறைவாக,

‘‘நமது மாநிலத்தின் பால் மற்றும் பால் பொருள்களின் சந்தையை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருமாறு தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். முன்பு தனியார்வசம் இருந்த மதுபான விற்பனையை, சட்டத்திருத்தம் மூலம்தான் தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதேபோல், பால் சந்தையையும் எளிதாக அரசே கையிலெடுத்து வெற்றிகரமான திட்டங்களைத் தீட்டினால், ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாயை வருமானமாக ஈட்ட முடியும்.

“மது வேண்டாம்... பால் விற்பனையே போதும்!”

இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். புதிய மாடு வளர்ப்புத் திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள். கால்நடைகள் பெருகினால், இயற்கை விவசாயம் வலுப்பெறும். கிராமப் பொருளாதாரம் பெருகும். ரசாயனக் கலப்பில்லாத தரமான பால் மற்றும் பால் பொருள்கள் நியாயமான விலையில் கிடைக்கும்’’ என்றார்.

இதுகுறித்து ஆவின் அலுவலர் களிடம் பேசினோம். “இந்த யோசனையைப் பரிசீலிக்கலாம். கர்நாடகாவில் பால் உற்பத்தி யாளர்களுக்கு அந்த மாநில அரசு கூடுதல் விலை கொடுப்பதால்தான், அங்கு தனியார் நிறுவனங்களால் கோலோச்ச முடியவில்லை. தமிழ்நாட்டிலும் கூடுதல் விலை கொடுத்தால், விவசாயிகள் தனியாருக்கு பால் வழங்க மாட்டார்கள். ஆவின் கொள்முதல் அதிகரிக்கும். தனியார் தவிர்க்கப்பட்டால் மக்களுக்கு தரமான பால் கிடைக்கும். நேர்மையான, திறமையான அதிகாரிகள் இருக்கும்பட்சத்தில், இதன்மூலம் மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்கள்.

சரி, தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள்? ஹெரிடேஜ் நிறுவனத்தின் பால் விற்பனைப் பிரிவு துணைப் பொதுமேலாளர் கிருஷ்ணனிடம் பேசினோம். “இந்த யோசனையை நாங்கள் கண்டிக்கிறோம். இது சாத்தியமே இல்லை. பால், அத்தியாவசியப் பொருள். அரசு நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சென்னையின் ஒரு நாள் பால் தேவை, 25-30 லட்சம் லிட்டர். இதில் 12 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் விற்பனை செய்கிறது. மீதித் தேவையை தனியார் நிறுவனங்களே நிறைவுசெய்கின்றன. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் தேவையையும் ஆவின் மட்டுமே நிறைவேற்ற இயலாது. விவசாயிகளுக்கு, கொள்முதல் தொடங்கி விற்பனை வரை பல சவால்கள் உள்ளன.

“மது வேண்டாம்... பால் விற்பனையே போதும்!”

தவிர, தனியார் பால் நிறுவனங்களை நம்பி ஏராளமான முகவர்கள், ஊழியர்கள் இருக் கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? எல்லாவற்றுக்கும்மேலாக ஜனநாயக நாடு. பால் விற்பனை செய்வதிலிருந்து தனியார் நிறுவனங்களைத் தடுக்க முடியாது. அது சட்டப்படியும் சாத்தியமில்லை. பால் விற்பனையில் போட்டி இருப்பதால்தான் தரமான பால் மக்களுக்கு கிடைக்கிறது” என்றார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முகமது அலி, “விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நீண்டநாள் கோரிக்கை. தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு, பெரும்பாலும் குறைவான விலையே தரப்படுகிறது. ஆவின் சற்று கூடுதல் விலை தருகிறது. அதேசமயம், பால் கொள்முதலை ஆவின் மட்டுமே ஏற்று நடத்துவதால் லாபம் கிடைத்துவிடாது. ஆவினில் நிலவும் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடு களையும் களைய வேண்டும்” என்றார் முத்தாய்ப்பாக!

பால் பொருள்கள் விற்பனையின் சாதக-பாதகங் களை ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்கும்பட்சத்தில், தமிழக அரசின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.