Published:Updated:

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 5

காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீர்

“கொடியை முடக்கலாம்... மொழியை அழிக்கலாம்... ‘காஷ்மீரி’ என்கிற அடையாளத்தை அழிக்க முடியாது!”

வெளியே வந்தோம். சைரன் அலறல் அருகில் கேட்டது. ஆம்புலன்ஸ் சத்தம் அது. சன்வார் ஏரியாவில் கால் பதித்தோம். அங்கு இருந்த ராணுவ வீரர் ஏற்கெனவே நம்மைப் பார்த்திருந்ததால் நட்புடன் புன்னகைத்தார். ஆம்புலன்ஸ் சத்தத்தைக் குறிப்பிட்டு, `‘என்ன?'' என்று கேட்டோம். “இதெல்லாம் இங்கே சகஜம் சார். யாருக்கோ அடிப்பட்டிருக்கு. தூக்கிட்டுப் போறாங்க” என்றார். நன்றாக இருட்டிவிட்டது. மீண்டும் டாக்ஸி தேட வேண்டும். பகலிலேயே கிடைக்கவில்லை, இரவிலா கிடைக்கப்போகிறது. அப்போது கார்த்தி, “சோர்ஸ் யாருக்காவது போன் செய்தால் டாக்ஸி கிடைக்குமல்லவா?” என்று காதைக் கடித்தார். “அது ஒன்றும் பிரச்னை இல்லை. நேராக ரூமுக்குச் சென்று போர்த்திக்கொண்டு படுத்துக்கொள்ளலாம். அதற்காகவா வந்தோம். இப்படியான இரவு விசிட்களில்தான் உண்மையான களநிலவரங்களை அறிய முடியும்” என்று பேசியபடி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். நான்கு தெருக்களைக் கடந்திருப்போம். மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டது.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 5

சிறு தெருமுனையை பிரதானசாலையுடன் இணைக்கும் பகுதியில் நின்றிருந்தார் ஒரு பெண்மணி. நடுத்தர வயது. பதைபதைப்புடன் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் உதடுகள் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தன. கண்களில் நீர். இருட்டில் நம்மை அவர் கவனிக்கவில்லைபோல. நாம் அவரை அருகில் கடக்க முற்பட்டபோது திடுக்கிட்டார். ஆங்கிலத்தில் அவரிடம், “என்ன பிரச்னை, ஏன் இங்கு தனியாக நின்று அழுகிறீர்கள்?” என்று கேட்டேன். பதில் எதுவும் சொல்லாமல் நம்மை உற்றுப் பார்த்தவரிடம், “நாங்கள் பத்திரிகையாளர்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம்” என்றோம். நம்ப முடியாமல் பார்த்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிறகு திடீரென, “ஓ... தமிழ்நாட்டிலிருந்து எங்களைப் பார்க்க வந்திருக்கிறீர்களா... எங்கள்மீது ரொம்பவும் அக்கறைதான் உங்களுக்கு” என்றபோது, அவர் நம்மை சாடும்விதமாகப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. உடையாத நல்ல ஆங்கிலம் அது. தொடர்ந்து பேசியவர், “இங்கே ஒரு ஆம்புலன்ஸ் போனதைப் பார்த்தீர்களா, எந்தப் பக்கமாகப் போனது? என் ஸ்டூடன்ட் அவன். டியூஷன் முடிந்து வெளியே வந்தான். நான் வீட்டுக்குள் இருந்தேன். வெளியே அலறல் சத்தம் கேட்கவே ஓடி வந்து பார்த்தால், மிலிட்டியன்ஸ் அவனை ஆம்புலன்ஸில் தூக்கிச் சென்றுவிட்டார்கள்” என்றார். நாம் அதிர்ச்சியுடன், “எத்தனை வயது இருக்கும் அந்தப் பையனுக்கு?” என்று கேட்டோம். “11 வயது. பெரிய டெரரிஸ்ட் ஆகும் வயதல்லவா அவனுக்கு... அதுதான் தூக்கிச் சென்றுவிட்டார்கள். நகரில் இந்த வாரத்தில் இது நான்காவது சம்பவம்” என்றார். கடும்விரக்தி வெளிப்பட்டது அவரின் வார்த்தைகளில்.

“அம்மா உங்கள் வேதனை புரிகிறது. காஷ்மீர், இரும்புத்திரை கொண்டு மூடப்பட்டுள்ளது. உண்மையில் உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியவில்லை. அதனால்தான் உயிரை பணயம்வைத்து நாங்கள் வந்திருக்கிறோம். அரசுத்தரப்பிலும் முக்கிய நபர்களிடமும் பேசினோம். அவர்கள் எங்களிடம், ‘காஷ்மீர் மக்களின் பாதுகாப்புக்காகவே இவ்வளவும் செய்கிறோம். கலவரத்தில் மக்கள் பலியாவதைத் தடுக்கவே தகவல் தொடர்புகளைத் துண்டித்ததோம்’ என்றெல்லாம் சொன்னார்கள்” என்று பொறுமையாக விளக்கினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்தக் கணம் அவர் நம்மைப் பார்த்த பார்வையில் நம்பிக்கை தெரிந்தது. உதடுகள் துடிக்க, “உண்மையாகவே எங்களைப் பார்க்கத்தான் வந்தீர்களா, இந்த காஷ்மீரிகள் தினமும் படும் துயரத்தை உலகுக்கு அறிவிக்கத்தான் வந்தீர்களா, இந்த ஆசிரியை 74 நாள்களுக்கும்மேலாக பள்ளிக்குச் செல்லவில்லை... ஏன், என்ன பிரச்னை என்று கேட்கத்தான் வந்தீர்களா, என்னிடம் பயிலும் 300 சிறுவர்களில் ஏழு சிறுவர்கள் காணாமல்போய்விட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என விசாரித்து உலகுக்குப் பறைசாற்றத்தான் வந்தீர்களா, இன்னும் நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. எனக்குள்ளே கேட்டுக் கேட்டு விடை கிடைக்காமல் இரண்டு மாதங்களாகத் தவிக்கிறேன். விடை சொல்வீர்களா... இல்லையெனில், என் இதயம் வெடித்துவிடும்” என்றபடி தழுதழுத்தார். நீல நிறக் கண்கள் அவருக்கு. கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 5

திடுமென என் கைகளைப் பற்றிக்கொண்டவர், பிரதானசாலையின் முனையிலிருந்து தெருவுக்குள் அழைத்துச் சென்றார். என் இத்தனை ஆண்டுக்கால பத்திரிகை வாழ்வில் சந்தித்திராத அனுபவம் அது. ஏதேதோ உணர்வுகள் மனதைப் பிசையத் தொடங்கின. நான் யார், அந்தப் பெண்மணி யார், நாங்கள் ஏன் இங்கே சந்திக்க வேண்டும்? இரவு 11 மணி நெருங்கிக்கொண்டிருந்தது. நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் முன்பின் அறிந்திராத ஓர் அந்நிய மனிதனை என்ன நம்பிக்கையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார் இந்தப் பெண். இப்படி நினைத்தாலும் இன்னொரு பக்கம் பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை அந்தப் பெண்மணி பயங்கரவாதியாக இருந்துவிட்டால்? இயக்குநர் மணிரத்னத்தின் ‘உயிரே’ படம் நினைவுக்கு வந்துதொலைந்தது. மனித வெடிகுண்டாக இருப்பாரோ... ஏதேதோ எண்ணங்கள் உலுக்க, அவரை “அம்மா...” என்று அழைத்தேன். திரும்பிப் பார்த்தார். ஒரு கணம் முழுமையாக அவர் முகத்தைப் பார்த்தேன். இறந்துபோன என் மூத்த சகோதரியைப்போல் தெரிந்தார் அவர். `ஏன், நான் மனித வெடிகுண்டாக இருப்பேன் என்று அவர் சந்தேகிக்கக் கூடாதா, அதையும் தாண்டிய நம்பிக்கையில் அல்லவா அழைத்துச் செல்கிறார். எவ்வளவு துயரங்கள் இருந்தால், முன்பின் தெரியாத ஒருவரை நம்பி அழைத்துச் செல்கிறார்’ என்ற எண்ணம் தோன்றியது.

ஒரு வீட்டின் அருகில் நின்றார். பெரிய தாழ்வாரம் வைத்த வீடு அது. தொங்கும் சிறுதொட்டிகளில் மலர்ச் செடிகள் இருந்தன. தாழ்வார சுவரில் கரும்பலகை பதிக்கப்பட்டிருந்தது. அதில் குர்ஆனில் இருப்பதைப் போன்ற எழுத்துகள் சாக்பீஸில் எழுதப்பட்டிருந்தன. அவருடன் பேசியதில் ஆசிரியரான அவர், கூடவே சமூகப்பணிகளும் செய்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். கரும்பலகையைக் காட்டி, “இவை என்ன அரபி எழுத்துகளா?” என்று கேட்டேன். இல்லை என்பதுபோல் தலையசைத்தவர், “இவை உருது எழுத்துக்கள். உருது எங்கள் தாய்மொழி” என்றவர், கரும்பலகையில் அந்த எழுத்துக்களை அழித்துக்கொண்டே, “இனி உருது மொழியை இங்கு கற்பிக்கக்கூட தடைவரும்போலிருக்கிறது. அது எங்கள் தாய்மொழி மட்டுமல்ல... காஷ்மீர் மாநிலத்தின் அலுவல் மொழியாகவும் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு, இந்தியை மாநில அலுவல் மொழியாக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. ஆனால், காஷ்மீர் முழுவதும் மக்கள் பரவலாக உருதுதான் பேசுகிறார்கள். பலருக்கு இந்தி தெரியாது. அவர்களிடம் இந்தியைத் திணிக்கிறார்கள். நிற வெறிக்கும் மொழி வெறிக்கும் பெரியதாக என்ன வித்தியாசம்?”

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 5

தீக்கங்குகளைப்போல் வந்து விழுந்தன வார்த்தைகள். கேள்விகளைத் தொடங்கி விட்டார் என நினைத்துக்கொண்டேன்.

“காஷ்மீரின் தனிக்கொடியை அகற்றிவிட்டு, இந்திய தேசியக்கொடியை மட்டும் ஏற்றினார்கள். அடுத்து, மொழியை மாற்றத் துடிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ‘ரேடியோ காஷ்மீர்’-ஐ ‘ஆல் இண்டியா ரேடியோ’ ஆக்குகிறார்கள். நீங்கள் ஜம்முவையும் காஷ்மீரையும் லடாக்கையும் பிரிக்கலாம். கொடியில் தொடங்கி மொழி வரை எங்கள் அடையாளங்களை அழிக்க நினைக்கலாம். ஆனால், ‘காஷ்மீரி’ என்ற எங்களின் அடையாளத்தை மட்டும் ஒருபோதும் அழிக்க முடியாது. காஷ்மீரியின் கடைசி உயிர் இருக்கும் வரை அது நடக்காது. என் தாய், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றவர்; இந்திய தேசியத்தை ஆதரித்தவர். ஆனால், ஒரு காஷ்மீரியாக தன்னைத் தரித்துக்கொண்டவர். ஆதரிப்பதற்கும் தரித்துகொள்வதற்கும் உணர்வுரீதியாக சித்தாந்தரீதியாக கடலளவு வித்தியாசம் இருக்கிறது. அந்தச் சித்தாந்தங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லித்தான் எங்களை வளர்த்தார்; படிக்கவைத்தார். நான் மட்டுமல்ல, காஷ்மீரியான நாங்கள் இந்திய தேசியத்தை ஆதரிக்கிறோம். ஆனால், காஷ்மீரி என்கிற எங்கள் அடையாளத்தை அழிக்கவிட மாட்டோம்” என்றவரிடம், “உங்கள் மாணவரை ராணுவ வீரர்கள் தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்றீர்களே...” என்று கேட்டோம்.

“அவர்களுக்கு இதே வேலையாகப்போய்விட்டது. முன்பெல்லாம் இங்கு கல் எறிபவர்களில் கணிசமானோர் சிறுவர்களாக இருந்தார்கள். அந்த வகையில் அரசு விசாரணை அமைப்புகள் ‘கல் எறிபவர்கள்’ என்று பெரிய பெயர் பட்டியலைத் தயாரித்து வைத்துள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும் லெட்ஜர் போட்டு அதைப் பராமரிக்கிறார்கள். அதில் இருப்பவர்களைத் தேடித் தேடித் தூக்கிச் சென்று சித்ரவதை செய்கிறார்கள். சிலரை இரண்டொரு நாளில் விடுவித்துவிடுவார்கள். சிலரை அதிகாரபூர்வமாக சிறார் சிறைக்கு அனுப்பியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பலர் திரும்பி வரவில்லை” என்றவர், மேலும் சில புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“சில நாளிதழ்கள், ‘ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து 6,300 காஷ்மீர் இளைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 1,300 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்’ எனக் குறிப்பிடுகின்றன. உண்மை உங்களுக்குத் தெரியாதா, உங்களின் சோர்ஸ் இந்த அரசும் அரசு அதிகாரிகளும்தானா? காணாமல்போனவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்ட காஷ்மீரிகள், சாமானியர்கள் ஆகியோரையெல்லாம் உங்கள் சோர்ஸ்களாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? அரசு தரும் புள்ளிவிவரங்களை மட்டுமே வாந்தியெடுப்பது என்ன வகையான ஜர்னலிசம்?” என்று அவர் கேட்டபோது உறைந்துபோனேன்.

“இங்கு இருக்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பர்வேஷ் இம்ரோஷ், ‘20,000 முதல் 30,000 காஷ்மீரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்குங்கள்’ என்று கேட்கிறார். அதற்கு அரசிடமிருந்து பதில் இல்லை. இன்னொரு பக்கம் மற்ற சில மனித உரிமை அமைப்புகள், `குறைந்தது 13,000 சிறுவர்கள் கடத்தப்பட்டு, இந்தியச் சிறைகளில் இருக்கிறார்கள்’ என்று கூறுகின்றன. எங்களது தகவல் தொடர்புகளைத் துண்டித்துவிட்டால், இணையத்தை முடக்கிவிட்டால் நாங்கள் எதுவும் அறியாமல் முடங்கிப்போவோம் என நினைக்கிறதா இந்திய அரசாங்கம்? என்றவர் ``ஒரு நிமிடம்’’ என்றபடி வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார்.

“கேள்விகள் கேட்டு தொண்டை வற்றிவிட்டது. நீங்களும் அருந்துங்கள்” என்று குடுவையில் தண்ணீர் கொடுத்தார். குடித்துவிட்டு, குடுவையைப் பார்த்தேன். கலைநயம்மிக்க குடுவை அது. தொடர்ந்து பேசினார் அவர். “ஒரு விஷயம் தெரியுமா... சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் குவிந்துவருகின்றன. அமேசான், கூகுள், ஈ-பே, ஆப்பிள் ஆகிய நான்கு நிறுவனங்கள் அங்கு கால் பதித்துள்ளன. உய்குர் மட்டுமல்ல... பாலஸ்தீனம், ரோஹிங்கியா, இலங்கை, இப்போது காஷ்மீர்... இப்படி இன அழிப்பு நடக்கும் இடங்களிலெல்லாம் அரசுகளின் ஒரே குறிக்கோள் என்ன தெரியுமா? வளர்ச்சி! மனிதர்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களை வளர்ப்பதுதான் வளர்ச்சியா?”

அமைதியாக இருந்தேன். “சரி, கிளம்புங்கள். பத்திரம்” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று கதவை அடைத்துக்கொண்டார். என் மனதினுள் ஒரு கதவு திறந்துகொண்டது!

(திரை விலகும்)