Published:Updated:

இரும்புத்திரை காஷ்மீர்! - 6 - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்?

மினி தொடர்

பிரீமியம் ஸ்டோரி
இரும்புத்திரை காஷ்மீர்! -  6 - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்?

பாகிஸ்தான் எல்லையையொட்டி காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் இருக்கும் உரி என்கிற கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்பது எங்களது அடுத்த இலக்கு. உரி மீதான பயங்கரவாதத் தாக்குதல் நினைவு இருக்கிறதா? 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி, பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, இந்திய ராணுவ முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியதே... அதே இடம்தான்! அந்தத் தாக்குதலில் இந்தியாவின் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். எதிர்த்தரப்பில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரிலிருந்து 102 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அந்தக் கிராமம். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையின் சீரியல் எண் என்.ஹெச்-1 இங்கிருந்துதான் தொடங்குகிறது. ஸ்ரீநகரிலிருந்து பாட்டான், கனிஷ்போரா, பாராமுல்லா, பிரிங்கால், நம்பாலா வழியாகச் செல்ல வேண்டும். நம்பாலா தாண்டினால் பெரியதாகப் போக்குவரத்து வசதி இல்லை அல்லது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நம்பாலா வரை பொதுப்போக்குவரத்து கிடைத்தது.

நம்பாலா தாண்டி ஆப்பிள் லோடு வாகனம், சரக்கு ஆட்டோக்கள், கிராமத்து வாகனங்கள் என்று கிடைத்ததைப் பிடித்து பயணித்தோம். ஒருகட்டத்துக்கு மேல் நடைப்பயணம் மட்டுமே. கிராமவாசிகள் வழக்கம்போல, ‘‘இதோ பக்கம்தான். ரெண்டு கிலோமீட்டர்” என்றார்கள். பார்த்தால் அப்படித் தெரியவில்லை. மேடும் பள்ளமுமாக தொடர்ந்தது பயணம். இடையே ஓர் இடம் கைவிடப்பட்ட கிராமம்போல இருந்தது. அங்கு அரசுப்பள்ளி ஒன்று மூடப்பட்டிருந்தது. இந்திய அரசின் ஆகஸ்ட் 5 நடவடிக்கையால் மூடப்பட்டதுபோல தெரியவில்லை. சில ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும்போல. ஏகப்பட்ட தூசும் ஒட்டடையுமாகப் பாழடைந்துகிடந்தது அந்தப் பள்ளி. பள்ளியின் சுவர்களில் தோட்டாக்கள் பாய்ந்ததற்கான அடையாளங்கள். சில ஒற்றையடிப் பாதைகள். அங்கு ஒரு கிராமம் இருந்ததற்கான எச்சங்கள் மிச்சம் இருந்தன. உரி தாக்குதலுக்குப் பிறகு காலிசெய்யப்பட்ட கிராமமாக இருக்கலாம் என்று தோன்றியது. மதிய வேளை அது. பயணக் களைப்பால் அங்கு சிறிது நேரம் இளைப்பாற முடிவெடுத்தோம்.

இரும்புத்திரை காஷ்மீர்! -  6 - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்?

நேற்றைய தினம் முன்னிரவில் சந்தித்த அந்த ஆசிரியப் பெண்மணியின் கேள்விகள் தொடர்ந்து மனதில் அலையடித்துக்கொண்டிருந்தன. காஷ்மீர் பிரச்னையைப் பொறுத்தவரை சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது என்று தோன்றியது. எதிர்காலம் என்னவென்று யூகிக்க முடியாத நிலையில் இருக்கிறது காஷ்மீர். உடனடியாக ஆற்றிவிடக்கூடிய ரணம் அல்ல அது. காஷ்மீரின் பிரச்னைகளுக்குப் பல முகங்கள் இருக்கின்றன. ஒன்றைத் தொட்டால் இன்னொன்று பற்றிக்கொள்ளும் தொடர்ச்சங்கிலி அபாயங்கள் நிறைந்தவை அவை.

ஒருபக்கம் எதிரி நாட்டிலிருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதம்... இன்னொரு பக்கம் காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து, இந்திய தேசிய மைய நீரோட்டத்துடன் இணைக்கப் போராடும் இந்திய ஒன்றியம்... இதை விரும்பாத பல்வேறு தரப்புகள். இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட காஷ்மீரிகள். இப்போது நான் நினைப்பதே மேலோட்டமான, தட்டையான பார்வைதான். உண்மையில், இதைவிட உள்ளுக்குள் அதிகமான இடியாப்பச் சிக்கல்களைக்கொண்டது காஷ்மீர் விவகாரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயங்கரவாத தரப்பினர், இந்தியாவுடன் இணைய விரும்பும் தரப்பினர், பாகிஸ்தானுடன் இணைய விரும்பும் தரப்பினர், ‘இரு நாடுகளும் வேண்டாம்; சுதந்திரம் மட்டுமே தேவை’ என்று கோரும் தரப்பினர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு மாதந்தோறும் சம்பளம்போல தரும் பணத்துக்கு விலைபோயிருக்கும் சில உள்ளூர் இளைஞர் கூட்டங்கள், அடக்குமுறைக்கு எதிராக ஆவேசத்துடன் கல்லெறியும் இளைஞர்களுக்கு இடையே ஊடுருவும் கைக்கூலி குழுக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என்.ஜி.ஓ-க்கள், அவர்கள் சொல்லித்தரும் கற்பிதங்கள்... எனக் குழப்பமான சூழலில் வாழ்ந்துவருகிறார்கள் காஷ்மீரிகள். இந்திய தேசியத்துக்கும் சுதந்திர வேட்கைக்கும் இடையே ஊசலாடுகிறது அவர்களின் மனவோட்டம்.

இன்னொரு பக்கம் வீழ்ந்துவரும் காஷ்மீரின் பொருளாதாரம் மிகவும் கவலை தருகிறது. இந்திய தொழில் துறை அமைச்சகம் அளிக்கும் தரவுகளின்படி கடந்த 2000 ஏப்ரலிலிருந்து 2019 மார்ச் வரை காஷ்மீருக்கு வந்த நேரடி அந்நிய முதலீடு 390 மில்லியன் ரூபாய் மட்டுமே. இது இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட பலமடங்கு குறைவு. இன்னொரு பக்கம் சுற்றுலாவும் பலத்த அடிவாங்கியிருக்கிறது. காஷ்மீர் மக்களின் முக்கிய வாழ்வாதாரமே சுற்றுலாதான். ஆனால், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 41.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. இதுவே ஆகஸ்ட் 5 நடவடிக்கைக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலுமாக நின்றுவிட்டது. காஷ்மீர் மக்களின் தனிநபர் சராசரி வருவாய் ஆண்டுக்கு 93,310 ரூபாய். மாதத்துக்கு சுமார் 7,775 ரூபாய். கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 250 சொச்சம் ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். இது இந்தியாவின் தேசிய தனிநபர் சராசரி வருவாயான ஆண்டுக்கு 1,24,460 ரூபாயைவிடக் குறைவு.

இரும்புத்திரை காஷ்மீர்! -  6 - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்?

இப்படியான எண்ணங்களுடன் சோர்ஸ் ஒருவர் கொடுத்த புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ‘விட்னெஸ் காஷ்மீர் 1986 - 2016: நைன் போட்டோகிராபர்ஸ்’ என்கிற ஆங்கிலப் புத்தகம் அது. காஷ்மீரின் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான சஞ்சய் காக் தொகுத்திருக்கும் புகைப்படங்களுடன் கூடிய ஆவணம். காஷ்மீரிகளின் கடந்தகால போராட்டங்களை, மக்களின் துன்பியல் பாடுகளைப் புகைப்படங்களின் வழியாக விளக்கியிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். அதுவரை சிக்னல் கிடைக்காமல் இருந்த எனது மொபைலில் திடீரென்று பீப் சத்தம் கேட்டது. எடுத்துப்பார்த்தால் சிக்னல் கோடுகள் ஓரளவு உயர்ந்திருந்தன. கிடைத்த அந்த இடைவெளியில் சோர்ஸ் ஒருவர் அழைத்தார். ‘‘விரைவில் கனடாவின் எட்மன்டன் பகுதியில் காஷ்மீரிகளின் நிலைப்பாடு பற்றிய விளக்கக் கூட்டம் நடக்கிறது. ஜெர்மனியில் பெர்லின் - பிலாகார்ட் பகுதியிலும் காஷ்மீரிகள் அமைதிப் பேரணி நடத்தவிருக்கிறார்கள். இங்கிலாந்தின் லீசிஸ்டர், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் என உலகம் முழுவதும் காஷ்மீரிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே பேரமைதி நிலவுகிறது” என்றார் அவர். “அப்புறம் பேசுகிறேன்” என்று அவரின் அழைப்பைத் துண்டித்தேன்.

இரும்புத்திரை காஷ்மீர்! -  6 - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்?

யோசனையுடன் நடந்துகொண்டிருந்தபோது பின்னாலிருந்து வாகனச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், அது ஒரு ராணுவ வண்டி. ஆள் அரவமற்றப் பகுதியில் நம்மைக் கண்டவர்கள் துணுக்குற்று, வாகனத்தை நம் அருகில் நிறுத்தினார்கள். வாகனத்திலிருந்து இறங்கிய ராணுவ அதிகாரி ஒருவர், “யார் நீங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். “நாங்கள் பத்திரிகையாளர்கள். சென்னையிலிருந்து வருகிறோம்” என்றேன். புருவங்களை உயர்த்தியவர், ‘‘ஓ... சவுத் இண்டியன் ஜர்னலிஸ்ட்!’’ என்றார்.

ஏனோ அவர் பேச்சில் கொஞ்சம் கோபம். ‘‘சவுத் இண்டியன்ஸுக்குப் பயங்கரவாதம்னா என்னன்னு தெரியுமா... ரொம்பவும் பாதுகாப்பான ஏரியாவுல உட்கார்ந்துட்டு கவர்மென்ட்டைப் பத்தி தப்புத்தப்பா எழுதுறீங்க... இந்தியா– பாகிஸ்தான் எல்லையை நீங்க பார்த்திருக்கீங்களா, பயங்கரவாதத்தின் கோரங்களை அனுபவித்திருக் கிறீர்களா?’’ என்று கேட்டார். திடீரென அமைதியானவர், “எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டு, “வழியில் ஒரு முகாம் இருக்கிறது. வாருங்கள்... சூடாகத் தேநீர் அருந்திக்கொண்டே பேசலாம்’’ என்று வாகனத்தில் நம்மை ஏற்றிக்கொண்டார்.

ஐந்து நிமிட பயணத்தில் ஒரு ராணுவ முகாம் வந்தது. செக் போஸ்ட்டுக்கு வெளியே நமமூர் டீக்கடை பெஞ்சு போல ஒன்று போடப்பட்டிருந்தது. அங்கு அமர்ந்துகொண்டோம். நான் அவரிடம், ‘‘ராணுவத்தில் கமாண்டர் இருப்பதைப்போல பயங்கரவாத அமைப்புகளிலும் கமாண்டர்கள் இருக்கிறார்களாமே... சமீபத்தில் இதுபோன்ற 11 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீநகரில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்கள் என்று கேள்விப்பட்டோம், உண்மையா?’’ என்று கேட்டேன்.

இரும்புத்திரை காஷ்மீர்! -  6 - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்?

‘‘எங்களுக்கும் உளவுப்பிரிவு நோட் போட்டு அனுப்பிய தகவல்தான் இது. ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய ராணுவத்தில் கமாண்டர், வீரர்கள், உளவுப்பிரிவினர் இருப்பதைப்போல பயங்கரவாத இயக்கங்களிலும் இருக்கிறார்கள். அந்த அமைப்புகளில் காஷ்மீருக்கென்று பிரத்யேக கமாண்டர்களும் இருக்கிறார்கள்.’’ என்றவர், சற்றே தயக்கத்துடன் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

“ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கிளையை ஆறு மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் தொடங்கி விட்டார்கள். அதற்கான களையெடுப்புக்காகத் தான் காஷ்மீரில் இந்திய ராணுவம் கெடுபிடி காட்டிவருகிறது. இதுபுரியாமல் இந்திய ஊடகங்கள் ஏதேதோ எழுதிவருகின்றன. உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொன்னேன். நாம் விடைபெறுவோம்” என்று கைகொடுத்தார். அப்போதுதான் காஷ்மீரின் வேறு சில சோர்ஸ்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் நினைவுக்கு வந்தன.

‘கலீஃபா சாம்ராஜ்யம் அமைப்போம்’ என்பதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கோஷம். இந்தியாவுக்கான அந்த அமைப்பின் பெயர் ‘விலயாஹ் ஆஃப் ஹிந்து’. இவர்களே காஷ்மீரில் ஊடுருவியிருப்பதாகத் தகவல். இந்திய அரசு நவம்பர் 2-ம் தேதியன்று புதிதாக வெளியிட்டிருக்கிற இந்திய வரைபடம், பாகிஸ்தான் தரப்பில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. கடந்த அக்டோபர் 31-லிருந்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் அதிகாரபூர்வமாக செயல்படத் தொடங்கி விட்டன. அதன் அடிப்படையில்தான் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும், லடாக் யூனியன் பிரதேசத்திலும் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடிகளால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கிறது பாகிஸ்தான். ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று அந்த நாட்டு உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து அந்த நாடு நடத்திய தாக்குதல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த 1990-லிருந்து 2019 மார்ச் வரை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இந்திய வீரர்கள் நடத்திய சண்டைகளில் அப்பாவி மக்கள் 14,024 பேரும், ராணுவ வீரர்கள் 5,273 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 900 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய உள்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இரும்புத்திரை காஷ்மீர்! -  6 - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்?

காஷ்மீரின் உள் மாவட்டங்களில் இந்திய துணை நிலை ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் இடையே அடிக்கடி சிறு போர்கள் வெடிக்கின்றன. எல்லைப்பகுதிகளில் இந்திய ராணுவத்துக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச்சண்டைகள் நடக்கின்றன. காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் நான்கு லட்சம் ராணுவ வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் காக்கிறார்கள். இதில் பாதி எண்ணிக்கையில் அதாவது இரண்டு லட்சம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இதே எல்லைகளில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். காஷ்மீரில் ஊடுருவும் பயங்கரவாத இயக்கங்களில் முன்னணியில் இருப்பவை லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்ஃபுல் முஜாகிதின், ஜெய்ஷ் இ–முகமது அமைப்புகள். இவை இந்தியாவில் நடத்திவரும் தாக்குதல்கள் ஒரு பெரும் போருக்கு இணையானவை” என்று சோர்ஸ்கள் சொன்னவற்றை அசைபோட்டபடியே நடந்துகொண்டிருந்தேன். மாலை நேர சூரியன் மஞ்சள் நிறத்துக்கு மாறத் தொடங்கியிருந்தது. தொலைதூர பனிமலையில் அதன் கதிர்கள் பட்டு, ஒரு மலையே தங்கமாக ஜொலித்தது. இதோ சற்றே தொலைவில் ஒரு கிராமம் தென்படுகிறது. உரியை நெருங்கிவிட்டோம்!

(திரை விலகும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு