Published:Updated:

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 4 - பாகிஸ்தான் தொடுக்கும் ‘சைக்காலஜிக்கல் வார்!’ -

இரும்புத்திரை காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
இரும்புத்திரை காஷ்மீர்

போன் தொடர்புகளைத் தடைசெய்தது ஏன்? - விஜயகுமார் விளக்கும் பகீர் பின்னணி

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 4 - பாகிஸ்தான் தொடுக்கும் ‘சைக்காலஜிக்கல் வார்!’ -

போன் தொடர்புகளைத் தடைசெய்தது ஏன்? - விஜயகுமார் விளக்கும் பகீர் பின்னணி

Published:Updated:
இரும்புத்திரை காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
இரும்புத்திரை காஷ்மீர்

மாலைப் பொழுது. வெண்பனி மேகங்கள் சூழத் தொடங்கின. அழகான தோட்டம் அது. வண்ண வண்ணப் பூக்கள் ஏராளமாகப் பூத்துக் குலுங்கின. பச்சைப் புல்வெளி சீராகப் பராமரிக்கப்பட்டிருந்தது. ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தோம். தோட்டத்து விளக்கொளியில் ஆப்பிள்கள் பளபளவென மின்னின. இந்தத் தோட்டம் மட்டுமல்ல, காஷ்மீரில் எங்கு பார்த்தாலும் இயற்கை அழகு மிளிர்கிறது. பச்சைப்பசேல் பூமி, மாலை வேளைகளில் பனி போர்த்திய நிலவொளியில் இன்னொரு முகம் காட்டுகிறது. ஆங்காங்கே சிற்றோடைகள், அவற்றில் சலசலக்கும் நீர் ‘கிரிஸ்டல் கிளியராக’ இருக்கிறது. சுவாசிக்கும் காற்றுகூட அவ்வளவு புத்துணர்வைத் தருகிறது. இவ்வளவு இருந்தும் என்ன பலன்... மக்கள் மனங்களில் மகிழ்ச்சி இல்லையே!

நாங்கள் அமர்ந்திருப்பது விஜயகுமாரின் வீட்டுத் தோட்டத்தில். அரசு ஒதுக்கிய பங்களா அது. மதியம் அலுவலகத்திலிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்ற அவர், மாலை நேராக வீட்டுக்கு வந்துவிட்டார். ஸ்ரீநகர் சன்வார் ஏரியாவில் உள்ள சர்ச் லேன் அது. தலைமைச் செயலாளர் வீடு, கவர்னரின் ஆலோசகர்கள் வீடு, மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரிகளின் வீடுகள், அரசு சர்கியூட் ஹவுஸ் ஆகியவை அந்த ஏரியாவில்தான் இருக்கின்றன. சோதனைகள், கெடுபிடிகளுக்குச் சொல்லவும் வேண்டுமோ! ஏரியாவுக்குள் நுழையும் முன்பே பிரதான சாலையில் வரிசைகட்டுகின்றன சோதனைச்சாவடிகள். ஒவ்வொன்றிலும் மிகக் கவனமாக சோதனையிடுகிறார்கள். மொத்த உடலையும் ஸ்கேன் செய்த பிறகே ஒவ்வொரு சோதனைச்சாவடியையும் கடக்க முடிகிறது. அனைத்தையும் கடந்து போனாலும், கேள்விகளால் துளைத்தனர் ராணுவத்தினர். விஜயகுமார், நமக்கு நேரம் கொடுத்திருப்பதாகச் சொன்னோம். “அவர் நேரம் கொடுத்திருக்கலாம். ஆனால், சோதனை செய்ய வேண்டியது, கேள்விகள் கேட்க வேண்டியது எங்கள் கடமை” என்றார்கள். பிறகு, வொயர்லெஸ்ஸில் விஜயகுமார் வீட்டின் பாதுகாப்பு அலுவலரிடம் பேசி சந்தேகம் களைந்த பிறகே எங்களை அனுமதித்தனர்.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 4 - பாகிஸ்தான் தொடுக்கும் ‘சைக்காலஜிக்கல் வார்!’ -

“என்னங்க பால்கி... ஆப்பிள் மரத்தை அப்படி ஆச்சர்யமா பார்க்கிறீங்க... பழம் பறிச்சுத் தரவா?” என்று கேட்டபடி பணியாளர் ஒருவரை அழைத்து, பழத்தைப் பறித்துத் தரச் சொன்னார். அவரே தொடர்ந்தவர், ‘‘ஆப்பிள், காஷ்மீரின் சிறப்பு அடையாளங்களின் ஒன்று. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தருகிறது ஆப்பிள் சாகுபடி. கடந்த 2017-18 சீஸனில் 19 லட்சத்து 73 ஆயிரத்து 326 மெட்ரிக் டன் விளைந்தது. 2018-19 சீஸனில் சற்றே விளைச்சல் குறைவு. 19 லட்சத்து 56 ஆயிரத்து 331 மெட்ரிக் டன் விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆகஸ்ட் தொடங்கி டிசம்பர் வரை சீஸன். சுவைமிகுந்த ஆப்பிள் விளைச்சலுக்கு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டம் வெகுபிரசித்தி. பனிப்பொழிவு அங்கே அதிகம் இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 45,000 டிரக்குகள், சுமார் 4,40,000 டன் ஆப்பிள்களுடன் காஷ்மீரிலிருந்து வெளியே சென்றுள்ளன. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க, ‘நபார்டு’ வங்கி ஏற்பாடு செய்கிறது. மரத்திலிருந்து கீழே விழும் ஆப்பிளின் விலை குறைவாக இருக்கும். அதை அதிக விலைக்கு ‘நபார்டு’ வாங்கிக்கொள்கிறது. உண்மையில், கனிந்து தானாக கீழே விழுந்த பழம்தான் மிகவும் சுவையாக இருக்கும். அதேபோல், நம்பர் ஒன் குவாலிட்டி ஆப்பிளை ‘டேபிள் ஆப்பிள்’ என்பார்கள். அதையும் கூடுதல் விலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். கேரளாவுக்காக 200 டன் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்’’ என்று விளக்கியபோது, அவர் பாதுகாப்பு அதிகாரியா... வேளாண்மை அதிகாரியா என்று கேட்கத் தோன்றியது. ஏனோ கேட்கவில்லை!

மாறாக, ‘‘ஆப்பிள் வியாபாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டாரே?’’ என்று கேட்டேன்.

‘‘உண்மைதான். அக்டோபர் 14-ம் தேதியன்று பரத்பூர் மாவட்டத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த டிரக் டிரைவரை சுட்டுக் கொன்றார்கள், பயங்கரவாதிகள். ஆகஸ்ட் 16-ம் தேதியன்று ஆப்பிள் வியாபாரி ஒருவரையும் சுட்டுக் கொன்றனர். மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள். கடையை மூட மறுத்த வியாபாரி ஒருவரையும் சமீபத்தில் சுட்டனர். அதனால்தான் நாங்கள் எவ்வளவோ பாதுகாப்பு கொடுத்தும் கடையை முழு நேரம் திறந்துவைக்க வியாபாரிகள் அச்சப்பட்டு, காலை, மாலை வேளைகளில் சில மணி நேரம் மட்டுமே திறக்கிறார்கள்’’ என்றவரிடம், “கடைகள் சரி, பள்ளிகள்கூடங்கள் திறக்கப்படவில்லையே... குழந்தைகளின் படிப்பு என்னவாவது? சமீபத்தில் ஏழு குழந்தைகள் மர்மமான முறையில் இறந்துவிட்டன என்றெல்லாம் தகவல் பரவியதே?” என்று கேட்டேன்.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 4 - பாகிஸ்தான் தொடுக்கும் ‘சைக்காலஜிக்கல் வார்!’ -

‘‘பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்தான் பள்ளிகளைத் திறக்காததற்கும் காரணம். தற்போது நிலைமை சீராகிவருகிறது. தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டிருக் கின்றன. ஆனால், குழந்தைகள் இறந்ததாகப் பரவிய தகவல் வதந்தியே. மாநிலத்தின் சுகாதாரத் துறையையும் நான்தான் கவனிக்கிறேன். அப்படி எதுவும் நடைபெற வில்லை. மருத்துவர்கள் வேலைக்கு வரவில்லை என்கிறார்கள். ஆனால், தினமும் 1,300 மருத்துவர்கள் பணிக்கு வருகிறார்கள்” என்றவரிடம், ‘‘பயங்கரவாதி களின் அச்சுறுத்தல் என்கிறீர்கள்... விளக்க மாகச் சொல்ல முடியுமா?’’ என்றோம்.

‘‘எஃப்.ஏ.டி.எஃப் என்ற சர்வதேச அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு எந்த நாட்டையாவது கறுப்புப் பட்டியலில் சேர்த்துவிட்டால், உலக வங்கி உட்பட எந்த நாடும் கடன் வழங்காது. வெளிநாட்டு முதலீடும் கிடைக்காது. வெளிநாடுகளில் வாங்கப்படும் நிதி சரியான வழியில் செலவழிக்கப்படுகிறதா என்பதை, அந்த அமைப்புதான் கண்காணிக்கும். எஃப்.ஏ.டி.எஃப் மாநாடு, சமீபத்தில் பிரான்ஸில் நடைபெற்றது. அங்கு பாகிஸ்தானுக்கு பெரிய அடி விழுந்திருக்கிறது. கரன்சி மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை, தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது அந்த அமைப்பு வகுத்திருக்கும் முக்கியமான விதிமுறை. இப்படி 27 அம்சங்களை வைத்து ஒரு நாட்டின் நடவடிக்கையை அந்த அமைப்பு ஆய்வுசெய்யும். அந்த வகையில் 21 அம்சங்களில் பாகிஸ்தான் விதிமீறல் செய்திருப்பதை அந்த அமைப்பு கண்டுபிடித்திருக்கிறது. குறிப்பாக, பயங்கரவாதிகளுக்கு உதவியதாக ஏராளமான தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், பாகிஸ்தானை அந்த அமைப்பு சாம்பல் நிறப் பட்டியலில் சேர்த்துவிட்டது. ஓராண்டுக்குள் தவறுகளையெல்லாம் சரிசெய்யாவிட்டால், அந்த நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்த்துவிடும் அந்த அமைப்பு. இதனால் இக்கட்டான சூழலில் இருக்கிறது பாகிஸ்தான். இதையெல்லாம் திசைதிருப்பு வதற்காகத்தான், காஷ்மீர் விஷயத்தை ஊதி பெரிதாக்குகிறது பாகிஸ்தான்.

Vijayakumar
Vijayakumar

ஜம்முவிலும் காஷ்மீரிலும் இரண்டு பாலங்கள் இருக்கின்றன. பாலங்களின் ஒவ்வொரு முனையும் பாகிஸ்தானை இணைக்கிறது. இந்த இடங்களை மக்களுக்குப் பயன்படும் வகையில் வர்த்தக எல்லையாக வைத்திருந்தார்கள். இரண்டு நாட்டு மக்களுக்கும் பொருள்களை வாங்கவும் விற்கவும் வசதியாக இருந்தது. இரு பக்கங்களிலும் செக்போஸ்ட் இருக்கும். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் அதை தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆபத்தான பொருள்கள் உள்ளே வரத் தொடங்கின. அதனால், அந்த இரு பாலங்களையும் நாங்கள் மூட வேண்டியதாயிற்று. இப்போது சமூக ஊடகங்களிலும் வாட்ஸ் அப்பிலும் வதந்தியைப் பரப்பத் தொடங்கிவிட்டது அந்த நாடு.

வதந்தியை நீங்கள் சாதாரணமாக நினைக்கக் கூடாது. எதிரி நாட்டு ராணுவத் தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள், பயோ வார் என்பதைப்போல் மனரீதியான தாக்குதல் இது. சைபர் வாரின் ஓர் அங்கம் இது. சைக்காலஜிக்கல் வார் எனும் உளவியல் தாக்குதல். காஷ்மீர் மக்கள் மனதில் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கம். ‘போன், இன்டர்நெட் இவற்றையெல்லாம் தடைசெய்துவிட்டார்கள்’ என, நாடு முழுவதும் எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். வதந்திகள் பரவக் கூடாது என்பதற்காகவே ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 72 நாள்கள் போன் நெட்வொர்க்கைத் தடை செய்திருந்தோம். இப்போது போன் வாய்ஸ் காலுக்கு மட்டும் அனுமதித்திருக்கிறோம். நிலைமை சரியானதும் இன்டர்நெட் இணைப்பும் தரப்படும். பாகிஸ்தான் தரப்பிலிருந்து வதந்திகளைப் பரப்பி, கலவரம் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வளவும் செய்யப்பட்டிருக்கின்றன.

குழந்தைகள் மர்மமான முறையில் இறந்ததாகவும், திடீரென பல நூறு குழந்தைகள் காணவில்லை எனவும், மசூதிகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்படுகிறது எனவும் சென்செட்டிவ்வான விஷயங்களைப் பரப்பி மக்களை மத்திய அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார்கள். இதோ பாருங்கள், என் வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு மசூதி இருக்கிறது. அங்கெல்லாம் தொழுகை நடத்துவதில் எந்தத் தடையும் இல்லை” என்றபோது, சொல்லிவைத்தாற்போல் மசூதியிலிருந்து ‘பாங்கு’ சத்தம் கேட்டது. மணியைப் பார்த்தேன். இரவு 8. மாலை 6 மணிக்கு வந்திருந்தோம். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. தொடர்ந்து பேசினார் விஜயகுமார்...

“தொழுகையையெல்லாம் யாராவது தடை செய்வார்களா? எந்த விஷயத்தைத் தொட்டால், கலவரம் வெடிக்கும் என்பது பயங்கரவாதிகளுக்கு நன்றாகவே தெரியும். அதையே குறிவைத்துச் செயல்படுகிறார்கள். அதேசமயம், ஒரு சில பெரிய மசூதிகளில் சில பிரச்னைகள் நடந்துள்ளனதான், மறுப்பதற்கில்லை. அவையும் பயங்கரவாதிகள் ஏற்படுத்தியவையே. காஷ்மீரின் ஜாமியா மசூதி மிகப்பெரியது. மிர்வாஸ் என்கிற மதபோதகர்தான் அதன் தலைவர் போன்றவர். அவரின் சொல்லுக்கு அங்கே மதிப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய தந்தையை பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர். அந்தப் பழியை இந்தியன் செக்யூரிட்டி ஃபோர்ஸ் மீது போட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் கிளப்பினார்கள். இப்போதும் மசூதியில் சிலர்

ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியைத் தூக்கிப் பிடித்து கோஷமிட்டனர். அவர்களை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்படி பிரச்னைகள் நிகழ்ந்த மசூதிகளில் மட்டுமே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். தொழுகை நடத்த தடைவிதிக்கவில்லை’’ என்றார்.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 4 - பாகிஸ்தான் தொடுக்கும் ‘சைக்காலஜிக்கல் வார்!’ -

“ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பு இங்கே வந்து ஆய்வுசெய்த மனித உரிமை மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் குழுவினர், ‘செந்தூர் ஹோட்டலிலும் வீட்டுக்காவலிலும் 4,000-க்கும் மேற்பட்ட முக்கியமான பிரமுகர்கள், அரசியல் வி.ஐ.பி-க்கள் அடைத்துவைக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்களுக்கு நிறைய கொடுமைகள் நடக்கின்றன’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்களே?”

‘‘எதையும் ஆதாரத்துடன் பேச வேண்டும். சந்தேகத்தின் பேரில் நிறைய பேரை கைதுசெய்திருக்கிறோம் என்று ஆரம்பத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன். சட்டத்தை மீற மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதிக் கொடுத்தவர்களை விடுவித்துவிட்டோம். கடந்த 70 நாள்களில் பெரும்பாலானோர் வெளியே வந்துவிட்டார்கள்.

மனரீதியான தாக்குதல் இது. சைபர் வாரின் ஓர் அங்கம் இது. சைக்காலஜிக்கல் வார் எனும் உளவியல் தாக்குதல். காஷ்மீர் மக்கள் மனதில் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கம்.

செந்தூர் ஹோட்டலில் அதிகபட்சம் பத்து அல்லது பதினைந்து பேர்தான் இருப்பார்கள். அரசியல் பிரமுகர்களை வீட்டுக்காவலிலும், சட்டவிரோதமாகச் செயல்பட்டவர்களை, ஆக்ரா மற்றும் உத்தரப்பிரதேச சிறைகளிலும் வைத்திருக்கிறோம். அதேசமயம் அந்தக் குழுவினர் சொல்வதுபோல் யாருக்கும் எந்தக் கொடுமையும் நடைபெறவில்லை.

வீடு, ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருப் பவர்களை அதிக அக்கறையுடன் கவனிக்கிறோம். அவர்களின் உடல்நலத்தைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. வீட்டுச் சிறையில் இருப்பவர்களையும் வாரத்தில் இரண்டு நாள் அவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கிறோம். மற்றபடி, பொத்தாம் பொதுவாக நீங்கள் கேட்பவையெல்லாம் வதந்திகள்தான். சைக்காலஜிக்கல் வார் அது. அதை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும். இதுவும் தற்காலிகம்தான். நிலைமை, விரைவில் சீரடையும். இந்தியாவின் மற்ற மாநில மக்களைப்போல் காஷ்மீர் மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்!” என்றார் விஜயகுமார்.

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும்போது, வெளியே சைரன் அலறும் ஓசை கேட்டது..!

(திரை விலகும்)