Published:Updated:

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர்- 7 - “நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா?”

“நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா?”

- சுடுவதற்கு முன் கேட்கும் வார்த்தை!

ரி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள முசராபாத் நகரிலிருந்து 42 மைல் தொலைவில் இருக்கிறது. இருநாட்டு நிலப் பகுதிகளையும் இணைக்கிறது சிறு பாலம் ஒன்று. அதை ‘கமான்’ பாலம் என்றழைக்கிறார்கள். காமல் கோட் என்ற இடம் அருகே உள்ளது. உரோசா என்ற கிராமம்தான் இந்தியாவின் கடைசி போலீஸ் பாயின்ட். அங்கு விசிட்டடிக்க வேண்டும் என்பது திட்டம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இரும்புத்திரை காஷ்மீர்
இரும்புத்திரை காஷ்மீர்

எரிமலையாய்க் குமுறிக்கொண்டிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சலனமற்று அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது ஜீலம் நதி. அதன் கரையில் இருக்கிறது உரி. நதியையொட்டி உள்ள மலைகளின் பிரமாண்டம், அச்சுறுத்துவதாக இருந்தது. உரியைச் சுற்றிலும் பல ஆயிரம்பேர் வசிக்கிறார்கள். எல்லையில் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையில் சண்டையென்றால், சுமார் 40,000 மக்கள் பீதியில் அலறியடித்துக்கொண்டு வெளியேறுவார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளை விரட்டியடிப்பதும், அந்த நாட்டு ராணுவத்துடன் மோதுவதும் இங்கு சகஜம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உரியைச் சுற்றிலும் மலைப்பகுதிகள்தான். வளைந்து வளைந்து செல்கின்றன சாலைகள். எல்லையோர கிராமங்களையும் மலைப்பாதைகளையும் இணைக்கும் சிறு பாலங்கள் போன்யார்க்கும் உரிக்கும் நடுவில் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் உடைந்தால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்படும். அப்போது நதியைக் கடந்து செல்வது கடும் சிரமம். சில்லென்ற நீர் உடலை விறைக்கச் செய்துவிடும். குளிர்காலத்தில் கேட்கவே வேண்டாம். இப்போது குளிர்காலம் தொடங்கிவிட்டது. நதியில் ஓடும் நீரின் அளவு சற்று குறைவாகத்தான் இருந்தது.

“நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா?”
“நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா?”

பாராமுல்லா மாவட்டம் போன்யார் நகரைக் கடந்துதான் உரிக்குச் செல்ல வேண்டும். நாங்கள் பயணித்த வாடகை காரை ஓவர்டேக் செய்துகொண்டு ராணுவ கூண்டு வேன் ஒன்று சீறிப்பாய்ந்து சென்றது. அதன் பேனட்டில் சிவப்புக் கொடி கட்டியிருந்தார்கள். வேனின் மேல் பகுதியில் நான்கு வீரர்கள் நான்கு திசைகளையும் நோக்கி துப்பாக்கி நீட்டியபடி இருந்தார்கள். அந்த வேன் யாரையோ துரத்திச் செல்வதுபோல் தெரிந்தது. வழக்கமான வேகத்தைவிட அசுரவேகத்தில் போய்க்கொண்டிருந்தது வேன். திடீரென ரோட்டில் ஏதோ கூட்டம். காரை ஓரங்கட்டி இறங்கினோம்.

ராணுவ வீரர் ஒருவர் விசிலை ஊதினார். ‘‘போ... போ... நிக்காதே!’’ என்று விரட்டினார். `என்ன நடந்தது?’ என விசாரித்தோம். அந்த ராணுவ வேனை பின்தொடர்ந்து தனியார் டிரக் ஒன்று அதிவேகமாக வந்திருக்கிறது. மெதுவாகச் செல்லும்படி ராணுவ வீரர்கள் சைகை காட்டியும் வேகத்தைக் குறைக்கவில்லை. மின்னல் வேகத்தில் ராணுவ வேனை முந்திச் சென்றிருக்கிறது. அதனால், கோபமான ராணுவ வீரர்கள் அந்த ட்ரக்கை விரட்டி மடக்கிப் பிடித்து அதன் டிரைவரை விசாரித்துக்கொண்டிருந்தனர். அதனால்தான் கூட்டம்.

‘யார் நீ, எங்கிருந்து வருகிறாய், லைசென்ஸைக் காட்டு!’ என்று ஒரு வீரர் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அந்த டிரைவர் கன்னத்தில் பளார் என அறைந்தார் இன்னொரு ராணுவ வீரர். அவர்களின் கவனம் நம் பக்கம் திரும்பியது. ‘‘உரி ராணுவ முகாம் வழியாகச் செல்ல வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. குறிப்பாக, மீடியாக்கள் இந்தப் பக்கமே வராதீர்கள்’’ என்று ராணுவ அதிகாரிகள் நம்மை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

திரும்பும் வழியில், ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தாரி அகமது ஷா, போன்யார் ஜங்ஷனில் ஒயர்லெஸ் மைக்கில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் அவர் இருந்த இடத்துக்கு அருகே சென்றேன். உற்றுப்பார்த்தார். மெல்லிய சிரிப்பு. நட்புடன் பேசுவார் என எதிர்பார்த்து, எங்களை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பிய விஷயத்தை அவரிடம் சொன்னேன்.

‘‘நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் தெரியுமா... உரோசா கிராமத்தின் மையப்பகுதியில். பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள ஹெவி மோட்டார் பீரங்கியால் சுட்டால், அது இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் விழுந்து வெடிக்கும். அந்த மாதிரியான படுபயங்கர கில்லிங் ரேஞ்சில் நீங்கள் நிற்கிறீர்கள். இந்த விஷப்பரீட்சை தேவையா உங்களுக்கு?” என்றபடி அருகில் இருந்த போலீஸாரைப் பார்க்க... அவர்களும் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்தனர்.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர்- 7 - “நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா?”

என்னையும் அறியாமல் ஒரு விநாடி உடல் நடுங்கியது. இன்ஸ்பெக்டரிமிருந்து கொஞ்சம் தள்ளிச் சென்றேன். அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒரு நபர் எங்களிடம் வந்தார். அவர் யார் என்றே தெரியவில்லை.

‘‘சார், கிராஸ் ஃபயரிங் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? எங்கிருந்தோ பாய்ந்துவரும் புல்லட் உங்களைச் சாய்க்கும். ‘பாகிஸ்தான் ராணுவம்தான் சுட்டது’ என்று இந்திய ராணுவம் சொல்லும். ‘இல்லையில்லை... இந்திய ராணுவம்தான் சுட்டது’ என்று பாகிஸ்தான் ராணுவம் மறுக்கும். அது இரண்டு தரப்பிலும் கையாளும் குண்டாக இருக்கும். உண்மையில் யாருடைய குண்டு உயிரைக் குடித்தது என்பது இறுதி வரை தெரியவே தெரியாது. இதுதான் கிராஸ் ஃபயரிங். இங்கே இதுபோன்ற மரணங்கள் சகஜம். யாரிடமும் பெரிதாக ரியாக்‌ஷன் இருக்காது. உங்கள் உடலை சொந்த ஊருக்கே பார்சல் கட்டி அனுப்பிவிடுவார்கள். கிராஸ் ஃபயரிங்குக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!” என்று அக்கறையுடன் சொன்னார்.

மீண்டும் இன்ஸ்பெக்டரிடம் திரும்பி வந்தேன். “நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலை நேரத்திலும் எல்லை அருகே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக தகவல். பீரங்கிக் குண்டுகளை நாங்கள் `செல்கள்’ என்றுதான் சொல்வோம். அவை எந்த நேரமும் இங்கே விழக்கூடும். அதனால், எல்லைக்கோடு அருகே செல்ல யாருக்கும் அனுமதியில்லை. எந்தவிதத் தாக்குதலையும் சமாளிக்கும் பயிற்சியை நாங்கள் பெற்றிருக்கிறோம். உங்களால் ரிஸ்க் எடுக்க முடியாது. வேண்டாம்... திரும்பிப் போய்விடுங்கள்’’ என்றவர், திடீரென தன் வாயைப் பிளந்து காட்டினார். பல்வரிசை ஒன்று வித்தியாசமாகப் பளிச்சிட்டது.

‘‘கல்வீச்சு தாக்குதல் என் முகத்தைப் பதம்பார்த்தது. பற்கள் உடைந்துவிட்டன. செயற்கைப் பற்களைப் பொருத்தியிருக்கிறேன். எந்த நேரம்... எந்த மலையிலிருந்து தாக்குதல் நடத்துவார்கள் எனச் சொல்லவே முடியாது. இருந்தாலும், சென்னையிலிருந்து வந்துள்ளீர்கள். பகல் ரோந்து போகிறேன். பின்னால் வாருங்கள்!’’ என்றபடி முன்னே அவர் ஜீப்பில் போக, காரில் அவரைப் பின்தொடர்ந்தேன். நானும் அவரும் அலைபேசியில் இணைப்பில் இருந்தோம்.

‘‘இப்போது நீங்கள் உரி ராணுவ முகாமை கிராஸ் செய்கிறீர்கள்’’ என்று விளக்கிக்கொண்டே முன் வண்டியில் சென்றார். நாங்கள் பின்தொடர்ந்தோம்.

2016–ம் ஆண்டில் இந்த ராணுவ முகாமின் பின்பக்கம் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நான்கு பேர், 19 இந்திய வீரர்களைச் சுட்டுக்கொன்றனர். இறுதியில் அந்த நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். உலகையே அதிர்ச்சியடையவைத்த தாக்குதல் அது. அந்தச் சம்பவத்தின்போது உயிர் இழந்தவர்களின் நினைவாக ஸ்தூபி ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். இறந்தவர்களின் பெயர்கள் அதில் பொறிக்கப் பட்டுள்ளன. அதை காரில் இருந்தபடியே பார்த்தேன். அருகில் செல்ல அனுமதியில்லை.

அதைத் தாண்டி இன்ஸ்பெக்டர் வரவில்லை. ‘‘ஏதாவது பிரச்னையென்றால், என்னைக் கூப்பிடுங்கள். வருகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அவருடைய ஜீப் யூ–டர்ன் அடித்து திரும்பிச் சென்றது. நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வழியில் சில கடைகள் தென்பட்டன. உலர் திராட்சை விற்கும் கடையில் நிறுத்தினோம். போலீஸ் ஜீப் சென்றது தெரிந்ததும், வெளியே வந்தார் கடைக்காரர். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “எங்கள் (உரி) ஊர்க்காரர்களுக்கும் முசராபாத் நகரவாசிகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. இங்கு இருப்பவர்களின் உறவுகள்தான் எல்லையின் அந்தப் பக்கம் வசிக்கின்றன. இங்கிருந்து கமான் பாலம் வழியாகப் போகும் வாகனங்களை, சீதனங்கள் ஏற்றிவரும் வாகனங்களாகத் தான் பாகிஸ்தான் சொந்தங்கள் பார்க் கின்றன. அங்கிருந்து வரும் வாகனங்களை நாங்களும் அப்படித்தான் பார்க்கிறோம்.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர்- 7 - “நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா?”

எல்லை என்றாலே கையெறி குண்டுகளையும், செல்களையும், புல்லட்டு களைப் பற்றியும்தான் பேசுவார்கள். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டோம். நாங்கள் அமைதியை விரும்புபவர்கள்; அன்பைப் பகிர்பவர்கள். எங்களுக்குள் ‘தக்காளி என்ன விலை... மாதுளை எவ்வளவு ருசியாக இருந்தது!’ என்றுதான் பேசிக்கொண்டிருப்போம். பாகிஸ்தான் எல்லையில் உள்ள சொந்தங்களும் அப்படித்தான். பாழாய்போன தீவிரவாதம்தான் எங்கள் அமைதியைக் குலைக்கிறது!’’ என்று நிறுத்தினார், அவரின் ஆத்திரம் பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது.

“ராணுவத்தினரின் அத்துமீறலைவிட தீவிரவாதிகளின் ஊடுருவல்தான் உரி ஏரியாவில் அதிகம். பாகிஸ்தான் எல்லையைக் கடந்து மலைப்பாறைகள் வழியாக வந்தால் நான்கைந்து மணி நேரத்தில் உரியைச் சுற்றிலும் உள்ள ஏதாவது ஒரு கிராமத்துக்குள் நுழைந்து விடுவார்கள். அவர்களுக்கு துப்புக் கொடுக்க வும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“நீதான் இந்திய ராணுவத்தின் கண், காது என்கிறார்களே?” என்று கேட்டுக்கொண்டே சுட்டுக்கொல்வார்கள். இப்படித்தான் பக்கத்து ஊரில் ஒரு வியாபாரியையும் பாரமுல்லாவில் ஒரு டாக்டரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் அந்தப் பாவிகள்’’ என்று கொந்தளித்தார்.

ஒருவித நடுக்கத்துடனேயே விடைபெற்ற நாங்கள், பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்து, நாங்கள் சென்ற ஊரின் பெயர் சலாமாபாத்!

(திரை விலகும்)