Published:Updated:

“வாரிச்சுருட்டும் வாரிசு... முதல்வர் கண்டித்தும் கேட்கவில்லை!”

அய்யப்பன் - துரைக்கண்ணு
பிரீமியம் ஸ்டோரி
அய்யப்பன் - துரைக்கண்ணு

தொடர் சர்ச்சையில் வேளாண்மைத்துறை...

“வாரிச்சுருட்டும் வாரிசு... முதல்வர் கண்டித்தும் கேட்கவில்லை!”

தொடர் சர்ச்சையில் வேளாண்மைத்துறை...

Published:Updated:
அய்யப்பன் - துரைக்கண்ணு
பிரீமியம் ஸ்டோரி
அய்யப்பன் - துரைக்கண்ணு
“வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் அய்யப்பன் கண்ணசைவிலேயே அந்தத் துறையில் புதிய பணி நியமனங்கள், இடமாறுதல்கள் உள்ளிட்டவை நடக்கின்றன. இதற்காக லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடக்கிறது. பிற அமைச்சர்கள் உட்பட கட்சியினர் யார் சிபாரிசுக்குச் சென்றாலும், கரன்ஸி இல்லாமல் வேலை நடப்பதில்லை. முதல்வர் தரப்பில் கூப்பிட்டுக் கண்டித்தும் கூட அவர் மாறவில்லை”-தஞ்சை அ.தி.மு.க வட்டாரத்தில் கிளம்பியிருக்கும் பரபரப்பான புகார் இது!
வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்தோம். “துபாய் நாட்டில் அய்யப்பன் வேலை செய்துகொண்டிருந்தார். தன் தந்தை துரைக்கண்ணு அமைச்சராகப் பதவியேற்ற உடனேயே துபாயில் பார்த்த வேலையை உதறிவிட்டு இங்கு வந்துவிட்டார். தொடக்கத்தில் துரைக்கண்ணுவின் மருமகன் கனகதாரன்தான் துறைரீதியான வேலைகளை கவனித்துவந்தார். அவர் தலைமைச் செயலகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக புகார்கள் எழுந்தன. இது முதல்வர் கவனத்துக்குச் செல்லவே துரைக்கண்ணுவைக் கண்டித்துள்ளார். பிறகு கனகதாரன் ஒதுங்கிவிட, அய்யப்பன் தலையெடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர் வந்த பிறகு வேளாண்மைத் துறையில் கரன்ஸியை காட்டினால் தான் எந்த வேலையும் நடக்கும் என்கிற அளவுக்கு நடைமுறைகளைப் புகுத்தினார். இந்த ஆண்டு மட்டும் பதவி உயர்வின் அடிப்படையில் ஒரு வேளாண்மை உதவி இயக்குநர், 93 வேளாண்மை துணை இயக்குநர்கள், 10 வேளாண்மை இணை இயக்குநர்களுக்கான புதிய பணி நியமனங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த நியமனங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் தொடங்கி 10 லட்சம் ரூபாய்வரை வசூல் வேட்டை நடந்தது. இதில் இன்னொரு மோசடியும் நடந்தது. பணி நியமனங்களின்போது சம்பந்தப்பட்ட நபர்களைச் சொந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்வதில்லை; நீண்ட தூர மாவட்டங்களுக்குப் பணி நியமனம் செய்தார்கள். பிறகு அவர்களை இடமாற்றம் கேட்கவைத்து அதிலும் சிலபல லட்சங்களை வசூல் செய்தார்கள்.

துரைக்கண்ணு
துரைக்கண்ணு

வேளாண்மைத்துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் டிராக்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க வேண்டுமென்றாலும், பொருளுக்கு ஏற்றபடி பணத்தைக் கொடுத்தால் மட்டுமே ஃபைல் மூவ் ஆகிறது. சமீபத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தரப்பில் அவருக்கு வேண்டப்பட்ட ஒருவருக்காக இடமாற்றம் கேட்டுள்ளனர். இதற்காக லெட்டர் பேடில் எழுதிக் கொடுத்து, சம்பந்தப்பட்டவரை அய்யப்பனிடம் அனுப்பி வைத்துள்ளார் அமைச்சர். ஆனால், செய்யவே இல்லை. மாறாக, பணத்தை வாங்கிக்கொண்டு அந்த இடத்தை வேறு ஒரு நபருக்குக் கொடுத்துவிட்டார். கோபமடைந்த சேவூர் ராமச்சந்திரன் தரப்பு இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இதேபோல கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் தன் ஆதரவாளர் ஒருவருக்கு இடமாற்றத்துக்காக சிபாரிசு செய்திருக்கிறார். அதையும் அய்யப்பன் தரப்பில் கண்டுகொள்ளவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர் தனக்கு வேண்டிய ஒருவரின் பதவி உயர்வுக்காக சிபாரிசு செய்திருந்தார். கடைசி நேரத்தில் அவரைத் தொடர்புகொண்ட அய்யப்பன் தரப்பினர், ‘அண்ணே உங்களுக்குச் செய்ய முடியவில்லை. வருத்தப்பட வேண்டாம்’ எனக் கூறியுள்ளனர். இதனால், கோபமடைந்த அந்தப் பிரமுகர் இது குறித்து அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசியிருக்கிறார். அவரோ, ‘நான் இதுல எல்லாம் தலையிடுறதே இல்லை... எல்லாத்தையும் அய்யப்பன்தான் பார்த்துக்கிறான்’ என்று நழுவிவிட்டாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவையெல்லாம் புகாராக முதல்வர் தரப்புக்குச் சென்றது. முதல்வர் தரப்பிலிருந்து, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சரிடம் இது பற்றிச் சொல்லி, கண்டிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்த அமைச்சர் தரப்பிலும் அய்யப்பனைத் தொடர்புகொண்டு எச்சரித்துள்ளனர்” என்றார்கள்.

அய்யப்பன்
அய்யப்பன்

இவை குறித்து அய்யப்பனிடம் நேரில் சென்று விளக்கம் கேட்டோம். “பாபநாசம் தொகுதியை விட்டு நான் வெளியே செல்வதே இல்லை. புதிய பணி நியமனம், இடமாறுதல் உள்ளிட்டவற்றுக்கு நான் பணம் பெற்றுக்கொண்டு செய்து தருகிறேன் என்பது பொய்யான குற்றச்சாட்டு. ஆடம்பரமாக நடந்துகொண்டதும் இல்லை. கட்சியில் சாதாரண உறுப்பினராகவே இருக்கிறேன். ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட பெரிய பதவி பெறுவதற்கும் முயற்சி செய்யவில்லை. எந்த அமைச்சரையும் நான் சந்தித்ததும் இல்லை. அப்படியிருக்கையில் ஏன் என்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அண்ணன் வைத்திலிங்கத்துக்கு என்மீது எந்த வருத்தமும் இல்லை. என் நடவடிக்கைக்காக எந்த அமைச்சரும் என்னைக் கண்டிக்கவும் இல்லை. எங்களின் செயலைப் பற்றி முதல்வர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

இது குறித்து வைத்திலிங்கம் தரப்பினரிடம் பேசினோம். “அண்ணன் சார்பில் கேட்கப்படும் நேர்மையான கோரிக்கைகளும்கூட செய்து தரப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் பணத்தை எதிர்பார்க்கிறார்கள். இப்படி இருந்தால் கட்சிக்காரர்கள் எப்படி நமக்காக வேலை செய்வார்கள்... இது தொடர்பாக வைத்திலிங்கம் அண்ணன் வெளிப்படை யாகப் பேச முடியாது; ஆனால், கடுமையான கோபத்தில் இருக்கிறார்” என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism