Published:Updated:

சிகிச்சைக்கு உதவிய அமைச்சர்; பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட சிறுமி இப்போது எப்படி இருக்கிறார்?

மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர்
News
மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர்

தவறுதலாக பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட தென்காசி மாவட்ட சிறுமிக்கு, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியில் வசித்து வருகிறார் சீத்தாராஜ். கட்டுமானப் பணியாளர். அவரின் மனைவி பிரேமா. இவர்களுக்கு தனலட்சுமி (11), இசக்கியமாள் (5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்கள்.

கடந்த மார்ச் 16-ம் தேதி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், ஐந்து வயதுச் சிறுமியான இசக்கியம்மாள் வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை தின்பண்டம் என நினைத்துச் சாப்பிட்டு விட்டார். இது குறித்துப் பெற்றோருக்கு எதுவும் தெரியாததால் அவர்கள் எந்த மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை.

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி
உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி

பிளீச்சிங் பவுடர் உட்கொண்ட சிறுமி இசக்கியம்மாள், அடுத்த சில நாள்களுக்குப் பின்னர் சாப்பிட முடியாமலும் தண்ணீர் குடிக்க முடியாமலும் சிரமப்பட்டுள்ளார். அதற்கான காரணம் தெரியாத பெற்றோர் நாட்டு மருந்துகளைக் கொடுத்துச் சரிப்படுத்த முயன்றுள்ளனர். ஒரு கட்டத்தில் தண்ணீர்கூட குடிக்க முடியாமல் போனதால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் தென்காசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக குழந்தையை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் இசக்கியம்மாளுக்கு குணம் ஏற்படவில்லை. உணவு எடுத்துக் கொள்ளாததால் உடல் மெலிந்து காணப்பட்டார். இது குறித்து விகடன் இணையத்தில் `தவறுதலாக பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட சிறுமி; உணவுக்குழாய் பாதிப்பால் உருக்குலைந்த துயரம்!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

சிறுமி இசக்கியம்மாளின் நிலை குறித்த தகவல் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்குச் சென்றது. அதனால் தென்காசி மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு அந்தச் சிறுமியை சென்னையில் உள்ள எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

சிறுமியின் தந்தை சீத்தாராஜ்
சிறுமியின் தந்தை சீத்தாராஜ்

இது குறித்து பேசிய இசக்கியம்மாளின் தந்தை சீத்தாராஜ், ``நான் கட்டட கூலித் தொழிலாளியா வேலை செய்யுறேன். என் மனைவி பீடி சுற்றும் தொழில் செய்றார். கொரோனா ஊரடங்குக் காலத்தில் ரெண்டு பேருக்குமே வேலை இல்லாமப் போனதால் உணவுக்கே சிரமப்பட்டோம். அதனால ரெண்டு பேரும் தென்காசிக்குப் போய் கிடைத்த கூலி வேலை செய்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தச் சமயத்தில், இளைய மகள் இசக்கியம்மாள் பிளீச்சிங் பவுடரை தின்பண்டம்னு நினைச்சு சாப்பிட்டுருச்சு. அது தெரியாம நாங்க இருக்க, அதோட உணவுக் குழாய் சுருங்கிடுச்சு. ஒரு கட்டத்துல தண்ணிகூட குடிக்க முடியாம சிரமப்பட்டுச்சு. அதுக்குப் பிறகுதான் ஆஸ்பத்திரிக்கே போனோம்.

நெல்லையில உள்ள ஆஸ்பத்திரியில, உணவுக் குழாயை விரிவடையச் செய்துவிட்டாங்க. ரெண்டு நாளைக்குப் பழம், பால் சாப்பிட முடிந்த குழந்தையால, மறுபடியும் எதையும் சாப்பிட முடியாத நிலை. பசியால துடிக்கும் குழந்தை பிஸ்கட், பால்னு எல்லாத்தையும் கேட்கும். ஆனா சாப்பிட முடியாமல் தவிக்கிறதைப் பார்த்து நாங்க அழுவுறதைத் தவிர எதுவும் செய்ய முடியல. ரெண்டாவது தடவையும் உணவுக் குழாயை விரிவடையச் செய்துவிட்டு சிகிச்சை கொடுத்தாங்க. அதுக்குப் பிறகும் சரியாகல.

தென்காசி மருத்துவமனையில் (பழைய படம்)
தென்காசி மருத்துவமனையில் (பழைய படம்)

ஆஸ்பத்திரியில இலவச சிகிச்சைன்னாலும் அங்கே தங்கியிருந்து பார்த்துக்கிற அளவுக்கு எங்களுக்கு வசதி இல்ல. அதனால சொந்த ஊருக்கே போயிட்டோம். இசக்கியம்மாள் பற்றி செய்தி வந்த பிறகுதான் அதுக்கு இப்போ மறு வாழ்க்கை கிடைச்சிருக்கு. உடனே டாக்டர்கள் வந்து, மறுபடியும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

ஆஸ்பத்திரிக்கு வந்த கலெக்டர், `உங்க பொண்ணை சென்னையில இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கூட்டிட்டு வருமாறு அமைச்சர் சொல்லியிருக்கார். இனி நீங்க கவலைப்படாதீங்க. உங்க பொண்ணு குணமாயிடுவா... எல்லாம் சரியாயிடும்’னு சொன்னார். அதே மாதிரி சென்னைக்குக் கூட்டிட்டு வந்து நல்ல சிகிச்சை கொடுக்காங்க. இப்போ என் மகளோட எடையும் கூடியிருக்கு. இதுக்கு உதவிய அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும், டாக்டர்களுக்கும் காலம் முழுசும் நானும் குடும்பமும் நன்றிக் கடன்பட்டிருக்கோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் 12-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சிறுமி. சிறுமியை மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இரு வாரங்களாக அங்கு தங்கியிருக்கும் சீத்தாராஜ் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் கவனத்தில் கொண்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற விடுதியில் உள்ள அறையில் அவர்களைத் தங்கிக்கொள்ள அனுமதித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``தவறுதலாக பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறப்பான வகையில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்தச் சிறுமியால் உணவு, தண்ணீர் சாப்பிட முடியவில்லை.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறுமியின் வயிற்றில் துளையிட்டு உணவு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை காரணமாக 6 கிலோ எடையுடன் மருத்துவமனைக்கு வந்த சிறுமி இசக்கியம்மாள், தற்போது இரண்டு கிலோ எடை அதிகரித்துள்ளார். அவர் முழுமையாகக் குணமடையும் வரை இங்கே சிகிச்சை அளிக்கப்படும்.

சிறுமி இசக்கியம்மாளின் பெற்றோர் தங்கியிருக்க என்னுடைய எம்.எல்.ஏ அறையைக் கொடுத்துள்ளேன். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் கொடுத்திருக்கிறேன். சிறந்த சிகிச்சை காரணமாக சிறுமி இசக்கியம்மாள் விரைவில் குணமடைவார்” என்றார், நம்பிக்கையுடன்.

இசக்கியம்மாளுக்காகப் பதறிய நெஞ்சங்களின் பிரார்த்தனைகள் பல. விரைவில் குணம் பெறட்டும் சிறுமி!