Published:Updated:

நெல்லையில் ரூ.15 கோடியில் `பொருநை அருங்காட்சியகம்' அமையும் இடம் தேர்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொருநை அருங்காட்சியகம் அமையவுள்ள இடம்
பொருநை அருங்காட்சியகம் அமையவுள்ள இடம்

நெல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் `பொருநை அருங்காட்சியகம்' அமைய உள்ள இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆண்டு கூடுதல் இடங்களில் அகழாய்வு நடத்தவும் திட்டம்.

தாமிரபரணி ஆற்றங்கரையான சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வில் முதுமக்கள் தாழி, பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கல், இரும்பு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ரெட்டியார்பட்டி மலை மீது ஆட்சியருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு
ரெட்டியார்பட்டி மலை மீது ஆட்சியருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு

பொருநை நதிக்கரை நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்த, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலைப் பகுதி தேர்வு செய்யப்பட்டது.

பொருநை அருங்காட்சியகத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட ரெட்டியார்பட்டி மலைக்கு சபாநாயகர் அப்பாவு , தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் சென்றனர்.

சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தென்னரசு மற்றும் அதிகாரிகள்
சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தென்னரசு மற்றும் அதிகாரிகள்

அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான மாதிரி வரைபடத்தை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”15 கோடி ரூபாய் மதிப்பில், 13 ஏக்கர் பரப்பளவில் பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொற்கை அகழாய்வில் 812 பொருட்களும் ஆதிச்சநல்லூரில் 1020 பொருட்களும் சிவகளை அகழாய்வில் இதுவரை 185 பொருட்களும் கிடைத்துள்ளன. அத்துடன், 106 தாழிகள், வளையல்கள், பாசி மணிகள் சுடுமண் பொம்மைகள், இரும்பால் செய்யப்பட்ட பொருட்கள், நாணயங்கள், பானை ஓடுகள் போன்ற பல்வேறு பொருட்களும் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது

பொருநை அருங்காட்சியகம் அமையவுள்ள இடம் சுற்றுலாத் தளமாக அமையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு

நெல்லையில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்து வருபவர்களும் இந்த இடத்தை சுற்றுலாத் தளமாகப் பயன்படுத்தும் வகையில், அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. இந்த இடத்தில், மூலிகைச் செடிகள் வளர்க்கவும் கலை கலாச்சார பொருட்களை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் மாதிரி, குகையில் வாழ்ந்த மனிதர்கள் மாதிரி என நமது கலை கலாசாரத்தையும் கட்டிடக் கலையையும் பிரதிபலிக்கக்கூடிய பல்வேறு பொருள்களுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். நெல்லை மாநகரின் முக்கிய அடையாளமாக இந்த அருங்காட்சியகம் இருக்கும்.

ரெட்டியார் மலை மீது அமைச்சர் ஆய்வு
ரெட்டியார் மலை மீது அமைச்சர் ஆய்வு

தமிழரின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அருங்காட்சியகம் உருவாக வேண்டும் என்ற முதல்வரின் கனவை நிறைவேற்றும் வகையில் இங்கு திட்டம் செயல்படுத்தப்படும் . இந்த மலையின் உச்சியில் மாநகரின் மொத்த அழகையும் பார்க்கும் வகையில் வியூ பாயின்ட் அமைக்கப்பட இருக்கிறது. பணிகள் அனைத்தும் உடனடியாகத் தொடங்கும்.

தாமிரபரணி நாகரிகம் தொடர்பாக நடக்கும் அகழாய்வில், இந்த ஆண்டு துலுக்கர்பட்டியில் அகழாய்வு நடத்தப்பட இருக்கிறது. அத்துடன், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எங்கெல்லாம் இருக்கிறது அந்த இடங்களில் எல்லாம் அகழாய்வு நடத்தப்படும்.

கலெக்டர் விஷ்ணுவுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு
கலெக்டர் விஷ்ணுவுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்படும் இடத்தில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர். எனவே மாநில அரசு சார்பில் அங்கே கூடுதலாக அருங்காட்சியகம் அமைக்க முடியாது என்பதால் தான் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு