Published:Updated:

அச்சம் வேண்டாம்... எச்சரிக்கையுடன் இருப்போம்!

கொரோனா பாதிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா பாதிப்பு

மத்திய அரசு இதுவரை 78,49,000 டோஸ்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாத் தொற்று சற்றே மட்டுப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தொற்றின் எண்ணிக்கை உயரவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம். இந்த நிலையில்தான், அரசுத்தரப்பில் என்ன செய்யப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர்களும், வேறு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று துறை சார்ந்த நிபுணர்களும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்!
அச்சம் வேண்டாம்... எச்சரிக்கையுடன் இருப்போம்!

“விமானம், கப்பல், ரயில் மூலம் ஆக்சிஜன்!” - மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்

“நாங்கள் ஆட்சிக்கு வந்து 20 நாள்களில் சுமார் 18,000 படுக்கை வசதிகளை உயர்த்தியிருக்கிறோம். முதல் அலையின்போது சென்னையில் கொரோனா கேர் சென்டர்களை மட்டுமே நிறுவினார்கள். நாங்கள் தற்போது ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளை அதிகமாக அமைத்திருக்கிறோம். அலோபதி மட்டுமன்றி சித்தா, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ சிகிச்சைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து 37 சித்தா மையங்களை நிறுவியிருக்கிறோம். இரண்டாம் அலையில் ஒருவரிடமிருந்து 400 பேருக்குப் பரவக்கூடிய வகையில் வைரஸ் வீரியம் பெற்றுள்ளது. உலகளவிலேயே கொரோனாவைத் தடுப்பதற்கு லாக்டெளன் மற்றும் தடுப்பூசி இரண்டுதான் பேருதவியாக உள்ளன. அதனாலேயே, அந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறோம்.

மத்திய அரசு இதுவரை 78,49,000 டோஸ்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது. இவற்றில் 71,52,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் அலையிலேயே சுமார் 6 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்துவிட்டார்கள். இன்னும் கைவசம் இரண்டரை லட்சம் தடுப்பூசிகள் இருக்கின்றன. இதற்கிடையே, 46 கோடி ரூபாய் செலுத்தி 12,85,000 தடுப்பூசிகளை வாங்கியிருக்கிறோம். அதைக்கொண்டுதான் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தைத் திருப்பூரில் முதல்வர் தொடங்கிவைத்தார். ஆக்சிஜனைப் பொறுத்தவரை மத்திய அரசிடம் பேசி மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட இடங்களிலிருந்து விமானம், ரயில், கப்பல் மூலம் கொண்டுவருகிறோம்.

அச்சம் வேண்டாம்... எச்சரிக்கையுடன் இருப்போம்!

ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவதற்குச் சில மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவியது. அதைக் கருத்தில் கொண்டு, ‘ஜீரோ டிலே வார்டு’ என்று 208 படுக்கைகள் அந்த மருத்துவமனைக்கு அர்ப்பணித்திருக்கிறோம். இனி ஆம்புலன்ஸில் வருபவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை, ஜீரோ டிலே வார்டுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து யாருக்கு, என்ன வகையான படுக்கை தேவை என்பதைக் கூறி அட்மிட் செய்வார்கள்.

நம்மைவிட 2 கோடி மக்கள்தொகை குறைவாக உள்ள குஜராத்துக்கு 16.4 சதவிகிதம் அளவுக்குத் தடுப்பூசிகளைக் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு 6.4 சதவிகிதம் அளவுக்குத்தான் கொடுக்கிறது. இதைவைத்து முழுமையாக தடுப்பூசித் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதால்தான், மூன்றரைக் கோடி தடுப்பூசிகளை உலகளாவிய டெண்டர்கள் மூலம் நேரடியாக வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 2,800 மெட்ரிக் டன் சேமித்து வைக்கும் அளவுக்கு கொள்திறன் நம்மிடம் உள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சொந்தமாக ஆக்சிஜன் தயாரித்து, மூன்றாம் அலையை பாதிப்புகள் இல்லாமல் எதிர்கொள்வோம். நாட்டிலேயே முதன்முறையாக வீட்டில் குவாரன்டீனில் இருப்பவர்களுக்கு மருத்துவர்களைக்கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவருகிறோம். இனோவா காரில் ஆம்புலன்ஸ் வசதி செய்துள்ளோம். பிரதமரே இதைப் பாராட்டியிருக்கிறார்.”

அச்சம் வேண்டாம்... எச்சரிக்கையுடன் இருப்போம்!

“டெல்லி போன்று சீரியஸான நிலை இங்கு ஏற்படவில்லை!” - தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்

“கடந்த ஆண்டு இந்த அளவுக்கு மருத்துவ ஆக்சிஜன் தேவை எழவில்லை. ஆனால், தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளால், ஆக்சிஜனின் தேவை அதிகரித்திருக்கிறது. அதனால், தற்போது ஆக்சிஜனைப் பெறுவதை மட்டுமே முழு முதல் பணியாகச் செய்துவருகிறேன். தமிழகத்தில் தற்போது இருக்கும் வசதிகளை வைத்து ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சிகளைச் செய்துவருகிறோம். செயல்படாமல் இருக்கும் ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான வேலைகளையும் செய்துவருகிறோம். திரவ ஆக்சிஜனைக் கொண்டு வருவதற்காக சீனாவிலிருந்து கிரையோஜெனிக் கன்டெய்னர்களை இறக்குமதி செய்கிறோம். முதல்வரின் முயற்சியால் தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன்னிலிருந்து 519 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதால்தான், டெல்லிபோன்ற மாநிலங்களில் ஏற்பட்ட சீரியஸான நிலை இங்கு ஏற்படவில்லை. கொரோனாப் பெருந்தொற்று விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும். அதன் பிறகு, தொழில்துறை வளர்ச்சியில் முழுமையாக கவனம் செலுத்துவேன்.”

அச்சம் வேண்டாம்... எச்சரிக்கையுடன் இருப்போம்!

“குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகளைத் தயார்படுத்துங்கள்!” - ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்

“கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஜூன் இறுதியில் குறைந்துவிடும். அடுத்து, மூன்றாவது அலையையும் நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும். அதற்கு நூறு சதவிகிதம் முகக்கவசம் அணிய வேண்டும். முழுமையான ஊரடங்கை அரசு கைவிடக்கூடாது. இந்தியாவிலிருந்தே உருமாற்றம் அடைந்த B.1.617 கொரோனா வைரஸ் தோன்றியிருக்கிறது. மேற்குவங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால், பொது இடங்களில் கூட்டங்கள், விழாக்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. மூன்றாவது அலையில் அது இன்னும் அதிகமாகலாம். மருத்துவமனைகளில் தற்போதுள்ள பெரியவர்களுக்கான மருத்துவ வசதிகள், உபகரணங்களை குழந்தைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அதனால், இப்போதே குழந்தைகளுக்கு ஏற்றவாறு படுக்கை வசதி, ஐ.சி.யூ கட்டமைப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ஆக்சிஜன் ஆகிய வசதிகளையும் தயார்படுத்த வேண்டும்.

இன்னொரு பக்கம், இரண்டாவது அலையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. அதனால், தடுப்பூசித் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்போவதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எவ்வளவு வேகமாகத் தடுப்பூசி போடுகிறோமோ அந்த அளவுக்கு நாம் மூன்றாவது அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இவை அனைத்தையும் சரியாகக் கடைப்பிடித்தால் கொரோனாவை நாம் தைரியமாக எதிர்கொள்ளலாம்.’’

அச்சம் வேண்டாம்... எச்சரிக்கையுடன் இருப்போம்!

“தைரியமாக இருங்கள், 98 % பேர் குணமடைகிறார்கள்!” - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.ஸ்., சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்

“மாவட்டம்தோறும் பாதிப்பு விகிதத்துக்கு ஏற்றபடி மருத்துவ வசதிகளை உயர்த்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களைக் கூடுதல் எண்ணிக்கையில் நியமிக்க உள்ளோம். தடுப்பூசிகளை அதிக அளவு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 2020, மார்ச் மாதம் 352 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிஜன் சேமிப்புத் திறன், தற்போது 1,200 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 470 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நமது உற்பத்தி அளவு 400 மெட்ரிக் டன் மட்டுமே. மீதமுள்ள ஆக்சிஜன் வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவருவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 17,000-க்கும் அதிகமான புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7,500-க்கும் அதிகமானவை ஆக்சிஜன் படுக்கைகள். ஒவ்வொரு மாவட்டத்திலும் படுக்கைகளின் எண்ணிக்கைகளை உடனடியாக உயர்த்தும்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தற்போது நாளொன்றுக்கு 1.7 லட்சத்துக்கும் அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா முதல் அலை கற்றுக்கொடுத்த பாடம்தான் தற்போது பெருமளவு கைகொடுத்துள்ளது. நம்மிடம் அனைத்துவிதமான மருத்துவக் கட்டமைப்புகளும் தயாராக உள்ளன. அதனால், தற்போது குணமடைந்து திரும்புவோரின் எண்ணிக்கை 98 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. மக்கள் தைரியமாக இருக்க வேண்டும். மற்றொரு அலை வந்தாலும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முன்னெச்சரிக்கையுடன் அனைவரும் ஒன்றுசேர்ந்தால், கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெறலாம்.

அச்சம் வேண்டாம்... எச்சரிக்கையுடன் இருப்போம்!

“பரவல் எண்ணிக்கை உயரவில்லை... இதுவே நல்ல அறிகுறி!” - பிரப்தீப் கவுர், ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநர்

“முதல் அலையின்போது, சென்னையில் மூன்றில் ஒருவருக்கு என்கிற விகிதத்தில் கொரோனா பாதித்தது. தமிழக அரசு மாநிலம் முழுக்க எடுத்த சர்வேயிலும் இதே விகிதம்தான் இருந்தது. பிறகு படிப்படையாகக் குறையவும் ஆரம்பித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் என்று வந்தபோது, மக்கள் முன்தடுப்பு விதிகளைக் கண்டுகொள்ளவில்லை. அதனால், பரவல் அதிகமாகிவிட்டது. கடந்த ஆண்டு நகர்ப்புறங்களில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், இப்போதைய இரண்டாம் அலை கிராமப்புறங்களிலும் தாக்குகிறது. தடுப்பூசி வந்ததும், அதை மக்கள் முழுமையாகப் பயன்படுத்துவதற்குள் இரண்டாவது அலை வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டது.

அச்சம் வேண்டாம்... எச்சரிக்கையுடன் இருப்போம்!

சீனாவில் தென்பட்ட வைரஸைவிட தற்போது உருமாறிய வைரஸின் பரவும் வேகம் மிக அதிகம். இந்திய அளவில் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஒரு மாதம் முன்பே ஆரம்பித்து உச்சத்தைத் தொட்டு, பிறகு இறங்க ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் ஒரு மாதம் தாமதமாகத்தான் பாதிப்பு தெரிந்தது. அதனால், பாதிப்பு உச்சத்தைத் தொட இன்னும் ஒரு மாதம் ஆகும். சென்னையில் தற்போது சுமார் 4,000 கேஸ்கள் வருகின்றன. கடந்த சில நாள்களாக இந்த எண்ணிக்கை பெரிதாக உயரவில்லை; சற்றேறக்குறைய அப்படியே நிற்கிறது. இதுவே நல்ல அறிகுறி. கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினால், அடுத்த இரு வாரங்களில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. குறிப்பாக, கிராமப்புறங்களில் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். சுகர், பிரசர் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறியதே இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம். அறிகுறிகள் தெரிந்தவுடனே அவர்கள் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். தடுப்பூசிகளைப் பற்றிய பயம் தேவையற்றது. இதை மக்கள் புரிந்துகொண்டு முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”