சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலில் நடக்கும் ஆடித்தபசு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். ’அரியும், சிவனும் ஒன்று’ என்பதை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் தபசு காட்சி நடைபெறுவது வழக்கம்.

சங்கரநாராயண சுவாமி கோயிலில் கோமதி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை பக்தர்களிடம் மிகவும் அன்பாகப் பழகக் கூடியது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை கோமதிக்குப் பழம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து ஆசிபெறுவார்கள். சில தினங்களுக்கு முன்பு, மாண்டஸ் புயல் காரணமாக மழைப் பெய்த போது கோமதி யானை உற்சாகமாக மழையில் நனைந்து குளித்தது.
மழையின் காரணமாகக் கோயிலின் மேல் பகுதியில் இருந்து வழிந்த தண்ணீரில் உற்சாகத்துடன் குளித்ததைக் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது பற்றிய தகவல் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ-வான ராஜா கவனத்துக்குச் சென்றுள்ளது. அதனால் யானைக்கு குளிப்பதற்கு ஷவர் அமைத்துக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, யானைக்கு ஷவர் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு அந்தப் பணிகள் முடிவடைந்து. அதில் கோமதி யானை உற்சாகமாகக் குளித்தது. அத்துடன், யானை ஓய்வெடுக்கும் இடத்தில் ராட்சத வடிவிலான மின்விசிறியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினரின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.