Published:Updated:

பாஜக-வுக்குத் தாவிய எம்எல்ஏ-க்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்குப் படையெடுப்பு! - என்ன நடக்கிறது?

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்கு கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் சிலர் மீண்டும் திரிணாமுலில் இணைய மம்தா பானர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தின் தேர்தல் முடிவுகளைவிட இந்தியா மிகவும் எதிர்பார்த்தது மேற்கு வங்காளத்தின் முடிவுகளைத்தான். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மம்தா பானர்ஜியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர பா.ஜ.க., 2019 முதலே திட்டம் போட்டு அதைச் செயல்படுத்தத் தொடங்கியது. அதற்காக திரிணாமுல் பக்கம் நின்ற பலம் வாய்ந்த உறுப்பினர்கள் பலரை தன் பக்கம் இழுத்தது பா.ஜ.க. `எப்படியும், அடுத்து பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றிவிடும்’ என்ற நம்பிக்கையில் கட்சி தாவினர் திரிணாமுல் காங்கிரஸின் முக்கியப் புள்ளிகள் பலர்.

பாஜக-வுக்குத் தாவிய எம்எல்ஏ-க்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்குப் படையெடுப்பு! - என்ன நடக்கிறது?

இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டுமென்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் 38 முறை மேற்கு வங்காளத்துக்குப் பிரசாரத்துக்காகப் படையெடுத்தனர். ``இந்தத் தேர்தலுக்கு பிறகு மம்தா மட்டுமே அந்தக் கட்சியில் இருப்பார்” என்று கிண்டலடித்தார் மோடி. பல்வேறு அஸ்திரங்களைத் தொடுத்தும் இறுதியில் தோல்வியடைந்தது பா.ஜ.க. எதிர்பார்த்ததைவிட அதிகமான இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்!

மேற்கு வங்கம்:கைதான அமைச்சர்களுக்கு வீட்டுக்காவல்! -வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமா வழக்கு?

கொரோனா அச்சுறுத்தல், நாரதா லஞ்ச வீடியோ வழக்கு என ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகள் மேற்கு வங்காளத்தில் சுழன்றுகொண்டிருக்கும் சூழலில், தேர்தலின்போது கட்சி தாவிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் தற்போது மீண்டும் சொந்தக் கட்சி இருக்கும் திசை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், `நாங்கள் தவறு செய்துவிட்டோம். நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம்’ என்ற கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர்.

இது தொடர்பாக, கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ள அந்தக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சோனாலி குஹா, ``பா.ஜ.க-வில் இணைந்தது நான் செய்த தவறுதான். தற்போது திரிணாமுல் கட்சியில் மீண்டும் இணைந்து எனது பணியைத் தொடர விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பளியுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். சோனாலி குஹா திரிணாமுல் கட்சியின் சார்பாக நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இதே போன்று, இவருடன் சேர்ந்து அப்போது பா.ஜ.க-வில் இணைந்த சரளா முர்மு, அமல் ஆச்சர்ஜி ஆகிய இருவரும் மீண்டும் கட்சியில் இணைந்து பணிபுரிய விரும்புகிறோம் என்று மம்தாவிடம் கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளனர். சரளாவுக்கு ஹபிபூர் கிராமசபைத் தேர்தலின்போது கட்சியின் தலைமை அவருக்குப் பதவி வழங்கியும், அவர் அதைப் புறந்தள்ளிவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அதேபோல், அமல் ஆச்சர்ஜியும் இரு முறை திரிணாமுல் காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பின்னரும் தேர்தலின்போது பா.ஜ.க-வுக்குத் தாவினார்.

இது தொடர்பாக பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி-யுமான சவுகதா ராய், ``இவர்களின் திடீர் கட்சி மாறுதல் முடிவால் தேர்தலின்போது நாங்களும், எங்களது ஆதரவாளர்களும் மிகவும் சிரமப்பட்டோம். என்னைப் பொறுத்தவரையில், தற்போதுதான் தேர்தல் முடிந்துள்ளது என்பதால் இவர்கள் மீண்டும் கட்சியில் இணைய ஆறு மாதம் தடை இருக்கும். எனினும், இது குறித்த இறுதி முடிவை முதல்வர் மம்தா அவர்களே எடுப்பார்” என்று தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அவரைத் தொடர்ந்து இது குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான குணல் கோஷ்,``தேர்தலில் எங்களது வெற்றிக்குப் பிறகு இவர்கள் மூன்று பேர் மட்டுமல்லாமல், மேலும் பலர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்துவருகின்றனர். தற்போது முதல்வர் அவர்கள் கொரோனா விவகாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டுவருவதால். இது குறித்த எந்தவொரு முடிவும் தற்போதுவரை எடுக்கப்படவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள மேற்கு வங்காள பா.ஜ.க-வின் தலைவர் திலீப் கோஷ், ``பா.ஜ.க-வில் இணைந்தது தவறென எண்ணியவர்கள் தங்களது எண்ணத்தை மீண்டும் மாற்றிக்கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு