லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: நடமாடும் மளிகைக் கடை!

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன்

- க.மணிகண்டன் பாப்பையன்

மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலில் வளைய வந்து கொண்டிருக்கிறது அந்த நடமாடும் மளிகைக் கடை. ‘என்னது நடமாடும் மளிகைக் கடையா?!’ என்கிறீர்களா? ஆம்... பழைய டி.வி.எஸ். எக்ஸல் 100 வண்டியில்தான் அமைந்திருக்கிறது அந்த மளிகைக் கடை. கடையின் டிரைவர், ஓனர்... 51 வயதாகும் கண்ணன். அவரிடம் கொஞ்சம் பேசுவோமா?!

‘‘திருமுல்லைவாசல்ல பெரிய மளிகைக் கடை வெச்சிருந்தேன். சுனாமி வந்து என் வாழ்க்கையவே திருப்பிப் போட்டுடுச்சு. முதலாளியா இருந்த நான் அந்தப் பேரலையால ரொம்ப நஷ்டமாகிப் போனேன். எங்க அப்பா ஒரு காலத்துல செக்கு வெச்சு எண்ணெய் வியாபாரம் பண்ணிட்டு இருந்தார். அந்தத் தடத்துல நானும், நாட்டு மரச்செக்கெண்ணெயை நேரடியா வாங்கி, டூ வீலர் வண்டியில கொண்டுபோயி விக்க ஆரம்பிச்சேன். நல்லா வியாபாரம் ஆச்சு. ‘இப்படியே வண்டியில பருப்பு, பயறு கொண்டு வந்து வித்தீங்கன்னாலும் வாங்க எங்களுக்கு வசதியா இருக்கும்’னு சில பேரு சொல்ல, சரினு மளிகை சாமான்கள வண்டியில சேர்த்தேன். இப்படித்தான் என் வண்டி நடமாடும் மளிகைக் கடை ஆச்சு.

10 வருஷமா இப்படித்தான் போகுது வாழ்க்கை. வருமானம் ஏதோ வருது. ஆனா, நான் யார்கிட்டயும் கைக்கட்டி நிக்காம, நானே முதலாளி, நானே தொழிலாளினு இருக்குற நிறைவு போதும்னு இருக்கு. இதோ என் வண்டியப் பாருங்க... இதுதான் என் சொத்து, கெத்து. என் வண்டியப் பாக்குற யாரும், ‘அட!’னு ஒரு தடவை திரும்பிப் பார்க்காம போக மாட்டாங்க. மளிகைக் கடைக்கு(!) ஏத்தமாதிரி அதை மாத்தியிருக்கேன்.

வெயிட்டு குறைவான பொருள்கள் முன்னாடியும், வெயிட்டு அதிகமுள்ள பொருள்கள் பின்னாடியும் வெச்சிருக்கேன். நடுவுல இந்தச் சின்ன சீட்டுதான் நமக்கு. இதை பேலன்ஸ் பண்ணுற வித்தை இருக்கே... அதை ஒரு குட்டி சர்க்கஸ்னே சொல்லலாம்ங்க. என்னைத் தவிர வேற யாராலயும் இந்த வண்டியை ஓட்ட முடியாதுல்ல!

வியாபாரத்துக்குப் போகும்போது, அதுக்காக நான் பேசிவெச்சிருக்குற ஒலிப்பதிவை போன்ல போட்டு, அதை சின்ன ஸ்பீக்கர்ல ஒலிக்க விடுவேன். மளிகைப் பொருள்களை 10 ரூபாய் மதிப்புல பாக்கெட்ல பேக் பண்ணி விக்கிறதுதான் நம்ம ஸ்பெஷலு. ‘அண்ணே 10 ரூபாய்க்கு கடுகு தாங்க’, ‘10 ரூபாய்க்கு சீரகம் தாங்க’னு வாங்கிட்டுப் போவாங்க. சில பொருளுக்கு ஏற்ப விலை மாறவும் செய்யும்.

2K kids: நடமாடும் மளிகைக் கடை!

காலையில 7.30 மணிக்கு வியாபாரத்துக்குக் கிளம்பினா, வீடு திரும்ப ராத்திரி 7 மணி ஆகிடும். கிடைக்கிற கொஞ்ச நேரத்துலயும், வண்டியில ஏதாச்சும் பிரச்னைனா சரிசெஞ்சு வைக்கணும். பொதுவா மளிகைப் பொருள்களை 20 கிலோமீட்டர் தூரத்துல போயி வாங்கிட்டு வருவேன். அதையெல்லாம் பாக்கெட் போட நைட்டு 10 மணிக்கு உட்கார்ந்தா, முடிக்க காலையில 3 மணி ஆகிடும். வெயில், மழையில வியாபாரம் ரொம்ப சவாலாதான் இருக்கும். அப்பப்போ உடம்பு நோவும் வரும். முதுகெலும்பு தேய்மானம்தான் இப்போ படுத்துது.

‘என்னடா வாழ்க்கை இது... எதுக்கு இவ்ளோ பாடுபடணும்...’னு நான் எப்பவும் நினைச்சதே இல்ல. காரணம், என் குடும்பம். அவங்க என் உழைப்புக் களைப்பையெல்லாம் தங்க ளோட அன்பால சரி செஞ் சிடுவாங்க.

என் மனைவி சகிலா, மூத்த மகன் மணிகண்டன், இளைய மகன் ஆகாஷ், மகள் கல்பனா சாவ்லானு என் வீடுதான் எனக்கான தெம்பைக் கொடுக்குற கூடு. மூத்தவன் பி.எஸ்ஸி விஷுவல் கம்யூனிகேஷனும், இளையவன் பாலிடெக்னிக் முதல் வருஷமும் படிக்கிறாங்க. பொண்ணு ஒன்பதாவது படிக்குது. அஞ்சாப்புவரை மட்டுமே படிச்ச நான், என் புள்ளைக மூணையும் பட்டதாரி ஆக்கணும்.

வாழ்க்கையில ஏற்ற இறக்கம், ஏமாற்றம், கஷ்ட நஷ்டம், கடன், வலினு எல்லாமும் வரும், போகும். இதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில நாம எவ்ளோ தூரம் போயிருக்கோம் என்கிறதுதான் முக்கியம். நான் போயிட்டே இருக்கேன் என் வண்டியில..!”