Published:Updated:

`தன்னிறைவு பாரதம் முதல் தமிழர்கள் வரை!' - 2020-ம் ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி

மோடி
News
மோடி

கோவையைச் சேர்ந்த காயத்ரி, தனது தந்தையுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்காக சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.

வானொலி மூலம் மாதந்தோறும் பாரதப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடிவருகிறார். கொரோனா, ஊரடங்கு, தன்னிறைவு பாரதம், விவசாய திருத்தச் சட்டம் என 2020-ம் ஆண்டின் கடைசி `மன் கி பாத்’ நிகழ்ச்சியில் (27.12.2020) பேசினார் பிரதமர் மோடி.

மே மாதம் அறிமுகப்படுத்திய `தன்னிறைவு பாரதம்’ - (ஆத்ம நிர்மான் பாரத்) பற்றிய மக்களின் கடிதங்களைப் பற்றி நிகழ்ச்சியில் பிரதமர் முதலில் பேசினார்.

அப்போது அவர், ``வெளிநாட்டு பொம்மைகளை வாங்கிவந்த டெல்லி மக்கள் ஜண்டேவாலான் சந்தையில் தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் உள்நாட்டுத் தயாரிப்பு பொம்மைகளை விரும்பி வாங்குகிறார்கள். வியாபாரிகளும் இது 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமான பொம்மை’ என்று பெருமையாக விற்கிறார்கள். தினசரி நாம் பயன்படுத்தும் பொருள்களில் பல அயல்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்திவருகிறோம். ஆனால் இவற்றுக்கான மாற்றுகள், இந்தியாவிலேயே எளிதாகக் கிடைக்கின்றன. இனி நம் நாட்டு மக்களின் உழைப்பும் வியர்வையும் கலந்திருக்கும் பொருள்களையே வாங்க உறுதி எடுத்துக்கொள்வோம்.

இதனுடன் நமது தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்புகளில் சற்றுக்கூட தரக்குறைவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பூஜ்யம் பாதிப்பு, பூஜ்யம் குறைபாடு என்ற எண்ணத்தோடு உலகத்தரம் வாய்ந்த பொருள்களை இங்கேயே உற்பத்தி செய்ய வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

மோடி
மோடி

புல்வாமா, பட்காவ், கிஷ்த்வாட் போன்ற பகுதிகளில் வளரும் காஷ்மீரி குங்குமப்பூ அதன் மணம், மருத்துவப் பண்பு, சுவை, அடர்ந்த நிறம் ஆகிவற்றுக்காக உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருள். அதற்கு இப்போது புவிசார் குறியீடு அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஏற்றுமதி பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இது தன்னிறைவு பாரதத்துக்குப் பெரிதும் உதவும். விவசாயிகளும் இணையம் மூலம் விற்பனை செய்து லாபமடைந்துவருகின்றனர்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மன் கிபாத்-ல் மிளிர்ந்த தமிழர்கள்!

``விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை என்.கே.ஹேமலதா, ஊரடங்கு காலத்திலும் காணொலி மூலம் மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் எடுத்திருக்கிறார். அதைத் தளத்தில் பதிவிட்டால் மற்றவர்களும் பலன்பெறுவார்கள்’’ என்று குறிப்பிட்டார்.

காயத்ரி
காயத்ரி

``கோவையைச் சேர்ந்த காயத்ரி, தனது தந்தையுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்காக சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். அனைத்து உயிர்களிடத்தும் கருணை காட்டும் மனது படைத்தவர்கள் அவர்கள்’’ என்று பாராட்டியிருக்கிறார் மோடி.

மோடி
மோடி

கற்கும் பேரார்வம் ஏற்படுத்தும் ஆற்றல் பற்றிய ஒரு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 92 வயது முதியவர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி பற்றி குறிப்பிட்டார். 16 ஆன்மிக நூல்களை எழுதிய இவர் தனது 86-வது வயதில் கணிப்பொறி பயன்பாடு கற்று, தனது நூலை கணிப்பொறியில் எழுதி முடித்திருக்கிறார்.

உலகெங்கிலும் சிறுத்தைப்புலியின் வாழிடமும் எண்ணிக்கையும் குறைந்துவரும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மத்தியப் பகுதியிலும் அதன் எண்ணிக்கை 60% அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். கடந்த திங்களன்று அரசு வெளியிட்ட 'இந்தியாவில் சிறுத்தைப்புலியின் நிலை அறிக்கை 2018'-ன்படி 2014-ல் 7,900-ஆக இருந்த சிறுத்தைப்புலி எண்ணிக்கை 2018-ம் ஆண்டின்படி 12,852-ஆக அதிகரித்திருக்கிறது என்பதையும் மோடி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தின் கௌஷாம்பி சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள், பசுக்களைக் குளிரிலிருந்து காக்க வேண்டி, பழைய மற்றும் கிழிந்த கம்பளிகளைக் கொண்டு போர்வையை உருவாக்கிவரும் அன்பைக் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்டின் 6,000 மக்கள்தொகை கொண்ட கோர்வா பழங்குடியைச் சேர்ந்த ஹீராமன் 12 ஆண்டுகள் கடும் உழைப்புக்குப் பிறகு, வழக்கொழிந்து போகும் நிலையிலிருந்த கோர்வா மொழிக்கான அகராதியை ஏற்படுத்தியிருப்பதைப் பாராட்டினார் மோடி.